Monday, April 19, 2010

மஞ்சள் வெயில் மீளத்தந்த நினைவுகள்

காதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்த்னை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாக்வே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு ப்டைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக் ஊழியன் சொல்லி தன் படைப்புகளுக்கு ஒரு ரசிகை இருப்பதாகத் தெரியவருகின்றது. கதை சொல்லியே சொல்வது போல எந்தப் பெண்ணிடமும் பழகி இராத கதிரவனுக்கு, தனக்கு ரசிகை என்று சொல்லப்பட்ட ஜீவிதாவுடன், அவளைப் பற்றிக் கேட்ட மாத்திரத்திலேயே காதல் வருகின்றது.

பொதுவாக எதிர்ப் பாலினரிடம் பழகுவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலும் எதிர்ப்பாலினர் பற்றிய அறிமுகம் உடனேயே காதலாகாவே மாறிவிடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இடத்தில் கதிரவன் ஜீவிதாவை முதன் முதலில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் கொள்வதை யூமா அழகாகக் காட்டுகிறார். இரவு வேளையிலும், தன்னிடம் இருக்கின்ற ஆகச்சிறந்த சட்டையை தோய்த்து, அணிந்து செல்லும் கதிரவன் லிப்டில் தன் முகத்தைப் பார்த்து கைக்குட்டையால் துடைத்து விடுதல் போன்றவை பெரும்பாலும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விரும்பமான பெண்ணை / ஆணை முதன் முதலில் சந்திக்கின்றபோது நாம் செய்தவையாகவே இருக்கும். யூமா வாசுகியின் வார்த்தையிலேயே சொன்னால்”லிப்ட் கண்ணாடியில் வெளிறித் தெரிந்தது என் முகம். கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துக் கொண்டேன். முகத் தோலைக் கிழித்துவிடுவது போல அவ்வளாவு அழுத்தமாக. மூக்குத் துவாரங்களின், கண்களின் சுத்தத்தையும் நிச்சயப்படுத்தியாயிற்று. கலைந்த சிகை. சோர்வான- வெயிலடிபட்ட, பீதியில் முக்கியெடுத்த முகம். .................. கண்களை நம்பலாம். அது ஏதாவது சூசகப்படுத்திவிடும் அவளிடம். நேற்றிரவு அகாலத்தில் துவைத்து பகலில் இஸ்திரி செய்த உடை தோற்றத்தில் கொஞ்சம் பொலிவு கூட்டும். சந்தேகத்துடன் என் கண்ணாடி விம்பத்தையே உற்றுப் பார்த்தேன். காரியம் ஒரு இளம்பெண் சம்பந்தப்பட்டாயிருக்கிறது. அவள் அழகியாக இருக்கலாம் ஒரு வேளை”

இங்கே அழகியாக இருக்கலாம் ஒரு வேளை என்பது முக்கியமானது. ஒரு பெண் எப்படி இருப்பாள் என்றோ, அவளைப் பற்றிய வேறு எந்த விபரங்களோ தெரியாமல் அவள் தன்னைப் பற்றி விசாரித்தாள் என்பதே அவ்ள் மீது காதல் கொள்ள போதுமானதாயிருக்கிறது. அப்படி இருந்தும் கூட, கதிரவனால அன்றைய தினம் ஜீவிதா வந்த போது அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவளை கவனியாதது போல இருந்து விடுகிறான். இது ஒன்றும் ஈகோ கலந்து செய்யப்படுவதில்லை. அவனால் அவனை முழுக்க முழுக்க நிரப்பி இருக்கும் கூச்ச சுபாவத்தால் அவளிடம் பேச முடியவில்லை. கதிரவன் தன்னிடம் இயல்பாகவே இருக்கின்ற கூச்ச சுபாவத்தால் தன் காதலுக்கு தூதாக அவன் சக ஊழியனான டேவிட்டையும்,அவன் காதலி ஆனந்தியையுமே நாடுகின்றான். இதற்கு ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணால்தான் புரிந்துகொள்ள அல்லது புரிய வைக்க முடியும் என்கிற அவன் எண்ணம் காரணம். தன் காதல் பற்றிய பகிர்தல்களை பெரும்பாலான இளைஞர்கள் போலவே மதுவுடன் சேர்ந்த பொழுதுகளில் தன் நண்பர்களுடன் நிகழ்திக்கொண்டு போகிறான் கதிரவன். சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அவன் எல்லா எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கேற்றவர்களாக இருக்கின்றார்கள். சொல்லப் போனால் குடும்பத்தை விட்டு தொழில் நிமித்தமோ அல்லது புலம் பெயர்ந்தோ இருப்பவர்கள் எல்லாருக்குமே இது போன்ற சந்திரன்களும், பாலகிருஷ்ணன்களும் டேவிட்டுகளும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.

கதையின் முடிவு அல்லது கடிதத்தின் முடிவு (முழுப் புத்தகமுமே ஜீவிதாவுடனான தன் நினைவுகளை மீட்டி ஜீவுதாவுக்கே கதிரவன் எழுதும் ஒரு கடிதமாக விரிந்து செல்கின்றது) கதிரவன் காதலை மறுத்து ஜீவிதா புதிய வேலை கிடைத்து அமெரிக்கா செல்வதுடன் முடிகின்றது. தன் எல்லா ஆற்றாமைகளையும் தாண்டி, ஜீவிதாவின் மேலான காதலை ஒவ்வொரு எழுத்திலும் நிறைத்து கதிரவன் எழுதுகிறான் “ஜீவிதா, நீங்கள் கண்காணா தொலைவில் - எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறீர்கள். நான் பிரார்த்திக்கிறேன். உங்களின் எல்லா நலன்களுக்காவும் இறைஞ்சுகிறேன். என்றென்றும் மகிழ்ச்சியும் அமைதியும் உங்களைச் சூழட்டும். மிகவும் அபூர்வமான பெண் நீங்கள். என் கவிதைகள் உங்களைப் பாடுகின்றன. ........ உங்களின் பரிபூர்ண வாழ்வைத்தவிர வேறு எதையும் இப்பொது நான் எதிர்பார்க்கவில்லை. இதில் உங்களுக்குப் பிடிக்காத வாசகங்கள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களை இன்னும் விரும்புகிறேன். வேறெதை எதையோ எழுதினாலும் இதுதான் சாரம். நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னை நேசிக்க வேண்டிய அவசியம் இப்பொது இல்லை. எதுவாயினும் உங்களுக்கு என் நன்றிகள், நன்றிகள். .................”காதலின் பிரிவில் இருந்து மீளமுடியாமல் தவிப்பவனின் அல்லது இன்னும் மீளாதவனின் குரல் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது யூமாவின் வரிகள்.


2

புத்தகத்தின் எல்லா வரிகளும் காதல் கலந்தே எழுதப்பட்டிருக்கின்றன. காதல் பற்றிய பேச்சுக்களே அதிகம் நிறைந்திருந்த பதின்ம வயதின் தொடக்கங்களில் வாசித்த மு. மேத்தாவின் கவிதைகளும் (குறிப்பாக நடந்த நாடகங்கள்) பின்னர் தபூ சங்கரின் கவிதைகளும் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகளும் பெயர் மறந்து போன கலீல் ஜிப்ரானின் இன்னுமொரு புத்தகமும் காதலைப் பற்றி மட்டுமே பேசி இருந்தன. அந்தப் புத்தகங்களின் பெரும்பாலான எல்லா வரிகளையுமே அடிக்கோடிட்டு வைத்திருந்தது ஞாபகம் இருக்கின்றது. முறிந்த சிறகுகளில் வரும் “பெய்ரூட் நகரத்து என் பழைய கால நண்பர்களே / அந்தப் பைன் மரக்காடுகளில் என் செல்மாவின் கல்லறையைக் / கடக்க நேரும் போதெல்லாம் / மெல்லவே நடந்து / மௌனமாய்ச் செல்லுங்கள் / உங்கள் காலடி ஓசையில் / கல்லறையில் தூங்கும் / என் காதலியின் உறக்கம் / கலைந்து விடக்கூடும்.” என்ற வரிகளை எத்தனையோ இடங்களில் குறித்து வைக்கிறேன். என் காதல் பற்றி நண்பர்களுடன் கடிதங்களில் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் தவறாமல் ஏதாவது வரிகளைத் மேற்கோள் காட்டியுமிருக்கிறேன். இந்தக் கதையில் ஜீவிதாவை ஆனந்தியின் மூலமாகக் கதிரவன் அணுகுவது போலவே என் மீது நம்பிக்கை வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவும், என் காதலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் என் அக்காவிடம் என் காதலைச் சொல்லி, அவரையே என் காதலியிடம் அறிமுகப்படுத்தி காதலுக்கு வலு சேர்த்திருக்கிறேன். நாளொன்றின் முதற்சொல்லை அவளுக்குப் பரிசளிக்கவேண்டும் என்பதற்காக அவளுடன் பேசும் வரை, ஒரு நாளின் எந்த மணித்தியாலமாக அது இருந்தாலும் மௌன விரதம் பூண்டிருக்கிறேன். எலலாக் காதலர்களையும் போலவே

say I'm weary, say I'm sad;
Say that health and wealth have missed me;
Say I'm growing old, but add-
Jenny kissed me

என்ற வரிகள் எனக்கும் பிடித்தே இருக்க்கின்றன. ”Rose is a rose is a rose is a rose." என்று சொல்வது போல காதலைக் காதல் என்றும் சொல்லலாம் என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் வரிகளும் நிறைய தடவைகள் என்னால் வாழ்த்து மடல்களில் எழுதித் தள்ளப்பட்டிருக்கின்றன.

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்
காதலைக் காதல் என்றும் சொல்லலாம்


இதை ஏன் இங்கே செல்கிறேன் என்றால் அறிவு பூர்வமாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்த நூல் பற்றியும், இதில் காதல் என்ற பெயரில் செய்யப்படும் முட்டாள்த்தனங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பக்கூடும். ஆனால் அந்த முட்டாள்த்தனங்களும் சேர்ந்தது தானே காதல். காதல் பற்றிய நினைவுகளை அல்லது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ் சமூகம் இடம் தராதது தான் நண்பர்களையும், திரைப்படங்களையும் எமக்கு காதலின் தோழர்களாகக் காட்டுகின்றது. இந்த நிலைப்பாடு காதல் இல்லாமல் தமிழ் திரைப்படமே எடுக்க முடியாது என்ற நிலைப்பாடை உருவாக்கிய அதே வேளை இதில் உள்ள முரண் நகை என்னவென்றால் அப்படி உருவான் பெரும்பாலான திரைப்படங்கள் காதல் பற்றிய மோச்மான் பிரதிகளாகவோ (தியாகம் போன்ற பம்மாத்துகள் மற்றும் காதலுக்காக நாக்கை வெட்டல் போன்ற சைக்கோத் தனங்கள் உள்ளிட்ட விடயங்கள் ) அல்லது ஆணாதிக்கத்தின் கூறுகளாகவோ அமைந்து போனது என்றே சொல்லவேண்டும் (ரஜினி, விஜய், சிம்பு, விஜயகாந்த், அண்மைக்காலமாக விஷால் போன்றவர்கள் அவர்கள் படங்களில் வரும் நாயகியரிடம் பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றி சொல்லும் உளறல்கள்.) அண்மையில் வெளியாகி புலம்பெயர் நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்பு 2, 3 தடவைகள் தன் காதலியாக் இருந்து பின் மனைவி ஆகுபவரிடம் முதற்காதல் பற்றிய நினைவுகள் எப்பவும் மனதில் இருக்கும், அதை மறக்க முடியாது என்று திருவாய் மலர்கிறார். ஒரு ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்குமே இது உண்மையும் கூட. அப்படி இருக்கின்ற போது ஏதாவ்து ஒரு தமிழ் சினிமாவில் ஒரு பெண் தன் கணவனிடம் என்ன் இருந்தாலும் முதற் காதல் போல வராது, அதை என்னால் மறக்க முடியாது என்று சொல்வாளாக இருந்தால் எபப்டி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இதை நினைத்துப் பார்க்கவே முடியாது ஏனென்றால் மீளவே முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தில் மூழ்கி இருக்கும் தமிழ் சினிமாவில் அது போன்ற படங்கள் வெளிவருவதற்கான எந்த அறிகுறிகாளுமே இல்லை. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கண்டவுடனேயே அவளின் சில குண இயல்புகளால் அவனைக் காதலிக்கின்றாள். அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்காத வெறித்தனமான காதல் அவளுடையது. அவளோ வேறு ஒருத்தனைக் காதலித்துக் கல்யாணமும் செய்து விடுகிறாள். அவளின் நினைவாகவே மணம் முடிக்காமல் 20 வருடங்கள் தனிமையில் இருக்கும் அவன் அதன் பின்னர் வெளிப்பட்டு சமூகத்தில் அவளுக்கு இருக்கும் மதிப்புக்கு எதிராகப் போர் தொடுத்து இறுதியில் மாய்கிறான். இப்படி ஒரு கதையில் நாயகானாக தமிழ் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரங்கள் எவர் நடித்திருந்தாலும் பட்ம் ஒரு காவியம் என்று கொண்டாடப்பட்டு இருக்கும். ஆனால், இங்கே நான் அவன் என்று சொன்ன எல்லாவற்றையும் ஒரு பெண் ஒரு திரைப்படத்தில் செய்தார். பெண் செய்ததாக சொன்ன எல்லாவற்றையும் ஒரு ஆண் செய்தார். அந்தப் பெண் ரம்யா கிருஷ்ணன், ஆண் ரஜினி. படம் வரலாறு காணாத பெரு வெற்றியை பெற்றபோதும் அந்தப் பெண் வில்லியாக மட்டுமே பார்க்கப்பட்டார். இது போன்ற ஒரு மோசமான சூழலில் வாழ்ந்து வரும் எம்மில் ஒருவரால் இந்தக் கதையைக் கூட ஒரு பெண் எழுதி இருந்தால் நாம் எத்தனை தூரம் ஏற்றுக் கொண்டிருப்போம் என்ற கேள்வியை இலகுவாக எழுப்பிவிட முடியும். ஒரு போதும் ஏற்றுக் கொண்டிருக மாட்டோம்தான், ஆனால் அந்த ஒரு காரணத்துக்காக இந்தப் பிரதியை ஒருபோதும் நிராகரித்துவிடமுடியாது. தோர்றுப் போன தன் காதல் பற்றிச் சொல்ல அல்லது படைப்பாக ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவில்லை என்பது எவ்வளவு நிஜமோ, அதே அளவுக்கு தோற்றுப் போன ஒரு காதலின் வலி ஆணையும் இந்தளவுக்கு பாதிக்கும் என்பதும் நிஜம். அதனால் இந்தப் பிரதி பேசும் வலியும் நிஜம்




நன்றிகள் : இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டு, இதை வாசிக்குமாறு தூண்டிய பதிவர் “தமிழன் கறுப்பிக்கு

Wednesday, April 7, 2010

மூன்றாம் சிலுவை - உமா வரதராஜன் சுமக்க வேண்டிய சிலுவை

உமா வரதாரஜனின் “அரசனின் வருகை” சிறு கதையை தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளில் ஒன்றென்று ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் குறிப்பிட்டிருந்ததை கவனித்து இருக்கிறேன். பல இடங்களில் தேடிய போதும் அது எனக்கு கிடைக்கவில்லை. பத்மனாப அய்யர் தொகுத்து தமிழர் தகவல் வெளியீடாக வந்த ஈழத்து சிறுகதைகள் தொகுப்பு ஒன்றிலும் இந்தச் சிறு கதை இடம்பெற்றிருப்பதாக அறிந்த போதும் அதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற காரணங்களால் அண்மையில் காலம் செல்வம் ஒருங்கமைத்திருந்த ஈழத்து இலக்கியம் பற்றிய கலந்துரையாடலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் காலச்சுவடு வெளியிட்ட உமா வரதராஜனின், மூன்றாம் சிலுவை நாவலை வாங்கிய உடனேயே வாசிக்கத் தொடங்கினேன். வேகமும், சுவாரஸ்யமும் நிறைந்த அவரது மொழி நடை வாசிப்பின்பத்தை தந்த அதே வேளை, நாவலில் பேசப்படும் விடயங்களும், நாவல் எழுதப்பட்ட்தன் பின்னால் இருக்கும் வன்ம்மும், எதையும் பணத்தால் எடை போடும் திமிரும், ஆணாதிக்க அலட்டலும் வெறுப்புணர்வையே மனதெங்கும் நிறைத்துச் சென்றிருக்கிறது. போதாததற்கு இது உண்மைக்கதை வேறாம். நாவலின் முதல் அத்தியாயத்தில் லண்டனில் இருந்து தொலைபேசும் அமர்தீப் என்பவன் விஜயராகவனின் ஆண்குறியை அறுத்தெறிய வேண்டும் என்று ஆவசப்படுகிறான். அவன் அதை செய்தால் நிச்சயம் நிறையப் பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்றே தோன்றுகிறது.


ஏற்கனவே இரண்டு தடவைகள் திருமணமாகி, அவர்கள் இருவரையும் தனித் தனி குடியமர்த்தி வாழும் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான 52 வயது விஜயராகவன், எட்டு ஆண்டுகள் தன்னுடன் பழகி, பல தடவைகள் உடலுறவும் கொண்ட 30 வயது ஜூலி, தன்னை விட்டு நீங்கி திருமணமாகி லண்டன் செல்வதை உருகி உருகி சொல்கிறார். இந்தப் பிரிவைப் பற்றி சொல்லும்போது மூன்றாம் பிறை திரைப்பட்த்தின் இறுதிக் காட்சியை வேறு உதாரணம் காட்டுகிறார். தாங்குமா இது... ஏற்கனவே பாலு மகேந்திரா இதய வியாதிக்காரர். இதை எல்லா வாசித்தால் நிச்சயம் அந்த வியாதி கூடத்தான் செய்யும்.


கதையில் அடிக்கடி நான் உன்மேல் அன்பு வைத்தேன், அன்பு வைத்தேன் என்றூ புலம்பித் தள்ளுகிறார் விஜயராகவன். நாவலில் ஜூலியும் இவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம், அதிலும் குறிப்பாக இருவருக்கும் பிணக்கு வந்து உறவு முறிந்திருக்கிற இறுதி அத்தியாயங்கள் தவிர ஏனைய எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் காமம் கலந்ததாகவோ அல்லது காமத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகதான் இருக்கின்றது. முழுக்க முழுக்க காமம் சார்ந்த இந்த உறவைக் காவியக் காதல் என்கிற அளவுக்கு புலம்பித் தள்ளுகிறார் கதை சொல்லி. இந்தக் கதாபாத்திரத்தின் காமவெறியை கதையில் வருகின்ற ஒரு சம்பவத்தில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஜூலி விஜயராகவனுடனான தொடர்புகளை தவிர்த்து வருகிறாள். அவளது தாய், தமக்கை வீட்டுக் சென்றிருந்த போது ஒருநாள் விஜயராகவன் ஜூலியை தன்னுடன் அந்த நாளை கழிக்குமாறு கேட்கிறார். அவள் தான் தேவாலயம் செல்லவேண்டு என்று சொல்லி மறுக்கிறாள். அப்படி இருந்தும் விஜயராகவன் அவள் வீடு தேடி செல்கிறார். அவளும் தேவாலயம் செல்லவில்லை. ஜூலி தேனீர் தயாரிக்க சமையலறை செல்லும்போது அவளின் பின்னால் சென்று கட்டி அணைக்கிறார். அவள், வேணாம், எனக்கு பீரியட் என்கிறாள். அதன் பிறகு நடந்த்தை அவரே சொல்கிறார்.

“நாகரிகமும், விவஸ்தையுமற்று என்னுடைய கைகள் அவள் இறுக்கி வைத்திருந்த தொடைகளை விலக்கின.

பொய்... பொய் சொல்கிறாய்...
அவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தினேன்” (பக்கம் 93)


இவர் சொல்கிற அளவுக்கு அன்பு வைத்திருந்த பெண் திடீரென்று விலகத் தொடங்கினால் பொதுவாக என்ன செய்வார்கள். அவளிடம் மனம் விட்டுப் பேசி என்ன பிரச்சனை என்று அறியத்தானே முயல்வர். மேற்சொன்ன சந்தர்ப்பத்திலும் தொடக்கத்தில் அவர் ஜூலியுடன் கதைக்க முயல்கிறார், ஆனால் ஜூலி உரையாடலுக்கான எந்த ஒரு தயார் நிலையிலும் இருக்கவில்லை. அப்படி இருக்கின்றபோது யாராவது இப்படி பலவந்தமாக உறவு கொள்வார்களா?. ஜூலியின் மீதான இவரது எல்லா விழைவுகளுமே பாலியல் நோக்கில், காம்ம் தீர்க்கும் தேவையுடன் மட்டுமே இருக்கின்றது. தவிர கதையின் போக்கில் தனக்கும் ஜூலிக்குமான் வயது இடைவெளி தம் காதலைக் குறைத்து விடுமோ என்கிற தன் கவலையை நிறைய இடங்களில் வெளிப்படுத்துகிற கதை சொல்லி, அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளுடனான ஒவ்வொரு புணர்ச்சியையும் அவள் மனத்தில் கல்வெட்டுகளாக அமைத்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

“அவனுக்கும் அவளுக்கும் 22 வருடங்கள் இடைவெளி இருந்தது. தன்னை அவள் குறைத்து மதிப்பிட்த் தன் வயது ஒரு காரணமாகிவிடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். அவளைப் பொறுத்தவரையில் அவளில் கரைபவனாகவும், அவளை ஆழ்பவனாகவும், அவள் முன் திடகாத்திரமானவனாகவும், உச்ச இனபத்துக்கு அவளை அழைத்துச் செல்பவனாகவும், அவளுடனான ஒவ்வொரு புணார்ச்சியையும் அவள் மனத்தில் கல்வெட்டுகளாக அமைத்து விடுபவனாகவும் இருக்க விரும்பினான்” பக்கம் 34-35.


இந்த அளவுக்கு காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு உறவை தேடுபவர், அந்த உறவு பிரியும்போது புலம்புவது ஆத்திரமூட்ட்த்தான் செய்கின்றது. ஒரு பெண்ணை சக மனுஷியாக, வாழ்க்கைப் பயணத்தில் வரும் சக பயணியாக, நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்டவளாகப் பார்க்காமல் காமம் தீர்க்கும் ஒரே நோக்குடனேயே பார்க்கும் ஒருவரை மனவியல் ரீதியாக தீவிரமாக ஆராயவேண்டியும் உள்ளது. இது தவிர்த்தும் இந்தக் கதாபாத்திரத்துக்கு தன் வயது காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ தன் பாலியல் வல்லமை குறித்த நிறைய தாழ்வு மனப்பான்மைகள் இருக்கின்றன. அதுதான் கதையில் தன் ஆண்குறி அளவு குறித்த புலம்பல்களாகவும் (”அவள் கொல்லன் உலைக்களத்து நெருப்பாகத் தணல் விட்டுக் கொண்டிருந்தாள். மரக்கிளையொன்றைக் கைப்பற்றிய கிறக்கத்துடன் “எவ்வளவு பெரியது” என்றாள். பெரியதென்றால் உனக்கு வசதியாகப் பென்சிலைப்போலச்சீவிக்கொள் என்றான் அவன்” – பக்கம் 33) உடலுறவின் பின்னர் தான் ஜெயித்தது போன்ற மமதையுமாக வெளிப்படுகின்றது.

தவிர, கதையின் ஆரம்பத்தில் அவளை ஏற்கனவே ஜெயச்சந்திரன் என்ற ஒருவர் திருமணம் செய்யவிரும்பி ஜூலியிடம் விஜயராகவனை தூது அனுப்புகிறார். ஜூலியும் திருமணத்துக்கு சம்மதித்து விடுகிறாள். அப்படி இருந்தும் விஜயராகவன் ஜெயச்சந்திரனிடம் ஜூலிக்க்கு இந்த திருமணத்தில் சம்மதமில்லை என்று கூறிவிடுகிறார். மொத்தத்தில் அவளுக்கு அமைய இருந்த ஒரு நல்ல வாழ்வைக் கூட தன் சுயநலத்தால் அல்லது காம மிகுதியால் குலைத்தவராகவே விஜயராகவன் தெரிகிறார். கதை சொல்லப்படும் விதத்தில் இந்த இடத்தில் சிறு குழப்பம் வருகின்றது. ஜூலியின் திருமணத்துக்கான வாய்ப்பை விஜயராகவன் குழப்பிய பின்னரும் கூட, ஜூலிக்கு ஜெயச்சந்திரனுடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அப்படி இருந்தும் அவள் ஏனோ விஜயராகவன் கூறியது பொய் என்று கூற முற்படவில்லை. அதில் இருந்து சிலவேளை திருமணத்துக்கு அப்பாற்பட்டும் விஜயராகவனுடன் ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள ஜூலி விருப்பமாகவே இருந்தாள் என்று கூறிக்கொள்ளமுடியும். மேலும், “உன்னை எப்போது எனக்கு முழுதாகத் தரப்போகிறாய்” என்று விஜயராகவன் கேட்கும்போது ஜூலி ”நான் எப்போது இல்லை என்று கூறினேன்” என்று கூறுகிறாளே தவிர, உறவை ஒரு போதும் மறுக்கவில்லை. எனவே, ஜூலி ஒரு அப்பாவி, அவளை விஜயராகவன் ஏமாற்றினார் என்று கூறுவதும் ஏற்க முடியாதது. ஆனாலும் சகிக்கவே முடியாத அளவுக்கு ஒற்றைப் படையாகவே எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் ஜூலி தரப்பினாலான எந்த விளக்கங்களும் தரப்படவும் இல்லை, அவளுக்கு சார்பான எந்த ஒரு விடயமும் சொல்லப்படவும் இல்லை. நாவலில், சொல்லபட்ட விடயங்களை வைத்தும், வெளிப்படையாக தெரிவதில் இருந்தும், துளி கூட காதலே இல்லாத காமத்தால் நிறைக்கப்பட்ட திருமணத்துக்கு அப்பாற்பட்ட, ஒரு உறவுக்கு ஜூலியும் விஜயராகவனும் த்த்தம் தேவைகளின் நிமித்தம் இணங்கி இருந்தனர் என்றும், ஒரு நிலையான வாழ்வை வேண்டியோ அல்லது திருமண பந்தம் மேல் இருக்கின்ற ஆர்வத்தாலோ (ஜுலியின் தமக்கையின் திருமணவிழாவில் ஜூலியின் தோற்றம் பற்றி கதை சொல்லி சொல்லுகிறார் ”சரிகை வேலைப்பாடுகள் கொண்ட கறுப்புப் புடவை அணிந்திருந்த ஜூலி மேலும் ஒல்லியாகத் தெரிந்தாள். எதிலும் பற்றற்றவள் போல் பேசும், தோன்றும் அவள் தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட அக்கறை எனக்கு வியப்பளித்தது. தன் மணக் கோலத்தையும் இவ்வேளையில் அவள் கற்பனை பண்ணிக்கொண்டாள் போலும்.”) ஜூலி விஜயராகவனை பிரிந்து சென்றபோது (ஜூலி தொடர்ச்சியாக விஜயராகவனை தன்னை திருமணம் செய்யும்படி கேட்கின்ற போதும் அவர் அதற்கு மறுத்தே வருகின்றார்) விஜயராகவன் தன் அன்பை உதாசீனம் செய்துவிட்டு அவள் தன்னை விட்டுப்போய் விட்டாள் என்று ஓயாது புலம்புகிறார். அவரது புலம்பல் முழுவதும் இருவரும் சேர்ந்து பாவம் செய்தோம், ஆனால் தான் மட்டுமே தண்டிக்கப்படுகிறேன் என்ற ஒற்றை நியாயத்தை மட்டும் வைத்துப் பலகீனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறது. அவரது வாதத்தை ஏற்றுக் கதைத்தால் கூட, முதலில் தன்னைப் பயன்படுத்திவிட்டு இப்போது வேறு ஒருவனிடம் சென்று விட்டாள் என்று ஜூலியை நோக்கி புலம்புபவர் தான் கூட தன் முன்னைய இரண்டு மனைவியரிடமும் இதையேதான் செய்தார் என்பதை சற்று யோசிக்கவேண்டும்.

கனடாவில் இந்தப் புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றபோது அதில் பேசிய ஒருவர் பெண்ணியம் பேசுபவர்களும், பெண்கள் அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்காக உமா வரதராஜனை எதிர்த்துப் போராட்டம் நட்த்தவேண்டும் என்றார். அது போன்ற போராட்டங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் இந்த நாவல் கூறும் விடயங்கள் பற்றிய அலசல்கள் விரிவாக நடைபெறவேண்டும். தவிர இந்த நாவலை எழுத எல்லா வகையிலும் உதவியவர் என்றூ ஒரு பெண் கவிஞர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அந்தப் பெண் கவிஞருக்கு இந்த நாவல் பற்றி இருந்த அல்லது இருக்கின்ற அபிப்பிராயம் என்ன என்பதும் அறியவேண்டியதே.


-2-

நாவலின் கருவைத் தவிர்த்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் சலிப்பின்றி, பாய்ச்சலுடன் செல்கின்ற உமா வரதராஜனின் எழுத்து நடை. எஸ்.பொ, செங்கை ஆழியான், அ. முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, சுகிர்தராஜா, சாந்தன் ஷோபாசக்தி, உமாவரதராஜன் என்று அங்கதமாய் கதை சொல்லும் ஆற்றல் நிறைய ஈழத்து எழுத்தாளர்களுக்கு சரளமாகக் கைவருகின்றது. உதாரணமாய் முதலாவது அத்தியாயத்தில் கதை சொல்லிக்கும் லண்டனில் இருந்து தொலைபேசியில் பேசியவருக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்து முடிந்த பின்னர் அது பற்றிக் கூறுகிறார் “மேல் மாடியில் அவருடன் நான் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலின் போது அதிகளவு தூஷனை வார்த்தைகளைப் பயன்படுத்தியது அவரா நானா என இன்றைக்கும் அனுமானிக்க முடியாமலுள்ளது. அந்தக் கொதிப்பான சூழ்நிலையிலும் என்னை இரு விடயங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒன்று தூஷனை வார்த்தைகளை ஓசை நயத்துடன் பிரயோகிப்பதில் நான் பெற்றிருந்த தேர்ச்சி. மற்றது லண்டன் சென்று இத்தனை வருடங்கள் ஆகியும் அவன் தன் தாய்மொழியாம் தமிழிலுள்ள தூஷனை வார்த்தைகளை மறக்காமல் வைத்து உரிய வேளையில் பயன்படுத்தியமை.” அது போல பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜூலியுடான தன் பிரிவு பற்றி விஜயராகவன் சோமசுந்தரம் என்ற மூத்த கவிஞரிடம் (இப்படிக் கூறினால் சோமசுந்தரம் மூத்த கவிஞரும் ________ கவிஞரும் என்பாராம்) கூறும்போது அவர் தானும் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட தன் பழைய காதலியை நினைத்து உருகி உருகி ஒரு கவிதை எழுதியதாய்க் குறிப்பிடுவார். அப்போது “அவள் அந்தக் கவிதையைப் படித்துவிடக்கூடாது என்று கடவுளை மனதிற்குள் வேண்டினேன். அவள் படித்தால் கன்னியாஸ்திரி கோலத்தையும் கைவிட்டு விட்டு கடலில் பாய்ந்துவிடக்கூடும்” என்று விஜயராகவ்ன் நினைத்துக்கொள்வார். நாவலின் அறிமுகப் பக்கங்களில் உமா வரதராஜன் சொல்வது போல நெடு துயில் கொண்டிருந்த ஒருவர் துயில் கலைந்து இத்தனை சரளமாக எழுதுவது ஆச்சரியம் தான். ஆனால் அந்த எழுத்து வன்ம்மும், திமிரும் தாங்கி சுய புலம்பல் என்ற மோசடிக்குப் பயன்பட்டிருப்பது வருத்ததுக்குரியது.