Thursday, April 30, 2009

கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும்



“மனுஷன் அப்படியில்லை. அவனுக்கு ஒன்றின் மீதும் நம்பிக்கையில்லை. வல்லம் ஒரு ஜீவனுள்ள சாட்சியம். அது பேசாது. அது சொல்லுகிற கதைகளை கேட்டால் அந்தப் பறையக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வல்லங்களுக்கும் எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் தங்கள் எஜமானர்களுடைய நன்மையைக்கருதி பேசாமல் இருக்கின்றன. கடல் காற்றில் புதிய லாஞ்சிகள் கூட துருப்பிடித்துவிடுகிறதுண்டு. இந்த மரம் துருப்பிடிக்கிறதேயில்லை. அது கடலுக்கு விசுவாசமாயிருக்கின்றது. வல்லங்களைக் கடல் அலைகள் கவர்ந்து கொண்டதில்லை. சிலுவைப் பாறைச்சுழலில் வல்லங்கள் கவிழ்ந்தால் வல்லங்கள் கரையில் ஒதுங்கிவிடுகின்றன. அந்தச் சுழலில் கடல் மோகினி வாசம் செய்கின்றாள். அவள் மனுஷருடைய ரத்தத்தை விரும்புகிறவள். ஆனால் இந்தப் பறையர்களுக்கு அவளைப் பற்றிய பயம் மறாட்ன்ஹுவிடுகிறதும் நிஜம்தான். கடலோடு போட்டி போட்டு மனுஷன் ஜெயித்ததில்லை. இதை உணராமல் லாஞ்சிகள் மிகுந்த சத்ததுடன் வல்லங்களோடும், நாட்டுப் படவுகளோடும் போட்டியிட்டுக்கொண்டு போகின்றன.” - கடல்புரத்தில் வண்ணநிலவன்”

குரூரத்தை மட்டுமே பரிசாகத் தந்துவிட்டு நாட்காட்டித் தாள்கள் நகர்ந்துகொண்டு போகின்றன. ஒரு சிறு குழந்தையின் சிரிப்புக் கூட செத்துப்போய் பிண்டங்களாகக் கிடக்கின்ற வேறு பல குழந்தைகளின் சிரிப்பையே ஏனோ நினைவூட்டுகின்றது. கருட புராணம் சொன்னதாய் கதைகள் கூறும் தண்டணைகள் அனைத்தும் எந்த பாவமும் செய்யாத எம் சக உதரங்களுக்கு நேர்ந்து விடப்பட்டிருக்கின்றது. நாடோறும் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அமைப்புகளும், சில ஊடகங்களும் இவற்றை காட்சியாக்கி தமக்கான கணக்கு வழக்குகளை நேர் செய்துகொண்டு போகின்றனர். தொடர்ச்சியான மன உளைச்சல்களே நாளாந்த அனுபவங்களாகிப் போன இன்றைய நாட்களில் நல்ல புத்தகங்களும் சில திரைப்படங்களுமே அவ்வப்போது நிஜத்தின் தழலில் இருந்து எம்மை கரை சேர்க்கின்றன. அந்த வகையில் அண்மையில் வாசித்து முடித்த “கடல் புரத்தில்” என்ற வண்ணநிலவனின் நாவல் என்னளவில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. வண்ணநிலவனின் எழு த்துக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டும், வாசித்தும் இருந்தாலும் அவரது எஸ்தர் டீச்சர் போன்ற ஒரு சில சிறுகதைகளை மட்டுமே வாசித்திருக்கின்றேன். கடல் புரத்தில் நாவலை வாசித்து முடித்தபோது எத்தனை அருமையான ஒரு வாசிப்பனுபவத்தை இத்தனை காலம் தவற விட்டிருக்கின்றேன் என்று உணர முடிந்தது.
ம்ணப்பாடு என்கிற கடலோர கிராமம் ஒன்றில் வாழும் குரூஸ் என்பவனின் குடும்பத்தையும் அந்த குடும்பத்துடன் தொடர்புற்றவர்களையும் பற்றி அவர்கள் வாழும் கிராமம் சார்ந்து நாவல் அமைகின்றது. அதே நேரம் பாராம்பரியத்தின் மீது நவீனம் செலுத்தும் ஆதிக்கம் வள்ர்வதையும், அதை ஏற்றுக்கொளள முடியாது பாரம்பரியத்தின் மீது கொண்ட தீராத காதலுடன் போராடுபவர்களை பற்றி சொல்வதாயும் எடுக்கவும் முடியும். மனப்பாடு கிராமத்தில் பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்துவருகிறான் குரூஸ். தன் தகப்பன் காலத்து வல்லத்தையே ஒட்டுக்களுடன் பாவித்து வருகின்றான். அவனது மகன் செபஸ்தி படித்து வெளியூர் ஒன்றில் ஆசிரியனாகப் பணிசெய்கின்றான். சம்பளம் வாங்கித் தொழில் செய்தால் முன்னேற முடியாது என்ற எண்ணம் கொண்ட அவன் வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு பட்டணத்துக்கு வந்துவிடும்படி தகப்பனை கேட்டுவருகின்றான். இதனால் தொடர்ச்சியாக தகபனுக்கும் மக்னுக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழுந்துவருகின்றன. இன்றைய சூழலில் நாம் அடிக்கடி காண்கின்ற மாற்றங்களுடன் தம்மை பொருத்தி வாழும் தலைமுறைக்கும், மாறக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருக்கும் ஒரு தலைமுறைக்குமான போராட்டமாகவே இது காணப்படுகின்றன. தலைமுறை இடைவெளி என்று இன்றைய காலங்களில் அடிக்கடி பாவிக்கப்படும் சொல் இன்று மட்டுமல்ல மிக நீண்ட காலமாக / அடி நாள் முதலாகவே இருந்துவருகின்றது என்பது தெளிவாகின்றது. விழா நாளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்ற மரபை மீறி லாஞ்சியில் சிலர் மீன்பிடிக்க செல்கின்றனர் என்று அறிந்த குரூஸ் வாளையும் எடுத்துக்கொண்டு க்டற்கரைக்கு செல்கின்றான். அதே நேரம் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக், ரொசாரியா, சாமிதாஸ் போன்றவர்கள் தம் முடிவில் உறுதியாக இருந்தும் பின்னர் அது தடைப்படுகின்றது. பொதுவாக லாஞ்சியில் கடலில் வெகுதூரம் சென்று மீன்பிடிக்கும் வசதி இருப்பதால் அவர்களால் பெருந்தொகை மீன்களை பிடிக்க முடிகின்றது. இதனால் வல்லங்களில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கு மீன் கிடைப்பது அரிதாகும் அதே வேளை சந்தையை தீர்மானிக்கும் வல்லமையும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடுகின்றது. உண்மையில் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தும் இந்த பிளவுதான் அவர்களிடையே இருந்த உறவிலும் விரிசலை உண்டாக்குகின்றது.

கடல் புரத்தில் நாவலில் கூட படித்த செபஸ்தியன் தான் காதலித்த ரஞ்சியை கல்யாணம் செய்ய முடியாமல் போக, அவள் நினைவுவரும்போதெல்லாம் குடிக்கிறான். இந்த கையறு நிலைதான் அதிகம் காசு உழைக்கவேண்டும் என்ற அவனின் ஆவேசத்துக்குக்கூட காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுபோல பிலோமிக்குட்டியை காதலித்த சாமிதாஸ் தனக்கு பூரண சம்மதம் இல்லாதபோதும் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்கின்றான். சாமிதாஸின் தகப்பன் சொந்தமாக லோஞ்சி வைத்திருப்பவன். இதுபோல குரூசுக்கு நெருக்கமான நண்பனான ஐசக், (இவனும் லோஞ்சி வைத்திருப்பவன்) தனது மனைவியை துரத்திவிட்டு குரூஸின் மகள் பிலோமிக்குட்டியை திருமணம் செய்யவேண்டும் என்று நினைக்கின்றான். மக்களிடையே இருந்த இயல்பான உறவுநிலைகள் நாகரிகத்தின் வருகை தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சீர் குலைக்கப்படுகின்றது. ஆனால் சற்று யோசித்துப்பார்த்தால் லாஞ்சியின் வருகையினை விரும்பாத வல்லம் வைத்திருப்போரின் முன்னோரைக்கூட அதற்கு முன்னைய மரபுரீதியான மீன் பிடித்தல்களை செய்தவர்கள் இதுபோலத்தான் எதிர்த்திருப்பார்கள். இலகுவாக சொல்வதென்றால், ஏ. ஆர். ரஹ்மானின் வருகையின்போது அவரை எப்படி இளையராஜா ரசிகர்கள் எதிர்த்தார்களோ அதேபோலத்தான் இளையராஜாவின் வருகையை விஸ்வநாதனின் ரசிகர்களும் எதிர்த்திருப்பார்கள். இது சக்கரம் போன்ற தொடர்ச்சியான இயக்கம். ஆனால், நாகரிக வளர்ச்சி முக்கியமாக உள்ள அதே நேரம், அடிப்படை வாழ்வாதார தொழிலாக இத் தொழில்களை செய்வோரின் நலன் காக்கப்படவேண்டியதும் அவசியம்.

இந்த நாவலில் முக்கியமாக நான் கருதுகின்ற இன்னுமொரு அம்சம் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக காட்டப்படும் முறை. கற்பு என்கிற மனம் சார்ந்த இரு பாலாருக்கும் பொதுவான ஒரு விடயத்தை பெண்களுக்கு உடல் சார்ந்த ஒரு விடயமாகவே சமூகம் பார்ப்பது வழக்கம். இந்த நாவலில் பிலோமிக்குட்டி, சாமிதாஸை ஆழமாக நேசித்து அவனிடம் உறவும் கொண்டபின்னரும் கூட, சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொன்னவுடன் அழுகிறாள்; தொடர்ச்சியாக அவன் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகின்றாள்; ஆனால் இதுவும் கடந்துபோகும் என்ற மனத் துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள தயாராகின்றாள். கிட்ட தட்ட இவளின் அனுபவத்தையே உடைய அவள் சினேகிதி ரஞ்சி அவளுக்கு துணைநிற்கின்றாள். இது போன்ற ஒரு பெரிய நிகழ்வின் பின்னர் அதை தாண்டி வர முற்படும் எவருக்கும் ஒரு ஆதரவு அவசியம். அண்மையில் நான் பார்த்த DEV. D என்கிற ஹிந்தி திரைப்படத்தில் வரும் என்கிற லெனி/சந்தா என்கிற கதாபாத்திரம் இது பற்றி சில ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றது. சாரு நிவேதிதா மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்த இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி சந்தா, தேவ் இடம் கேட்கும் அந்த கேள்விகள்தான். அதாவது, சந்தாவுடன் தனிமையில் காமமுற்று இருந்த வேளைகளில் எடுத்த வீடியோ ஒன்றை அவள் காதலன் எம்.எம்.எஸ் மூலம் பரப்புகின்றான். இதை பலரும் பார்க்கின்றனர். இதை அறிந்த அவள் பெற்றோரும் அவளை திட்டுகின்றனர். உன்னால் எனக்கு அவமானம் என்று திட்டி அவள் தகப்பன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கின்றார். அதன் பின்னர் பாட்டி வீட்டிற்கு செல்லும் அவள் மீண்டும் மீண்டும் இந்த நிகழ்வை ஞாபகமூட்டி திட்டப்படுகின்றாள். இதனால் ஒரு நிலையில் வீட்டை விட்டு வெளியேறும் சந்தா மும்பையில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் சேர்கின்றாள். அங்கே அவள் தேவ் ஐ சந்தித்டு அவனிடம் தன்னுடைய கடந்த காலம் பற்றி கூறும்போது “அந்த சோதனைக்காலத்தில் எனக்கு அப்பா எனக்கு ஆறுதலாக இருக்கவில்லை. மாறாக அவர் தன்னை சுட்டுக்கொண்டு இறந்ததால் என்னை மேலும் சோதனைக்குள்ளாக்கி என்னை சிக்கல்களில் இருந்து மீளவே முடியாமல் பண்ணினார்”. ஒழுக்கம் பற்றி அதிகம் நன் சமூகம் கவலைப்படுவதால் மனித நேயத்தையும் மறந்து, பாதிக்கப்பட்ட ஒருத்திக்கு இனப்பெருக்க உறுப்புகளின் வழி தீர்மாணிக்கப்படும் ஒழுக்கங்களை முன்வைத்து தீர்ப்பெழுதுகிறோம். “மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்” என்றுதாம் எமக்கு உதவிக்கு வர நிறைய விடயங்களும் இருக்கின்றனவே. ஜெயகாந்தன் அக்கினிபிரவேசம் கதையை எழுதியபின்னர் அதன் முடிவு பற்றி பல விமர்சனங்கள் வர, அவர் விமர்சகர்கள் சொல்லும் பாதையிலேயே கதை போய் இருந்தால் பாதிக்கப்பட்ட பெண் என்னென்ன சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டிருப்பார் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற கதையாக தந்தார். அதிலும் முக்கியமாக ஒருமுறை உடலுறவு கொண்டாலே பெண் வாந்தியெடுத்து, கர்ப்பம் ஆகிவிடுவதை காலம் காலமாக திரைப்படங்களில் சொல்லிவரும் சமூகத்தில் பிலோமிக்குட்டியும், ரஞ்சியும் முன்மாதிரிகள்.

பெற்றோர், காதல், நட்பு என்று உறவுகள் தொடர்ந்து போற்றப்படும் சமூகத்தில் எல்லா உறவுகளும் உள்ளபடியே, அவர்களுக்கான குறைபாடுகளுடன் காண்பிக்கப்படுவது கதையின் இயல்புத்தன்மையை அதிகரிக்கின்றது. ஐசக் தன் உற்ற நண்பன் குரூஸின் மகளை இரண்டாம் தாரமாக கல்யாணம் கட்ட வேண்டும் என்று ஓயாது எண்ணுகின்றான். அவள் உடை மாற்றும்போது ஜன்னலுக்கால் பார்த்தப்டி இருக்கின்றான். குரூஸின் மனைவி மரியம்மை அவனுக்குப் பிடிக்காமல் மாலை வேளைகளில் வாத்தி வீட்ட போய் வருகிறாள். ரஞ்சியும், சாமிதாஸும் தாம் நேசித்தவர்களை கைவிட்டு இன்னொருத்தரை பொருளாதார நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு கல்யாணம் செய்துவிடுகின்றனர். குரூஸின் நம்பிக்கைக்குரிய சிலுவை, குரூஸ் பழைய நினைவுகளை மறந்ததும் அவனுக்கு கொடுக்கவேண்டிய காசை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறான். அது மட்டுமல்ல ஏற்கனவே கல்யாணமான அவனுக்கும் பிலோமினாவை கல்யாணாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கூட உள்ளது. ஒரு முறை பிலோமினா படுத்திருக்கும்போது அவளது விலகிய ஆடைகளூடாக அவள் உடலழகை பார்த்தபடி இருக்கின்றான். ஆனால் எல்லாக் கசடுகளையும் தாண்டி எல்லார் மனதுக்குள்ளும் இருக்கும் மானுட நேயம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பீறிட்டு வருவதை அழகாக காட்டியுள்ளா வண்ணநிலவன்.

இந்தக் கதையை வாசித்தபோது என்னை நிரடிய வித சாதிப்பெயர்களால் தொடர்ந்து மனிதர்கள் அழைக்கப்படுவது. அதே நேரம், சாதீய கூறுகள் சமூகத்தில் ஆழமாக வேரோடிப்போயிருந்த 70களில் எழுதப்பட்ட நாவல் இது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது முக்கியம். கதைக்கு முன்னுரை ஒன்று வழங்கியுள்ள ஞாநி கூட இன்றைய நாட்களில் இந்த நுலை மறுபதிப்பிக்க தயங்கியதாகவும் “எழுச்சிக் காலத்தில்தான் நமது அடிமை மரபு நினைவு படுத்தப்படவேண்டும். அப்போதுதான் எத்தனை போராட்டத்துக்குப்பின் இன்றாஇய எழுச்சியை அடைய வேண்இ வந்தது என்பது புதிய தலைமுறைகளுக்குப் புரியும்” என்றூ சொல்லி ஊக்குவித்ததாயும் சொன்னார். எமது சமூகத்தில் ஜாதி வேறுபாடு இல்லை, வறுமை இல்லை, அறியாமை இல்லை என்று பிதற்றுவதை தவிர்த்து இலக்கியங்களை எழுதும்போது அக்காலங்களில் அந்த சமூகத்தில் இருந்த பிரச்சனைகளையும் சொல்லி எழுதுவதே நேர்மையானதாக இருக்கும் என்றூ நினைக்கின்றேன். அந்த் வகையிலும் வண்ணநிலவன் ஓரளவுக்கு திருப்திகரமாக தன் கடனை செய்கின்றார்.

புதிய தலைமுறையின் மாற்றத்தையும், நவீனத்தின் வருகையையும் எதிர்த்து பாராம்பரியத்தை காக்க விடாப்பிடியாக போராடிய குரூஸ் எனப்படும் குரூஸ் மைக்கேல் தன் பிடி தளர்ந்து தொடர்ந்து போராடும் தெம்பில்லை என்ற நிலை வரும்போது வீட்டையும், படகையும் விற்றுவிட்டு வெளியூர் செல்ல முற்படுகிறான். புதியவற்றின் எழுச்சிகளுக்கெதிரான அவனது போராட்டத்தின் வீழ்ச்சியையே இது காட்டுகின்றது. இந்த நிலையில் அவனால் எதிர்காலத்தின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்க, மனப் பிறழ்வினால் தன் பழைய நினைவுகளை எல்லாம் மறந்த நிலையை அடைகின்றான். குரூஸ் விற்ற வீட்டை அவன் மகன் மீட்டுக்கொடுக்க, அவன் விரும்பிய அதே பழைய சூழலில் ஒரு நடைப்பிணம் போல குரூஸின் இயக்கம் தொடர்கின்றது. சாமிதாஸின் கல்யாணம், அது, இதென்று உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றது. மாறும் உலகுடன் சேர்ந்து மாறாமல் அதை எதிர்த்து போராடுபவர்களை எங்கோ தூக்கி எறிந்துவிட்டு காலச்சக்கரம் தொடர்ந்து இயங்கும் என்று சொல்வது நிஜம்தானோ என்ற எண்ணம் பலமாகவே எழுகின்றது.


*****இந்தக் கதையை வாசித்து முடித்து அசை போடுகையில், பிலோமிக்குட்டி கதாபாத்திரத்தையும் DEV. Dல் சந்தா கதா பாத்திரத்தையும் நினைக்கையில் ஏனோ மனுஷ்யபுத்திரன் அவரது நீராலானது தொகுதியில் எழுதிய “ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு” என்ற கவிதை நினைவு வந்தது. எப்போது எந்த தொடர்ச்சியும் இல்லாதவைகளாகவே என் நினைவுகள் இருந்திருக்கின்றன. பிறிதொரு பொழுதில் பார்த்தபோது அந்த தொடர்ச்சியின்மைக்குள்ளும் ஒரு தொடர்ச்சி இருந்திருக்கின்றது

“ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு”

நன்றாக குளிக்கவேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடி திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிகொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாக கொஞ்ச வேண்டும்

மர்மமாக புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் கனிவை வழங்குபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லாரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக
தப்பிச் சென்று விடவேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருந்தும்

தனித்த அறை ஒன்றில்
மனங் கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசை கேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ளவேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது இந்த உலகின் கருணை

Sunday, April 26, 2009

காலச்சுவடு: கருணா பற்றிய கட்டுரைக்கு ஒரு எதிர்வினை

தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வுக்குப் பின்னர், ஒரு முழு மூச்சுடன் வாசிப்பில நான் இறங்கியபோது தீவிர இலக்கிய இதழ்கள் மீது பெரும் காதலுடன் தான் அவற்றை அணுகினேன். தொடர்ச்சியான வாசகர் ஆதரிப்பில் தமிழில் ஓரளவு நிலைத்துவிட்ட தீவிர இலக்கிய இதழ்கள் என்ற நிலையை காலச்சுவடு, உயிர்மை இதழ்கள் அடைந்திருந்தாலும் காலச்சுவடை என்னளவில் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அணுக முடிந்தது. இதற்கு நான் வாசிப்பில் இறங்கிய அந்த நாட்களில் கண்ணன் தலைமையில் காலச்சுவடு செய்த சில இலக்கியத்துக்கு புறம்பான அரசியல்களோ அல்லது காழ்ப்புணர்வுடன் செயலாற்றிய சம்பவங்களோ, இல்லை அதே சமயத்தில் மனுஷ்யபுத்திரன் காலச்சுவடை விட்டு வெளியேற, அவர் மீது தொடர்ச்சியான புறங்கூறல்கள் சொல்லப்பட, அவரது கவிதைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த எனது மன நிலையோ காரணமாக இருந்திருக்கலாம் அவ்வப்போது எல்லா நச்சில்கூட ஒரு துளி இனிப்பேனும் உண்டென்று எண்ணும் என் மனப்பாங்குடன் காலச்சுவடை அணுகும் எனக்கு காலச்சுவடாகவே தலையில் சம்மட்டி அடி போட்டு தம்மை நிரூபித்துவிடுவது வழக்கம். மீண்டும் ஒரு முறை ஏப்ரல், 2009 காலச்சுவடு இதழில் இது பலமாக நிரூபிக்கப்படுகின்றது.




பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக வணிக இதழ்கள் அதிகார வர்க்கத்தின் குரலாகவும் தீவிர இதழ்களே பாதிக்கப்பட்டவரின் குரலாகவும் ஒலிப்பது மரபு. இந்த நிலையில் உண்மைக்கு மிக நெருக்கமானவையாக அமைவதால் தீவிர இதழ்களின் பக்கங்களை மிகுந்த ஆவலுடன் புரட்டுவது என் வழக்கம். இந்த நிலையில் ஏப்ரல் மாத காலச்சுவடின் அட்டையில் ”காட்டிக்கொடுக்கும் கருணா, ஒரு போராளி துரோகியான கதை” என்ற பெயரில் ஒரு அட்டைப்பட கட்டுரை இருந்தது. சை. பீர்முகம்மது எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மிக முக்கிய நிலையில் இருந்த கருணா, பின்னர் அந்த அமைப்பை விட்டு சில காரணாங்களால் வெளியேறி “தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP)” என்ற அரசியலமைப்பை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். இவரது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அண்மைக்கால செயற்பாடுகள் பற்றி பலவித விமர்சனங்கள் இருக்கின்றன. இது பற்றிய எந்த ஒரு விமர்சனத்தையும் தாண்டி, கருணா காட்டிக்கொடுக்கும் துரோகி ஆன கதை” என்று கவர்ச்சியான தலையங்கத்துடன் வந்திருக்கும் இந்த கட்டுரையில் பல தகவல் பிழைகள் மிக சாதாரணமாக விரவிக்கிடக்கின்றன. அதுவும் எந்த விதமான சமரசங்களுக்கும் உட்படவேண்டிய தேவைகளும் இல்லாமல், மிகத்தெளிவாக தெரியக்கூடிய பிழைகள்.




முதலில் “மட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார்.” என்று கூறப்படுகின்றது. அம்மான் என்கிற பட்டம் போராட்ட அமைப்புகள் ஆரம்ப கட்டங்களில் இயங்கியபோது வழங்கப்பட்ட அடைமொழி. இந்த நாட்களில் ராணுவ ரீதியான தரப்படுத்தல்கள் இல்லாத போது இப்படியான அடைமொழிகள் சேர்க்கப்பட்டு முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை செல்லக்கிளி அம்மான், பொன்னம்மான், பொட்டம்மான், புலேந்தி அம்மான் போன்றவர்களுடன் கருணாவும் இப்படி அழைக்கப்பட்டார். இதே போல ஆரம்ப காலங்களில் புளொட் அமைப்பு “மாமா” என்கிற அடைமொழியை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது (உதாரணம் தாஸ் மாமா, ஆனால் யாழ்ப்பாண மக்களால் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிட்டுவும் கிட்டுமாமா என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).


இதை தொடர்ந்து போர் முனைகளில் திறமையான தளபதியாக கருணா செயல்பட்டிருக்கின்றார். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை ஆனால் இந்தக்கட்டுரையில் ஆணையிறவு சமர் பற்றிய எழுதியது கூட பிழையான ஒரு தகவல் தான். ”1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின” . முதலில் இவர் சொல்கின்ற இந்த ஆனையிறவு சமர் நடைபெற்றது 2000 காலப்பகுதியில். மேலும் ஜெயந்தன் என்ற தளபதியின் நினைவாக அமைக்கப்பட்டதுதான் ஜெயந்தன் படையணியே தவிர ஜெயந்தனின் தலைமையில் அமைக்கப்பட்ட அணி ஜெயந்தன் படையணி அன்று. விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள ஜெயந்தன் படையணி, விக்ரர் படையணி, சார்ள்ஸ் அன்ரனி படையணி, கிட்டு படையணி, சோதியா படையணி போன்ற படையணிகளும் அருள் 89, பசீலன் 2000 முதலிய எறிகணை, மிதிவெடி வகைகளும் மரணித்த வீரர்களின் நினைவாக பெயரிடப்பட்டனவே தவிர தளபதிகளின் பெயரில் அழைக்கப்பட்டவை அல்ல. அண்மயில் கனேடிய முக்கியஸ்தர் ஒருவர் சார்ள்ஸ் அன்ரனி படையணி என்ற பெயரை தன் மகன் பெயர் என்பதால் தான் அந்த படையணிக்கு சூட்டப்பட்டது என்று ஒருவர் சொன்னபோது என்ன எண்ணினேனோ அதே தான் பீர் முகம்மது பற்றியும் எண்ணத் தோன்றுகின்றது. உண்மையில் இந்தப் பெயர் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவாகவே அந்தப் படையணிக்கு சூடப்பட்டது. 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி பலாலி வீதியில் நடத்தப்பட்ட தாக்குதல் கூட அதே ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகது கொல்லப்பட்ட சார்ள்ஸ் அன்ரனியின் நினைவாகவே நடத்தப்பட்டதாக அனிதா பிரதாப்புக்கு 1984ம் ஆண்டு வழங்கிய பேட்டியொன்றில் பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். அதே போராளியின் பெயரைத்தான் தன் மகனுக்கும் வைத்தார். அடுத்ததாக கருணாவின் மனைவி தளபதி சூசையின் சகோதரி என்று வரும் தகவல். எனக்கு தெரிந்த வரை ராம் என்கிற தளபதியின் மனைவிதான் தளபதி சூசையின் சகோதரி. கருணாவின் மனைவி முன்னாள் போராளியான நிரா.



இதுபோல கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறி அமைத்த அரசியலமைப்பின் பெயர் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி. இதைக்கூட இவர் தவறாகவே குறிப்பிடுகின்றார். “இதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார்” என்கிறார் சை.பீர்முகம்மது.




இவையெல்லாவற்றையும் கூட சகிக்கும்படி கட்டுரையின் இறுதிப்பகுதியில் பெரிய ஒரு போடு போடுகின்றார் பீர்முகம்மது. அதாவது “கடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார்”. உண்மையில் மேற்சொன்ன விடயம் பற்றி நான் எந்த எதிர்வினையாற்றவும் விரும்பவில்லை. குமரப்பா, புலேந்திரனின் சயனைட் அருந்திய மரணமும், கிட்டுவின் வங்கக்கடலில் நடந்த மரணமும் ஈழப்போராட்டத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்த காலப்பகுதியில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். நியாயபூர்வமான அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட அவர்கள் அனைவரும் சயனைட் அருந்தினர். 5 பேர் அதன் பின்னர் சிகிச்சைகளில் உயிர்பிழைக்க வைக்கப்பட ஏனைய 12 பேரும் 1987 அக்டோபர் மாதம் 5ம் திகதி மரணத்தை தழுவினர். இந்திய-இலஙை ஒப்பந்தம் பற்றி விடுதலப்புலிகள் கடும் அதிருப்தி கொள்ள இந்த நிகழ்வு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் கிட்டுவும் குட்டி சிறி உட்பட்ட சில போராளிகளும் லண்டனில் இருந்து திரும்பும்போது சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது தம்மை மாய்த்துக்கொண்டு உயிர் துறந்தவர்கள். இது நடந்தது 93ல் ஜனவரி 16ல்.




இதுபோன்ற ஒரு அடிப்படை தகவல்களைக் கூட சரிபார்க்காமல் ஒரு முன்னணி இதழில் இப்படியான ஒரு கட்டுரை வந்திருப்பது மிகப்பெரும் ஏமாற்றங்களுக்கு உள்ளாக்குகின்றது. அதுவும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு விலகி (2004 மார்ச் 3ம் திகதி) கிடைத்த 5 ஆண்டு அவகாசத்தைக்கூட சரியாக பயன்படுத்தாமல் எழுதப்பட்ட இந்த கட்டுரையை எழுதிய பீர்முகம்மதுவும், அதை வெளியிட்ட காலச்சுவடும் இந்த தகவல் பிழைகளுக்கு கட்டாயம் பொறுப்பேற்க வேண்டியவர்கள். ”தமிழரின் தனிக்குணம், தனித் தனியே பிரிந்து சண்டையிடும் குணம்” என்று அப்துல் ரகுமான் ஒரு முறை எழுதியிருந்தார். தமிழரின் வரலாறு கூட தம்மிடையே சண்டையிட்டு அழிந்து போனது (சேரர், சோழர் பாண்டியர் காலம் முதல் இக்காலம் வரை) என்று வரலாறும் எமக்குக் கற்பித்திருக்கின்றது. இவை எல்லாவற்றையும் விட பெரிய இழுக்கு நாமே எம் காலத்து வரலாறை இப்படித் திரித்து எழுதுவதுதான்.

Tuesday, April 7, 2009

தேர்தல் கூட்டணி: ஈழத்தமிழன், திமுக, அதிமுக மற்றும் ஞாநி

வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பேசிப் பேசியே வரலாற்றில் தன் இடத்தை இழந்து கொண்டு வருகின்றான் தமிழன். கனக விசயனின் முடியினை… என்று தொடங்கி தம்புகழ் பாடி, புற நானூற்று வீரம் என்றெல்லாம் பழையதையே மீண்டும் மீண்டும் பேசி மீண்டும் மீண்டும் தமிழனின் தலையில் மிளகாய் அரைத்து வளர்ந்தவர்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கூட்டணிகளுடனும், புதிய (கு)யுக்திகளுடனும் மக்களை ஏமாற்ற தயாராகிவிட்டனர். திமுக, அதிமுக என்கிற பெரிய முதலைகள் குழப்புகிற குட்டையில் குதித்து மருத்துவர் ராமதாஸ், கலிங்கப்பட்டி வீரன் வைகோ, தமிழ் நாட்டு சேகுவேரா திருமா ஆகியோரும் செய்த குழப்பத்தில் தமிழன் முகமெல்லாம் சேறாக, தேர்தலுக்கு முன்னமே கரும் புள்ளி குத்தப்பட்டுவிட்டான்.


வன்னியில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் சிதறி தமிழர்கள் இறப்பதை வீடியோ ஒன்றில் (திருமா மூலமாக என்று சொல்லப்பட்டது) பார்த்து நா தழ தழக்க கருணாநிதி இதுக்கு பிறகு ஆட்சி இருந்தென்ன, போயென்ன என்றொரு அறிக்கை விட்டு, பதவி விலகல் என்று ஒரு அஸ்திரத்தை பிரயோகிக்க, கருணாநிதி மீண்டும் தமிழின தலைவராக பார்க்கபட்டார், அவரது தமிழ் பற்று பற்றி பலரின் சந்தேகமும் கலைந்தது. சுய மரியாதை சிங்கங்கள் ராமதாஸும், திருமாவும் இன்ன பிறரும் தோள் கொடுக்க 80களின் தொடக்கம் மீண்டும் நினைவு கூறப்பட்டது. இதே நேரம் முன்னை நாள் அன்னை வேளாங்கன்னி, என்றென்றைக்குமான புரட்சி தலைவி ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் என்றால் யார்?, போர் என்றால் இறப்புகள் சகஜம் தானே என்றெல்லாம் சொல்லி வரலாறு காணாத புரட்சி செய்ய கருணாநிதி தமிழின தலைவர் என்பது இன்னும் உறுதி செய்யப்பட்டது.


ஆனால் இதற்குப் பிறகு நடந்தது தான் ஒரு திடீர் க்ளைமாக்ஸ். விடுதலைப் புலிகள் ராஜீவை கொலை செய்தனர், சகோதர படு கொலை செய்தனர், கட்டாய ஆட் சேர்ப்பு செய்தனர் என்றேல்லாம் திடீரென்று கருணாநிதி நினைவு கூர்ந்து, தனது ஞாபக சக்தியை நினைவு கூற கருணாநிதிக்கு எதிர்தரப்பு என்பதை மட்டுமே தனது அரசியலாக கொண்ட அன்னை ஜெயலலிதா ஒரே நொடியில் தமிழருக்கான ஆபத் பாந்தவராக அவதாரம் எடுத்து தனது மதிய உணவையே ஒரு வேளை தியாகம் செய்தார். இதை பார்த்து வழமைக்கு ஒரு படிமேலாகவே உணர்ச்சிவசப்பட்ட கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ, எம்ஜிஆர் வழியில் சகோதரி ஜெயலலிதா என்று ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.


இதை பார்த்து இங்கிருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் தமது எதிர்வுகூறும் திறமையை காட்டி விமர்சனங்களாக எழுதி தள்ளினார். சொன்னதை செய்பவர் ஜெயலலிதா, எனவே எமக்கான புதிய மீட்பராக அவர் உருவெடுப்பார் என்பது முதல், கலைஞரின் 60 ஆண்டு கால அரசியல் வாழ்வின் பிழைகள் வரை எல்லாம் மீள் பரிசீலனை செய்யப்பட்டன. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு கொள்வதைவிட கேவலமானது என்று அறிக்கை விட்ட ராமதாஸ் கண்ணில் திடீரென ஜெயலலிதா மீது சகோதர பாசம் உருவாக, 19 மாத காலம் தன்னை உள்ளே வைத்திருந்த அம்மாவுடன் 10 மாதம் உள்ளே வைத்திருந்த அம்மாவின் சொல்லை மீறி கூட்டணி வைத்த வைகோ அன்னை ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார். மதவெறியும், பாசிசமும் தன்னிரு கண்ணென போற்றும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து கம்யூனிசத்துக்கான புதிய விரிவுரைகளை தோழர்கள் எழுத தொடங்கிவிட்டனர்.


வழமை போல ஏட்டிக்கு போட்டியாக திமுகவும் தன் பக்க பித்தலாட்டத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டது. தமிழ் நாட்டில் காங்கிரஸை வேரோடு அறுப்போம் என்று அறுதி இட்ட திருமா திமுக கூட்டணியில் தான் உள்ளேனா, இல்லையா என்று கருணாநிதி சொல்லவேண்டும் என்று கேட்க தன் பக்தனை கவர்ந்தாற் கொள்ளும் கலியுக கண்ணனாக கருணாநிதியும் அவருக்கு அருள் பாலித்தார். தோடுடைய செவியன் பாடிய ஞானக் குழந்தையாக கருணாநிதி புகழ் பாடிய திருமா தமிழின தலைவர் கலைஞருடன் கூட்டணி வைப்பதில் மகிழ்வடைகின்றேன் என்று சொல்லி தன் பக்தியை மெய்ப்பித்தார். இலவச விளக்கவுரையாக தனக்கு திமுகவுடன் தான் கூட்டணி என்றும், திமுக தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் தன் நிலையை தெளிவு செய்தார். இது பற்றி தனது ஓ பக்கங்களில் ஞாநி இதே அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நின்று போட்டியிடலாம் என்று ஒரு யோசனையை கிண்டலாக சொல்லியிருந்தார். ஞாநியின் சில கருத்துகளில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், அவரது அரசியல் விமர்சனங்கள் காத்திரமானவை. அவற்றில் இருக்கும் வேகமும் வீச்சும் அவரை எதிர்ப்போரால் கூட மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்படுபவை. இது போல சாரு நிவேதிதாவும் தேர்தல்: மாஃபியாக்களின் திருவிழா என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இரண்டையும் படித்துப்பார்ப்பது அவசியம்.


இது பற்றியெல்லாம் கவலையில்லாமல் வெகுஜன பத்திரிகைகளும் ஊடகங்களும் ”தளபதி சூரியனுக்கு, தல இலைக்கு” என்று சினிமாக் கொட்டகைக்குள் தமக்கான அரசியல் தலைவர்களை தேடப் புறப்பட்டுவிட்டனர். கல்விக்கண் திறந்த படிக்காத மேதை, கர்மவீரர் காமராஜர் என்று முழங்கி அதனால் தான் அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் தேவை இல்லை என்கிறோம் என்று சினிமாவில் வசனம் வைப்பார்கள். அதற்கு நன்றியாக இப்போது அரசியல்வாதியாக ஒரே தகுதி சினிமா உலகில் இருப்பதுதான் என்றாகிவிட்டது. இல்லாவிட்டால் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்ததை விட பல மடங்கு பெரிதாக ரம்பா – கருணாநிதி சந்திப்பு பெரிதாக செய்திகளில் வராது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பிழை என்று சொல்லவில்லை, ஆனால் அது ஒன்றே அரசியலுக்கான தகுதி என்றாகிவிடாது என்றுதான் சொல்லுகின்றேன். விஜயகாந்திடம் ஒரு முறை நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்க நான் ஒவ்வொரு ஆண்டும் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுத்தேன், அன்ன தானம் செய்தேன், நான் மதுரைத்தமிழன், பலருக்கு கல்வி கற்க உதவினேன் அதனால்தான் அரசியலுக்கு வந்தேன் என்று சொன்னார். இது சொல்லும் நீதி: நிறைய பணத்தை சனத்துக்கு வீணாக்கி விட்டேன், அதை வட்டியும் முதலுமாய் வசூலிக்க அரசியலுக்கு வந்தேன்.


தையல் மெஷின் கொடுப்பதும், நோட்டுப் புத்தகம் கொடுப்பதுதான் அரசியலுக்கான ஒரே தகுதி என்றால் இவர்களை விட சமூகப் போராளிகள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களை கூப்பிட வேண்டியது தானே? சமூக சேவை என்ற ஒரே காரணத்தால் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயையே காலில் விழ வைத்தாரே ஒரு தமிழ்ப் பெண், அவரது பெயராவது நினைவிருக்கின்றதா? அவரை யாராவது அரசியலுக்கு அழைத்து உண்ணாவிரதம் இருந்தீர்களா???? யாராவது ஒரு பேராசிரியரை??? ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் கோபிநாத் ஒரு மனிதரை காட்டி இவர் யாரென்று யாருக்காவது தெரியுமா என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் கேட்க ஒருவருக்குக் கூட தெரியவில்லை. ஆசிரியர்கள் நலனுக்காக போராடி பல முறை சிறை சென்ற பேராசிரியர் கல்யாணி இவர்தான் என்று கோபிநாத் அறிமுகம் செய்ய பேராசிரியர் கல்யாணி கண்களில் நீர். இது ஆனந்த கண்ணீரா...??? ஏன், ஒரு எழுத்தாளரையாவது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டீர்களா?? இப்போது ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சி போன்றவர்கள் அரசியலில் நுழைந்துள்ளார்கள். இவர்களால் ஏதாவது சமுதாய மாற்றம் வருமா என்று சற்று காத்திருந்துதான் பார்க்கவேண்டும். கருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி ஒரு எழுத்தாளர் அரசியலில் இருக்கின்றார் என்று கனிமொழி சில நம்பிக்கைகளை உருவாக்கியிருந்தார். ஆனால் இந்த நம்பிக்கைகளை எல்லாம் சிதறடிக்கும்படி கவியரங்கங்கள் என்று சொல்லப்படும் கலைஞர் புகழ் அரங்கங்களில் வாலி, வைரமுத்து, பா. விஜய் எல்லாம் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. “நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்று வித்தக கவிஞர் பா. விஜய் ஒரு முறை வாசிக்க கைதட்டல் காதைப் பிளாந்தது. மீண்டும் மீண்டும் கேட்டேன். இதற்கு ஏன் இந்த கைதட்டல் என்று இன்றுவரை விளங்கவில்லை. சரியான விளக்கம் யாரும் சொன்னால் கம்பராமாயண அரங்கேற்றத்துக்கு அடுத்ததாக புகழ் பெற்ற இவரது பத்து புத்தகங்களின் அரங்கேற்ற நிகழ்வின் ஒளி நாடா அனுப்பி வைக்கப்படும்.


சிலர் சொல்வார்கள் எம் ஜி ஆர் திரையுல்கை சார்ந்தவர் தானே. அவர் எமக்கான பெற்காலத்தை உருவாக்கித் தரவில்லையா என்று. இதற்கு எனது முதலாவது பதில் எம்ஜிஆர் திரை உலகத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தனது திரையுலக கவர்ச்சியை காட்டவில்லை; மேலும் அவர் தனக்கு ஆலோசகராக வைத்திருந்த பலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள். இரண்டாவது பதில், எம்ஜிஆர் ஆட்சி பொற்காலம் என்பது முழுக்க முழுக்க உண்மையில்லை. எம்ஜிஆர் ஆட்சிக்கும் கலைஞர் ஆட்சிக்கும் வித்தியாசம் அப்போது ரவுடிகளும் திருடர்களும் அரசியலுக்கு வருவது பற்றி விகடன் கார்ட்டூன் போட்டுவந்தது, இப்போது சினிமா நடிகர்களும் நடிகைகளும் ஆட்சி அமைப்பது பற்றி கார்ட்டூன் போட்டு வருகின்றது.


இந்த தேர்தலில் அழகிரி நேரடியாக களத்தில் இறங்குவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த தேர்தலின் பரிணாம மற்றும் பரிமாண வளர்ச்சி எல்லாருக்கும் உறுதியாகிவிட்டடு. அனேகமாக காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிய எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு தமிழக வாக்கு சாவடிகளுக்கு வழங்கப்படலாம். அதிமுக கூட்டணி வெல்லுமிடத்தில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி விவாகரங்கள், தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டமை, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விபரங்கள் தோண்டியெடுக்கப்பட்டு திமுகவின் பெருந்தலைகள் சிறை செல்லலாம். கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா மாற்றாந்தாய் மனப்பாங்கு காட்டுகின்றது என்று உடன் பிறப்புக்கு அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பி கடிதம் எழுதலாம். ஜெயலலிதா பிரபாகரன் கைது செய்யப்படவேண்டும், அதே நேரம் ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசியல் தீர்வு காணப்படும் என்று திருவாய் மலர்வார். திமுக வெல்லுமிடத்து இந்திய இறையாண்மை கட்டிக்காக்கப்படும். தமிழர் என்ற அடிப்படையில் கருணாநிதி – ராமதாஸ் உறவு மலரும். உதயநிதியின் மகனுக்கு திமுகவின் குழந்தைகள் அணியின் தலைவர் பதவி கட்சியின் ஏகமனதான தீர்மாணத்தின்படி வழங்கப்படும். ஜெயலலிதா சில மாதங்கள் கொடநாடு விஜயம் புரிவார். மனுஷ்யபுத்திரன் எழுதியபடி ஈழத்தமிழருக்கு சில ஆயிரம் சவப்பெட்டிகளும், ஒப்பாரிகளும் வழங்கப்படும். அடிக்கடி ஞாநி வலியுறுத்தும் 49 “0” பிரிவு ஒரு தொகுதியிலேனும் வென்றால் மாத்திரம் தமிழனும், பெரியார் சொன்ன பகுத்தறிவும் வெற்றிபெறும்.


***வாஜ்பாயை காலில் விழவைத்த சமூக சேவகியின் பெயர் சின்னப்பிள்ளை