Monday, March 30, 2009

உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்

குழந்தைகளாக பிறக்கின்றபோது நாம் நூறு வயதுடன் பிறக்கின்றோம். அதன் பின்னர் வாழ்க்கை வெள்ளம் இழுத்துச் செல்ல செல்ல அதன் திசையிலும், அதை எதிர்த்தும் பயணித்து ஒதுக்கப்பட்ட ஆண்டுகள் மெல்ல கழிந்து செல்ல ஆயுள் கரைந்து இறந்து போகின்றோம். எல்லா மனிதர்களும் பால்யத்தில் ஒரே சாயலான வாழ்வையே வாழ்கின்றனர். அதனால் தான் அந்த வயதில் பொறாமையுணர்வும், ஏற்றத்தாழ்வுகளும் மனதில் குடியேறுவதில்லை. நாட்கள் போக போக, திறந்து வைத்த கற்பூரம் போல பால்யம் கரைந்து செல்ல பொய்மையும் கசடும் குடியேறி மனிதம் மெல்ல மெல்ல பாழாகின்றது.

பறந்து செல்லும் என் ஞாபக காக்கைகள் எங்கெல்லாமோ பறந்து என் பால்யத்தின் பருக்கைகளைத் தான் மீட்டி வருகின்றன. எந்த பருவத்தில் பார்த்தாலும், எந்த உணர்ச்சியுடன் பார்த்தாலும் பால்யம் சொந்த தலையணையில் வீசும் மணம் போல மனதுக்கு நெருக்கமான உணர்வையே தருகின்றது. பால்யத்தை நினைவுபடுத்தும் பாடல்களும், சம்பவங்களும், வாசனைகளும், நண்பர்களும், திரைப்படங்களும், புத்தகங்களும், கிராமத்து மனிதர்களும், காதலியரும் எப்போதும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

2

அண்மையில் வாசித்த உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற அ. முத்துலிங்கம் எழுதிய நாவல் அவரது பால்யத்தை விரைவாக கடந்து சென்றாலும், மீண்டும் ஒரு முறை அதன் வாசனையை மீட்டி இருக்கின்றது. கதை சொல்லி தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதிய புத்தகம் இது. இதில் வருகின்ற ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் பூரணம் பெற்றிருந்தாலும் (சிறுகதை அமைப்புடன்), தொடர்ச்சியான வாசிப்பில் ஒரு நாவலின் தன்மையை கொண்டமைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த கதை வடிவத்தை குறிப்பிட்ட அ.மு. அது போன்ற ஒரு வடிவில் ஒரு நாவலை எழுதும் எண்ணம் உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கதை சொல்லி தவிர மிக சில பாத்திரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றார்கள். அதிலும் சிறு பராயத்தில் நடைபெறும் சம்பவங்களில் குடும்ப உறுப்பினர்களும், பின்வரும் சம்பவங்களில் மனைவி, மகள், பேத்தி தவிர மீண்டு வருகின்ற கதாபாத்திரங்கள் மிக குறைவே. இது போன்ற தன்மை முன்னர் சுஜாதா எழுதிய ஸ்ரீ ரங்கத்து தேவதைகளிலும் இருந்திருக்கின்றது. இரண்டு புத்தகங்களிலும் உள்ள முக்கிய சிறப்பம்சம், கதை சொல்லிகள் உயர் கல்வி கற்று, சிறப்பான பணிகளில் இருந்த போதும் அவர்கள் அவ்வவ் வயதுக்குரிய இயல்பு குன்றாமல் அவ்வவ் வயதுக்குரிய சம்பவங்களை எழுதியிருப்பதாகும். ஆர். கே. நாராயண் எழுதிய Swamy and Friends, மற்றும் Malgudi பற்றிய கதைகளிலும் உணர்வுகளை அனுபவித்துள்ளேன்.

ஆனால், தன் 65 வருட அனுபவங்களை சொல்லும் கட்டாயம் இருப்பதால் வருடம் முழுதும் எதிர்பார்த்து காத்திருந்த ஊர்த் திருவிழாவை ஒரே நாளில் கடந்து செல்வதுபோல பால்யத்தின் நினைவுகளை சட்டென்று கடந்து செல்கின்றார். கதை சொல்லி கொக்குவிலில் இருந்து, பேராதனை, கொழும்பு, சியரா லியோன், நைரோபி, சூடான், பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா என்றெல்லாம் இடம் மாறி செல்லும்போதெல்லாம் அந்தந்த நாட்டு மக்களிடையே இருந்த வழக்கங்களையும், நாகரிகங்களியும் கதை ஊடாக மெல்ல சொல்லி செல்கின்றார். சிறு வயதில் லேனா தமிழ்வாணன் கல்கண்டில் எழுதிய மேலைநாட்டு பயண அனுபவங்கள், கீழைநாட்டு பயண அனுபவங்கள், துபாய் அழைக்கின்றது, கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு போன்றவற்றை எல்லாம் விழுந்து விழுந்து பதுங்கு குழிக்குள் வைத்துக் கூட படித்த எமக்கு சுவையாக கதை சொல்லும் அ.முவின் இயல்பால் இன்னும் சற்று விரிவாக எழுத மாட்டாரா என்ற ஏக்கம் எழுகின்றது. அதிலும் சியாரா லியானில் இறக்கப் போகின்ற தாயை சுமந்து ஓடி வரும் இளைஞனின் கதையை சொன்னபோதும் சரி, குதிரைக்கு உணவு தீத்தினால் கரு உண்டாகும் என்ற அமெரிக்கர்களின் நம்பிக்கையையும், மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மேசன் ரகஸ்ய சங்கம் பற்றியும், பட்டும் படாமலும் ஓரின சேர்க்கை பற்றி எழுதிய பிரேமச்சந்திரன் – தர்மதாச – நடேசன் கதையையும், நாசாவில் பணிசெய்யும் ரொக்கெட் விஞ்ஞானியான ஒலிவியா பற்றிய கதையையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் தான் அடைந்த அதே அனுபவங்களை சோர்வுறாமல் வாசகர்களுக்கு சொல்லும்போது சுவை பட கதை சொல்லும் ஆற்றல் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இல்லை என்று சுமத்துப்படும் குற்றச்சாற்று (குற்றச்சாட்டு என்று நாம் குறிப்பிடுவதன் சரியான வடிவம் இது என்று அண்மையில் வாசித்தேன், மேலதிக விபரம் அறிந்தவர்கள் தரவும்) மீண்டும் ஒரு முறை பிழைத்துப்போகின்றது.

அதேநேரம் சக பதிவர் டிசே தமிழன் குறிப்பிட்டிருந்தது போல சாதிய மோதல்களும் அடக்குமுறைகளும் மிக மோசமாக தலைவிரித்து ஆடிய காலப்பகுதிகளை கடந்து வரும்போது கூட ஆசிரியர் அவை பற்றிய எந்த பதிவையும், சம்பவத்தையும் குறிப்பிடாமல் தாவியிருக்கின்றார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதிலும் கொக்குவில் பகுதி மக்களிடம் இந்த ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும் நிறையவே இருந்தது என்பது உறுதியாக தெரிந்ததே. செல்லி என்ற வண்டியோட்டி பற்றி ஆரம்பத்தில் வருகின்றபோது செல்லி மேற்கொண்டு எவ்வாறு நடத்தப்படுகின்றார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் செல்லி வித்தை செய்து சிரிப்பூட்டும் வண்டியோட்டி என்ற அளவிலேயே காணாமல் போய் விடுகின்றார். செல்லி என்று அழைக்கப்படும் செல்லத்தம்பி என்று குறிப்பிட்டாலும், செல்லத்தம்பி என்ற பெயருக்கும் செல்லி என்ற பெயருக்கும் அக்காலத்தில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன என்பதும், சாதீய மற்றும் சமூக நிலைகளே இந்தப் பெயர்களை தீர்மானித்தன என்பதும் நிதர்சனம். எதை எதை எழுதவேண்டும் என்ற எழுத்தாளரின் சுதந்திரத்தில் தலையிடமுடியாது என்றாலும், சுய சரிதைதன்மை வாய்ந்த இந்த கதை அம் மனிதனின் கதையாக இருப்பதுடன், கதை நிகழ்ந்த தேசங்களின் கதையாகவும், கதை நிகழ்ந்த காலங்களின் கதையாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.

ஈழத்து எழுத்தாளராக இருந்தும் ஈழப்பிரச்சினை பற்றி அ.மு எழுதவில்லை என்ற குற்றச்சாற்றை தகர்க்கின்ற அவர் தரப்பு நியாயம் இந்த கதையூடாக ஓரளவு புரிகின்றது. முன்பொருமுறை சொல்புதிதுக்காக ஜெயமோகனுக்கு வழங்கிய (சொல்புதிது – 11, ஏப்ரல்-ஜூன் 2003) பேட்டியில் சொன்னதுபோல “1972ம் ஆண்டிலேயே என் வெளிநாட்டுப் பயணம் தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகு நான் இலங்கைக்கு போன சந்தர்ப்பங்கள் வெகு குறைவுதான். மிஞ்சிப் போனால் இந்த முப்பது தடவைகளில் ஒரு ஆறு தடவை போயிருக்கலாம்”; யுத்தம் தன் கோர கரங்களால் மக்களை தழுவ தொடங்கும் முன்னரே அவர் நாட்டை விட்டுப் புறப்பப்பட்டுவிட்டார். அத்துடன் அவர் இருந்த நாடுகளில் கூட, அதாவது 90களின் இறுதிகளில் அவர் கனடாவரும்வரை அவர் இருந்த நாடுகள் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழாத நாடுகள். எனவே அவருக்கு புலம் பெயர் தமிழர்களுடன் நேரடியான தொடர்புகள் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவு. கதை வழியே ஈழத்தில் பழக்கத்தில் இல்லாத சில சொற்கள் இடம்பெறுவதற்கு கூட இது காரணாமாக இருக்கலாம். கதை சொல்லி குறிப்பிட்ட அந்த இடங்களில் கதாபாத்திரத்தையும் மீறி தான் அறிந்த சொற்களை பேசிவிடுவதன் விளைவே இது என்று நினைக்கிறேன். அதே நேரம் ஈழத்தில் மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், கொழும்புத் தமிழ், மலையக தமிழ், முஸ்லீம் மக்கள் பேசும் தமிழ் என்று இருந்த பாகுபாடு எல்லாம் புலம்பெயர் தமிழ் என்ற தமிழுடன் கலந்து வருகின்ற நிலையில் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர் வட்டார வழக்கில் ஒரு படைப்பை செய்வது சாத்தியம் குறைந்ததாகவே படுகின்றது.

எனது பார்வையில் சின்ன சின்ன குறைகளுடன் தன் வாழ்பனுபவங்களை மிக சுவாரஸ்யமான நடையில் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர் என்ற வகையில் ஈழப்பிரச்சனை பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்க்க விரும்புவோர்க்கு ஏமாற்றம் அளித்தாலும், தனக்கு தெளிவாக தெரியாததை தெரியாது என்றே ஒப்புக்கொண்டு எழுதாமல் விட்டது கூட நல்ல முடிவே. இலங்கை போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்களப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து(???) கண்ணீர் விட்ட கே. பாலசந்தரையும், இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள பெண் மீது இரக்கம் காட்டிய (உன்னத சங்கீதம்) சாரு நிவேதிதாவையும் விட இது எவ்வளவோ பரவாயில்லை.


**புத்தகத்தை தந்துதவிய நண்பருக்கு நன்றி

Wednesday, March 25, 2009

புலம்பெயர் ஊடகங்களும் குளறுபடிகளும்

எந்த விதத்திலும் அழகியலுடன் ஒன்றிக்க முடியாத அளவுக்கு குரூரத்தை எம் வாழ்வுடன் பிணைத்து எம்மை அழைத்துச் செல்லுகின்றது நாம் வாழும் தலைமுறை. ஒரு கொலை நடந்தாலும் பதைக்கின்ற மனம் போய் 10, 20 என்றாகி பின் ஐம்பது, நூறாகி இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று வாழப் பழகிவிட்டது எம் தலைமுறை. கொத்து கொத்தாக இன அழிப்பு நடந்தாலும், தம் தினசரி வாழ்வை அப்படியே வாழப்பழகி விட்டது ஒரு சமூகம். இத்தனை கொலையும் கண்டு, இத்தனை சதைப்பிடங்களையும், அவை சிதறிக்கிடப்பதையும் கண்டு சாவே எமக்கொரு வாழ்வாகிப்போன ஒரு சமுதாயமாக எம் சகோதரங்கள் சிக்குண்டு இருக்கின்றன. இதைப் பார்த்து எல்லாருக்கும் மனதளவான ஒரு பாதிப்புத்தன்னும் வரவேண்டும். அதை விட்டு, “அங்க சனம் எல்லாத்துக்கும் பழகீட்டுது, நாங்கள் தான் இங்க இதை பெரிசா எடுக்கிறம்” என்று அறள பேந்துகொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். (நான் படித்த பெரியாரும், தொடர்ந்த மரபுகளும் சேர்த்து குழப்பி அடித்து) கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருக்கும் நான் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்வேன்; இந்த அதி புத்திசாலைகளை ஒரு வாரமேனும் முல்லை தீவில் கொண்டுபோய் இருக்க விட்டால்.

2

ஈழத்தில் பிறந்தவனாகவும், கனடாவில் வசிப்பவனாகவும் நான் எம் சமூகம் (கனேடிய தமிழ் சமூகம்) மீது தொடர்ந்து வைக்கின்ற குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாம் எமது பிரச்சனைகளை அதாவது சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்ட அகதியாகவும், புலம்பெயர்ந்தவர்களாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் எதிர் நோக்கும் இன்னல்களை பதிவு செய்யவில்லை/பதிவு செய்தது போதாது என்பது. கனடாவை எடுத்துக்கொண்டால் இங்கு இயங்கி வருகின்ற 24 மணிநேர வானொலிகள் நான்கு, பகுதிநேர பண்பலை வரிசை ஒன்று, பத்திரிகைகள் கிட்ட தட்ட 20. இதுதவிர கோயில் என்றூ சொல்லப்படுகின்ற கட்டட/வியாபார அமைப்புகளை சொல்வதென்றால்............... கனடாவில் எத்தனை தமிழ் கராஜ் இருக்குதோ அத்தனை கோயில்களும் இருக்குது. இங்கே நான் கோயில் என்கிற வியாபார / கட்டட அமைப்பு என்று சொல்ல காரணம் இவை கோயில் என்ற பெயரை தாங்கும் வியாபார அமைப்பாக இருந்துவருகின்றனவே தவிர ஆலயங்களாக இருப்பதில்லை என்பதுதான். (இது பற்றி பின்னர் விரிவாக.) இத்தனை இருந்தும் என்ன பயன், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இவை மக்களுக்காக என்ன செய்தன?

இங்கு இயங்கிவரும் ஒரு 24 மணிநேர தமிழ் வானொலி. அதன் முதன்மை அறிவிப்பாளர் ஊரில் ஐஸ் பழ வானுக்கு அறிவிப்பு செய்யக்கூட தகுதி இல்லாத அறிவிப்பு திறன் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்னர் வரை தன்னை தீவிர தமிழ் தேசிய வாதியாக அடையாளம் செய்ய முயன்றவர். இப்பொழுது வானொலியில் பகல் நேரங்களில் நடக்கும் தொலைபேசி உரையாடல்களில் நடுநிலைவாதி என்ற பெயரில் நச்சுக் கருத்துகளை அள்ளி வழங்குகிறார். நான் ஒரு போதும் மாற்றுக் கருத்துகளை மறுதலிப்பவன் கிடையாது. ஆனால் இவர் சொல்பவை மாற்றுக் கருத்துகள் கிடையாது. அது மட்டுமல்ல, தீவிர புலி எதிர்ப்பாளர்கள், புலி எதிர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டு சொல்லும் கருத்துகளை விட தீமை தரக்கூடிய கருத்துக்கள் அவை. இவரது கூத்துக்களில் எல்லாம் பெரிய கூத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் கனடாவில் வானொலி ஒலிபரப்பை பணம் பண்ணும் ஒரு தொழிலாக்கி வெற்றிகண்ட இன்னொருவருக்கும் மிகப்பெரிய போட்டி/துவே
ஷம் நடந்துவந்தது. இதன் உச்சக்கட்டமாக இவரால் உசுப்பப்பட்ட (அல்லது அப்படி குற்றம் சாட்டப்பட்ட) ஒருவர் மற்றைய வானொலியில் அதன் முதன்மை அறிவிப்பாளர் மீது ஏதோ பழி சுமத்த அவர் அழ தொடங்கிவிட்டார். (தமிழ்நாட்டில் ரசிகர் மன்றாங்கள் என்ற பெயரில் நடிகர்கள் அடிக்கின்ற பித்தலாட்டங்களை விட மோசமான பித்தலாட்டக்காரர் இவர்). இதைப்பார்த்து பொங்கி எழுந்த இன்னுமொரு சக அறிவிப்பாளர் “இப்படியான பொய் சேதிகளை ______________________ வானொலியில் ___________________தான் தருகிறார், எல்லா நேயர்களும் அவர்களுக்கு கண்டணம் தெரிவிக்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டார் (அறிக்கை விடுவதுதானே திராவிட பண்பாடு- நன்றி: கருணாநிதி). இதெல்லாம் நடந்து சில காலத்தின் பின்னர் “நடுநிலைவாத” அறிவிப்பாளர் கனேடிய தேர்தல் ஒன்றில் நின்றார். அப்போது நடந்தது பாருங்கள் ஒரு அதிசயம், வைகோ, ராமதாஸ், திருமா எல்லாம் கெட்டார் போங்கள். இருவரும் சேர்ந்து ஒரு சந்திப்பு, அதை இரண்டு வானொலிகளிலும் நேரடி ஒலிபரப்பினார்கள். இருவரும் சகோதரர்கள் என்றூ ஒருத்தர் பித்தலாட்ட, மற்றவர் தனது அம்மாவுக்கு தான் மூத்த பிள்ளை என்றாலும் மற்றவரைத்தான் அவ மூத்த பிள்ளை என்று பாசம் செலுத்துவதாக “நடுநிலையாக” சொன்னார். எனக்கு தானும் எம்ஜிஆரும் ஒரு தட்டில் உணவருந்தினவர்கள் என்று தொடங்கி அடிக்கடி கருணாநிதி சொல்லும் கதையும், கேக்கிறவன் கேனயனா இருந்தா எருமை மாடு சொல்லுமாம் ஏரோப்பிளேன் ஓட்டிக்காட்டுறன்” என்ற கதையும் ஞாபகம் வந்தது.

இதே பித்தலாட்டம் செய்யும் வானொலியில்தான் ஒருமுறை பெரிசா பகிடி விடிறன் என்ற பெயரில் சமாதான காலப்பகுதியில் வந்த ஒரு ஏப்ரல் முட்டாள் தினத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்காவும் ஒரே விமானத்தில் ஜெனீவாவில் உள்ள ஐ. நா அலுவலகத்துக்கு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதற்காக போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இதெல்லாம் என்ன வித தர்மம். உங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம் என்றால் வியாபாரம் செய்துவிட்டுப்போங்கள், அதை விட்டு ஏன் இந்த தேசிய வாத நாடகம். இவர்களைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பாக ஒரு குழு பிரிந்து சென்றது. கடைசியில பார்த்தா எல்லாம் ஒரே குடையில ஊறின மட்டைகள். இதில பெரிய வேடிக்கை என்னவென்றால், இதுக்கிடையில வானொலி உரையாடல்களில் தமிழக அரசியல் வாதிகள் பற்றிய கிண்டல் வேறு. ஐயா, இது மட்டும் வேண்டாம். குருத்துரோகம் கூடாது. குருவை மிஞ்சிய சிஷ்யர்களாய் நீங்கள் வளர்ந்து வருகையில் உங்கள் குருமாரை கிண்டல் செய்து குரு நிந்தனை செய்துவிடாதீர்கள்

3

இந்த நிலையில் இவர்களுக்கு மாற்றாக, எம் நம்பிக்கைகளுக்கு பாத்திரமாக வரும் என்ற நம்பிக்கைகளுடன் ஒரு பண்பலை வரிசை தொடங்கியது. சும்மா சொல்லக்கூடாது. எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு வானொலியில் சினிமா கிசு கிசுக்களை அதுவும் வாரத்தில் இரண்டு நாள் வெளியிட்ட ஒரே வானொலி இது தான். அதிலும் மிக மட்டமான குப்பைகள். உதாரணமாக, ஒரு திரைப்படத்தில் நாயகன் நாயகிக்கு உதட்டில் முத்தமிடவில்லை என்றும் அதற்கு காரணம் நாயகியின் வாயில் வீசிய துர்நாற்றம் என்றும் கிசு கிசு சொல்லும் கேவலமான மனப்பாங்கு வேறு யாரிடமும் வராது. அண்மையில் கல்மடு தாக்குதலின்போது கூட ஆதாரமில்லாத செய்திகள் பரவியபோது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வானொலியை கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆதாரமில்லாமல் பரவிய எல்லா செய்திகளையும் உறுதி செய்வதுபோல இவர்கள் அடித்த கூத்து இருக்கிறதே. ஐயா, ஊடகம் என்கிற பொறுபான இடத்தில் இருக்கின்றீர்கள். அது மட்டுமலாமல் உங்கள் ஊடகத்தை வெறும் ஊடகமாக பாராமல், ஒரு அதிகார பூர்வ ஊடகமாக மக்கள் பார்க்கின்றார்கள். இப்படியிருந்தும் பொறுப்பில்லாமல் நடக்கும் உங்களை எல்லாம் “பசித்த புலி தின்னட்டும்”.

4

வானொலி மீடியாக்கள் தான் இப்படியென்றால் தொலக்காட்சி மீடியா இதைவிட பல படி மோசம். அண்மையில் எனது பெரியம்மா வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி (தமிழ்) நிலையத்திடமிருந்து தமது சேவையை பெற்றுக்கொள்ளும்படி ஒரு அழைப்பு வந்தது. தனது கடுமையான அலுவலகப் பணிகளை சொல்லி தனக்கு அந்த தொலைக்காட்சி சேவைகளை பார்க்க நேரம் கிடையாது என்று அவர் மறுக்க, அழைப்பாளர் சொன்னார் “நானும் தான் பார்க்கிறதில்லை, அது பரவாயில்லை எடுங்கோ” என்று. இது 100% உண்மை. இந்த அணுகுமுறையை யாரையா உங்களுக்கு தந்தது?.

இது மட்டுமல்ல கனடாவில் இயங்கும் இரண்டு 24 மணிநேர தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் தமிழ்நாட்டின் சன், கலைஞர் தொலக்காட்சிகளையே நம்பியுள்ளன. புலம் பெயர் வாழ்வில் உள்ள எத்தனையோ அர்த்தமுள்ள சாரங்களை ஏனையா மறந்து போகின்றீர்கள். குடும்ப பிரச்சனை, கணவன் – மனைவி இடைவெளிகளால் ஏற்படும் பிரச்சனை, கணாவன், மனைவியரிடையே அவரவர் பெற்றோரால் ஏற்படும் பிரச்சனைகள், முதியோர் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆண்-பெண் நட்பு அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்று எத்தனையோ பிரச்சனைகள் உள்ளதையா. அது பற்றி ஏதும் பேசாமல் அதே அர்த்தமில்லாத நாடகங்களை ஏனையா இங்கும் ஒலிபரப்பி இம்சை செய்கின்றீர்கள். எமது
படைப்பாளிகள் எத்தனை பேர் உள்ளனர் இங்கு. அவர்களில் யாரையாவது ஒருவரை எப்போதாவது மனதில் நிறுத்தினீர்களா?. அண்மையில் கனேடைய வானொலி ஒன்றில் ஒருவரை (அவர் ஒரு கவிஞராம்) அவரது அறுபதாண்டு காலப்பணி என்று சொல்லி ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்று அவரது அனுபவ பகிர்வு நடைபெற்றது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம், என்ன அடிப்படையில் அவரை ஒரு கவிஞர் என்று சொல்கின்றீர்கள்?. அவரது இள வயதில் அவர் சற்று சமூக சிந்தனையுடன் இருந்ததாக அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவர் சொன்னார். இருக்கலாம். அதற்காக அவருக்கு ஏற்படுத்தப்படும் ஒளிவட்டம் அளவுக்கு மீறியது. எனக்கு தெரிந்து ஒரு மேடையில் இவரைப்போற்றி இவர் இன்னோரன்ன கவிஞர் என்று ஒருவர் போற்றிய பிற்பாடு பேசஎழுந்த இவர் சொன்னார் “முன்னர் பேசியவர் என்னை கவிஞர் என்று மட்டும் சொல்லிச் சென்றுவிட்டார். நான் ஒரு நல்ல கவிஞன், அற்புதமான நடிகன். நல்ல சிறுகதை எழுத்தாளர்”................இப்படி, எங்கும் எதிலும் இருப்பவன் ஞானே என்ற ரேஞ்சில் அவரது பில்டப். ஒரு வருடம் முழுக்க அவருடன் காலம் தள்ளியதுக்கு / சகித்துக்கொண்டதுக்கு காரணம் உங்களில் உள்ள மாறி மாறி முதுகு சொறியும் குணம் என்று எமக்கு தெரியும். அப்படி இல்லாவிட்டால், கனடாவில் உள்ள புலம் பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகளில் முக்கியமான காலம் செல்வத்தையோ (அனைத்து சிரமங்கள் மத்தியிலும் காலம் இதழையும், சில புத்தகங்களையும் தொடர்ந்து வெளியிடுவதற்காக) இளங்கோவையோ (டிசே தமிழன், அவரது சமூக கோபம், கட்டுரைகள் / ஹேமா அக்கா என்ற சிறுகதை ஒன்றுக்காகவேனும்), சேரனையோ, திருமாவளவனையோ, சுமதி ரூபனையோ (பெண்ணியத்துக்காக), திருமாவளவனையோ இல்லை தொன்றுமுளதென் தமிழ் என்று இன்னும் பாடினால் அத் தமிழில் தன் ஆளுமைகளை தொடர்ந்து காட்டிய கவிஞர் பஞ்சாட்சரத்தையோ அலது எனது பிரத்தியேக பட்டியலில் என்றும் முண்ணணியில் உள்ள வித்துவான் இராசரத்தினத்தையோ ஏன் உங்களுக்கு நினைவு வரவில்லை?

..................................மீதி அடுத்த பாகத்தில்

Thursday, March 12, 2009

வெண்ணிலா கபடிக்குழுவும் யாழ்ப்பாணத்துச் சாதித் திமிரும்


சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். - அம்பேத்கார்


வெகுதாமதமாக இன்றுதான் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தை பார்த்தேன். வழமை போல கனடாவில் இத்திரைப்படத்தை திரையிடவில்லை. திரைப்படங்களை திரையரங்கில் சென்றுதான் பார்ப்பது அல்லது அத்திரப்படத்தின் உத்தியோகபூர்வ பிரதி வெளியான பின்னரே பார்ப்பது என்ற கொள்கையில் தீவிரமாக இருந்ததால் (கள்ள விசிடியில் திரைப்படம் பார்க்கும் எவருக்கும் நல்ல திரைப்படம் வரவில்லையே என்று கதைக்கவே உரிமையில்லை) இந்த நிலை. கனடாவில் நல்ல திரைப்படங்களை திரையிடுவதில்லை என்ற ஒரு கொள்கை நெடுநாட்களாக பின் பற்றப்படுகின்றது. சுப்ரமணியபுரம், அஞ்சாதே, சேது, சென்னை 600 028, போன்ற பரவலான பாராட்டுக்களை பெற்ற எந்த படங்களும் இங்கு திரையிடப்படவிலை. ஆனால் வில்லு, குருவி, குசேலன், ஏகன், ஆழ்வார், 1977 போன்ற திரைக்காவியங்கள் எல்லாம் பலத்த விளம்பரங்களுடன் திரையிடப்படுகின்றன.


பொதுவாக மலையாள, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய, இரானிய திரைப்படங்களை பார்ர்க்கும்போது அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை, கலாசாரத்தை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஆனால் தமிழ் திரைப்படங்களில் ஒருபோதும் அப்படி இருந்தது கிடையாது. (அல்லது எப்போதாவது ஒரு முறை விதி விலக்காக இருந்திருக்கும் – விதி விலக்குகள் ஒரு போதும் விதிமுறைகள் ஆகா). ஒரு உதாரணத்துக்கு தமிழ் திரைப்படங்களில் எப்போதும் தொழிலாளி மீது முதலாளியின் மகள் காதல் கொண்டு அலைவார். அல்லது அதிகம் பிடித்த கதாநாயகி படிக்காத நாயகன் மீது / பணாக்கார பெண் ஏழை இளைஞன் மீது காதல் கொண்டலைவர். ஆனால் நடைமுறை அதுவல்ல. பொதுவாக திரைப்படங்கள் கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் அவர்களை திருப்திப்படுத்த இப்படியான கோமாளித்தனங்களை திரையில் காட்டுகின்றனர். இது பலருக்கு கனவாக இருக்கலாம், ஆனால் நடைமுறை அப்படியல்ல. உண்மையில் திருமண பந்தங்களில் குடும்ப செல்வாக்கும் அவர்களின் பொருளாதார கல்வி நிலைகளும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இதில் இருக்கின்ற நியாயங்களை நான் ஏற்றுக்கொள்ளுகின்ற அதே நேரம் நடைமுறையில் அப்படி நடக்காதபோது, பணக்கார பெண்களும், படித்த பெண்களும் படிக்காத, ஏழை இளைஞர்களை தான் விரும்புவர் என்று எம் ஜி ஆர் முதல் இன்றைய தனுஷ் காலம்வரை செய்யப்படுகின்ற கற்பனாவாதங்கள் முற்று முழுதாக எதிர்க்கபடவேண்டியன என்று கருதுகின்றேன். அதே போல நாயகனை சர்வ வல்லமை படைத்தவராகவும், நாயகி புனிதத்தின் பிம்பமாகவும் செய்யப்படும் கட்டமைப்புகள் தமிழ் சினிமாக்கள் எதுவுமே தமிழரின் சினிமாக்கள் அல்ல என்றே காட்டிவருகின்றன. சற்று யோசித்துப் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்க்கையுடன் மலையாள, சிங்கள சினிமாக்கள் கொண்டிருக்கும் நெருக்கத்தை கூட தமிழ் சினிமாக்கள் கொண்டிருப்பதில்லை. இந்த போலி விம்பங்களை தொடர்ச்சியாக உடைத்து தமிழர்களின் சினிமாவாக தன்னை அடையாளப்படுத்தி இருக்கின்றது வெண்ணிலா கபடிக் குழு. (இத்திரைப்படத்தில் கூட எம். எஸ். சி படிக்கின்ற பெண் பண்ணையில் வேலை செய்பவனை காதலிப்பதாக காட்டப்பட்டாலும், அது ஒரு இனக்கவர்ச்சியாகவே அடையாளம் செய்யப்பட்டிருக்கின்றது, மேலும் அதை தாண்டி இருக்கின்ற அம்சங்கள் இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன).


இத்திரப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் எல்லா திறமைகளையும் மீறி சாதி என்கிற அலகு எப்படி மனிதர்களை சிறுமை செய்கின்றது என்பது. எல்லா திறமைகள் இருந்தும் மாரி தொடர்ந்து சாதி என்கிற காரணத்தால் சிறுமைப்படுத்தப்படுகின்றான், அதேபோல ஒரு அணியாக வெற்றிபெறும் வெண்ணிலா கபடிக்குழுவை பிரித்துப்போடவும் வாகாக சாதீய வேற்றுமைகள் முன்வைக்கபடுகின்றன. திரைப்படத்தின் இந்த கூறு நேர்மையான விமர்சனங்கள் ஊடாக அணுகவேண்டிய மிகமுக்கியமான அங்கம் என்று நினைக்கின்றேன்.


2

என் சொந்த அனுபவத்தில் இலங்கை தமிழர்கள் மத்தியில் சாதி வெறி என்று கதை எழும்போதெல்லாம் தென்னிந்திய பிராமணரை முன்வைத்தே விவாதங்கள் எழுவது வழக்கம். சாதீய அடக்குமுறைகளின் உச்சக்கட்டமாக பிராமணர்கள் பிரயோகித்த அடக்குமுறைகள் தான் உதாரணம் காட்டப்படுவது வழக்கம். இலங்கையை பொறுத்தவரை பிராமணர்களின் அடக்குமுறைகள் குறைவென்பதால் (இலங்கையில் நிகழும் சாதிக் கட்டுமானங்களில் வெள்ளாளார்களுக்கு அடுத்ததாகவே பிராமணர்கள் கருதப்படுகின்றார்கள்.) இலங்கையில் சாதீய அடக்குமுறைகள் குறைவென்ற புள்ளிக்கு இலகுவாக வந்துவிடுகின்றார்கள். ஆனால் உண்மை முற்றிலும் இதற்கு எதிராக இருக்கின்றது.

தென்னிந்தியாவில் எப்படி பிராமணர்களால் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதோ அதற்கு சற்றேனும் குறையாத அடக்குமுறை இலங்கை தமிழர்களுல் வெள்ளாளரால், பிராமணர் உட்பட்ட மற்றைய சாதியினர் மீது கடுமையாக பிரயோகிக்கப்பட்டது. எனவே சாதீய அடக்குமுறை பற்றி நாம் கதைக்கின்றபோது இந்தியாவில் பிராமணர் மீது செய்யப்படும் எல்லா விமர்சனங்களுக்கும் பொருத்தமாக இலங்கை தமிழ் வெள்ளாளர் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்றும் கூட ஆதிக்க சாதியினர் வீடுகளில் வேலை செய்யவரும் பிற சாதியினருக்கு சிரட்டைகளில் தேனீர் கொடுப்பதையும், தமிழ் நாட்டை போன்ற இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதையும் காணலாம்.

அதுபோல பாடசாலைகளில் கூட இந்த வேற்றுமை காண்பிக்கப்படுகின்றது. எனக்கு தெரிந்து பல ஊர்களில் தாழத்தப்பட்ட சாதியினருக்கு என்று வேறான பாடசாலைகளே இருந்திருக்கின்றன. அதையும் மீறி மற்ற பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்கள் கூட சமத்துவமான முறையில் மதிக்கப்பட்டது கிடையாது. என் சிறுவயதில் நான் படித்த ஒரு பாடசாலையில் ஒரு மாணவன் கல்வி கற்க வந்தபோது வகுப்பில் உரிய இடம் இருந்தும் அவன் நிலத்திலேயே அமர்த்தப்பட்டான். அப்போது எனக்கு சாதிப்பாகுபாடுகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே அந்த மாணாவன் துர்க்குணங்களின் உருவானவன், அவனுடன் சேர்வதே பாவம் என்று சொல்லப்பட்டதை நானும் நம்பிவிட்டேன். பின்னாட்களில் இத்தனைக்கும் காரணம் அவனது சாதிப் பின்புலமே என்று தெரிந்துகொண்டேன்.

இதுபோல எனது ஊரில் இருந்த ஒரு பிரபல ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறும்போது கூட சாதீய அடிப்படையில் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சாதியினர் என்று திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் என்ன கொடுமை என்றால் சில நாட்களில் திருவிழாவுக்குரிய செலவுகளை பொறுப்பெடுத்து இருந்தும் கூட அவர்கள் ஆலயத்துக்க்ள் அனுமதிக்கப்படாமல், தர்ப்பை கூட அணிவிக்கப்படாமல்தான் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த ஆலயத்தின் திருவிழாக்காலங்களில் அமைக்கப்படும் தண்ணீர்ப்பந்தல் ஒன்றில் என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் என்று (அப்போது எனக்கு வயது 10) அவனுடன் சேர்ந்து நின்று அந்த தண்ணீர்ப்பந்தலில் நின்று எல்லாருக்கும் மோரும், சக்கரைத் தண்ணீரும் வழங்கினேன். திருவிழாவில் செலவழிப்பதற்காக என்று சேர்த்து வைத்திருந்த எனது உண்டியல் காசை கூட அந்த் தண்ணீர்ப்பந்தல் அமைப்பாளார்களிடம் கொடுத்திருந்தேன். அந்த் நாட்களில் நான் எனது அப்பம்மா வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்தேன். அன்று வீடு திரும்பினால் என்னால் குடும்ப மானமே போய்விட்டது என்று எனது அப்பம்மா அதிகம் திட்டி, நான் என் சொந்த ஊருக்கு உடனடியாகவே திரும்ப வேண்டும் என்று சொல்லி விரட்டிக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக சமூக சேவைகளில் அதிகம் நாட்டம் கொண்ட எனது பெரியம்மா வந்து என்னைக் காப்பாற்றினார்.


இதன் பின்னர் உயர் கல்வி கற்க என்று சைவமும் தமிழும் வளர்க்க அரும்பாடுபட்டதாக சொல்லிக்கொள்ளும் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். இப்போதுதான் அந்தக் கல்லூரி எவ்வளவு தீவிரமான சாதி மற்றும் மத வெறிகளின் புகலிடமாக இருந்தது என்று தெரிகின்றது. அந்நாட்களில் அக்கல்லூரியில் மிகப்பெரிய புனிதராக அடையாளப்படுத்தப்பட்ட ஆறுமுக நாவலர் மீதான எல்லாப் புனிதங்களும் உடைந்து இன்று என்னளவில் அவர் முற்று முழுதாக நிராகரிக்கப்படவேண்டிய ஒரு மத, சாதி வெறியராகவே நினைவில் இருக்கின்றார். எனது கல்லூரியும் இலங்கையில் இருக்கின்ற பெரும்பாலான இந்துக்கல்லூரிகளும் சாதி வெறி திமிர் பிடித்து ஆடும் இடங்கள். என் சொந்த அனுபவத்தில் சாதி வெறி பற்றி வெளிப்படையாகவே கதைக்கின்ற பல ஆசிரியர்கள் அந்த கல்லூரிகளில் புனித பிம்பங்களுடன் நடமாடுவதை கண்டிருக்கின்றேன். என் சக மாணவன் – என் நண்பன் ஒருவன் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவன், நல்ல கெட்டிக்காரன், நிறைய துடுக்கானவன். வகுப்பில் அவன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்ல தெரியாத ஒரு ஆசிரியரால் “உண்ட சாதிக்குணம் தான் உன்னை இப்படி வச்சிருக்கு” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். இது போல இன்னுமொரு ஆசிரியர் நேரடியாகவே சாதிகளுக்கு பரவலாக அந்நாட்களில் வழங்கப்பட்ட குறியீடுகளூடாக தன் வகுப்பு மாணவர்களின் சாதிகள் பற்றி பிற மாணவர்களுடனேயே விவாதிப்பதை கண்டிருக்கின்றேன்.


மேலும் இந்த இந்துக்கல்லூரி என்ற பெயருடன் இயங்குகின்ற அரச பாடசாலைகளில் இந்துமதம் மட்டுமே போதிக்கப்படுகின்றதே தவிர கிறீஸ்தவ மதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை அரச பாடசாலை என்கிற ரீதியில் அங்கே கிறீஸ்தவ பாடமும் நிச்சயமாக கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அனேகமான கத்தோலிக்க பாடசாலைகளில் இந்து மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்டடுகின்றாது. ஆனால் ஒரு இந்து / சைவ மத வெறிச்செயலாகவே இந்துக்கல்லூரிகளில் கிறீஸ்தவமதம் கற்பிக்கபடுவதில்லை இது பற்றி சில நண்பர்களுடன் கதைத்தபோது அங்கே இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் இது நியாயமானது என்று சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி சொன்ன எல்லாருமே தமிழ் தேசியத்தின் பிரதான ஆதரவாளர்கள். அவர்களை நோக்கி நான் வைக்கும் கேள்வி, பெரும்பான்மையினருக்கு சிறுபான்மை சமூகம் தலை வணங்கித்தான் போகவேண்டுமென்றால் சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் எதற்கு?. இலங்கையில் சிங்களவர் 74%ம் தமிழர்கள் 25%ம் இருக்கின்றனர். (இந்த குடிசன மதிப்பீட்டுக் கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழர்கள் என்று சொல்லப்படும் 25% மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள் எல்லாரையும் இணைத்தே பெறாப்படுகின்றது. ஆனால் இதை வடக்கில் வாழும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக செய்கிறார்களா அல்லது தம் சுய நலத்துக்காக செய்கிறார்களா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாமல் உள்ளது) இவர்களுக்கு சம உரிமை வேண்டுமென்பது போல இதைவிட ஆரோக்கியமான விகிதாசாரம் உள்ள கிறீஸ்தவர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டுமே? ஏன் கொடுக்கபடவில்லை? இப்படியான் கல்லூரிகளை தேசிய கல்லூரிகள் என்று அழகு பார்த்து எம் தேசிய குணமே இதுதான் என்று வெளிக்காட்டுவதில் என்ன பெருமை இருக்கின்றது?


இன்றுவரை யாழ். நூலகம் திறப்பது தொடர்பாக அப்போதைய யாழ். மேயர் செல்லன் கணபதி எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியோ, யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை படு கொலை பற்றியோ எந்த விதமான திறந்த வாக்குமூலங்களும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. தம் பேச்சு / எழுத்து வல்லமைகளை காட்டி இந்த பிரச்சனையை அணுகாமல் மனதுக்கு நெருக்கமாக உண்மைகளை பேசுவதன் மூலமே இதுபோன்ற நிகழ்வுகளின் அவிழாத முடிச்சுகளை அவிழ்க்கமுடியும். மக்கள் புரட்சி என்பதையே தம் போராட்டங்களின் உச்ச கட்ட வெற்றியாய் கொண்டமைந்த இயக்கங்கள்/போராட்ட குழுக்கள் கூட மக்கள் புரட்சியின் அடிநாதமான சமத்துவத்தை பேணவில்லை என்ற குற்றசாட்டு மறுக்கமுடியாது. விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் தடை செய்யப்பட்டபோதும் சரி, 95ல் வேள்வி முறை வழிபாடுமுறை தடுக்கப்பட்டபோதும் சரி (கவனிக்க இது கிராம தெய்வ வழிபாட்டுமுறையின் ஓரம்சம், பிராமணர்களால் எதிர்க்கப்படுவது, வெள்ளாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது. இது நாகரீகம் அற்றாது, மிருகவதை என்று சொன்னால், இதைவிடக் காட்டு மிராண்டித்தனமான அலகு குத்துதல், பறவைக் காவடி, செதி குத்தி காவடி எடுத்தல், தீ மிதித்தல் என்பனவும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்), அதுபோல இன்றளவும் தொடரும் குலத்தொழில் முறை போன்ற விடயங்களை முன்வைத்துப் பார்க்கும்போது இனப்பிரச்சனை கொழுந்து விட்டெரிய தொடங்கிய பின்னும் இன்னும் அங்கே இருக்கின்ற சாதீய கட்டமைப்புகளை புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு போராட்ட குழுக்களும் ஒரு சாதி பின் புலத்துடன் இயங்கின என்றும் அவை தத்தம் சாதியை உயர்சாதியாக நிறுவி இயங்கினார்கள் என்றும் சொல்லப்படும் குற்றசாட்டை முழுதாக நிராகரிக்கமுடியவில்லை.


3

புலம்பெயர் நாடுகளில் கூட இன்று தீவிரமாக சாதி வேறுபாடுகள் பார்க்கபடுகின்றன. சென்ற கோடை காலத்தில் ஒரு ஊரின் ஒன்று கூடலிற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். அப்பொழுது சிறுவர்களுக்கான ஒரு போட்டியில் பரிசுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டாம் பரிசு வென்ற ஒரு சிறுவன் தகப்பனை நோக்கி சந்தோஷத்துடன் ஓடி வருகிறான். தகபன் அவன் காதை முறுக்கி கன்னத்தில் ஓர் அறை அறைந்து சொன்னார் “பள்ளப் பெடியன் முதலாவந்திட்டான், நீ எனக்கு பிறந்தனீயா, இல்லாட்டி கொம்மா வேசையாடி பெத்தவளோ” என்று. தமிழ் திரைப்பட நாயகர்களுக்குரிய வீரத்தில் ஒரு சிறு பங்கு இருந்திருந்தால் கூட அந்த தகப்பனை அந்த இடத்திலேயே ஹதம் செய்திருப்பேன். இதே எண்ணம் எல்லாருக்கும் வரும் வரை எம்மினம் அடிமைப்பட்டே இருக்கும்


பின்னிணைப்பு
கடைசியாக இனப்பிரச்சினை இடப்பெயர்வு தொடங்கு முன்பு எடுத்த கணக்கின் படி.
சிங்களவர்கள் ---74%
ஈழத்தமிழர்கள் --13%
மலையகத்தமிழர்கள்--5%
தமிழ் பேசும் முஸ்லிம்கள் -7%மற்றவர்கள் -1%
மொத்தத்தில் தமிழ் பேசுவோரின் விகிதம் --25%



சுய விலக்கம்
நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக ..."
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்கண்டுபிடிக்கக்கூடும்....

பதிவர் அய்யனாரின் பதிவில் பார்த்த ஆதவன் தீட்சன்யாவின் கவிதை



Wednesday, March 4, 2009

உலக ரட்சகர் ஒபாமாவும் உளுத்துப்போன தமிழர்களும்


அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், ஓய்வு நேரங்களில் நூலகங்களுக்கு செல்லும்போதும் The new york times, Time, Macleans, The Economist என்கிற சில ஆங்கில இதழ்களை சற்று புரட்டிப்பார்ப்பது எனது அண்மைக்கால வழக்கம். இந்த நிலையில் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து வந்த சில இதழ்களை பார்த்தபோது கட்டுக்கடங்காத அளவு கோபமே வந்தது. எந்த ஒரு இதழிலும் அதன் அட்டைப்பட செய்தி ( cover story ) பெரும் கவனத்தை பெறுவது வாடிக்கை. அதிலும் டைம், நியூ யோர்க் டைம்ஸ், மக்லீன்ஸ், நியூஸ்வீக், எகனமிக்ஸ் போன்ற இதழ்கள் வட அமெரிக்கர்களின் பொதுப்புத்தியில் கற்றோர் படிக்கும் இதழ்கள் என்று தொடர்ந்து கருதப்படுபவை.

இப்படி இருக்கும்போது சில மாதங்களின் முன்னர் வந்த நியூயோக் டைம்ஸ் இதழ் ஒன்றின் அட்டையில் பிடல் கஸ்ரோ அவரது போராட்ட கால தோழர்களுடன் ராணுவ உடை அணிந்து வாயில் சுருட்டுடன் கம்பீரமாக நிற்கும் படத்தை எதேச்சையாக பார்க்க நேரிட்டது. எனக்கு பிடித்த ஒரே புரட்சியாளன் “சே”யின் தோழனாயிற்றே, ”சே”யை பற்றியும் ஏதாவது எழுதியிருப்பார்கள் என்ற ஆவலில் இதழை புரட்டதொடங்கினேன். அட்டையில் சிறிய எழுத்துகளில் “what Obama can do to bring back Cuba to 21st century?” என்று எழுதியிருந்தது. இப்போது இருக்கின்ற அமெரிக்க பொருளாதார நிலையில் அமெரிக்காவே தடுமாறுகின்ற போது இப்படி ஒரு ஆசிரியர் தலையஙம் தேவைதானா? கூபாவின் சீரழிவுகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. கூபிய போராட்டம், சே, அமெரிக்காவுக்கு அடிபணியாத 50 ஐ அண்மித்த ஆண்டு போராட்டம் இப்படியான காரணங்களால் எனக்கு எப்போதும் கூபா ஒரு பிரமிப்பாகவே இருந்தாலும் கூபாவின் இன்றைய நிலை நிச்சயமாக எலாரும் கவனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியது. பாலியல் தொழில் அங்கே சட்ட விரோதம் என்று இருந்தாலும் பாலியல் தொழிலே அங்கு கொடி கட்டி பறக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவை கூபாவில் இருக்கும் பாலியல் தொழிலாளிகளும், மலிவு விலை மதுக்களுமே. இந்த நிலை முற்றாக மாறவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்க பொருளாதாரமே அத்திவாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமாவை ஒரு உலக ரட்சகர் போல உருவகித்து இப்படி பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் அமெரிக்க மன நிலையின் அப்பட்டமான வெளிப்பாடே.


இது தவிர வெளியான வேறு சில பிரதான கட்டுரைகளின் தலையங்கங்கள்
1 What can Obama do to transform an economy that can no longer on wall street or silicon valley?
2 What Obama can do to control the deficit?
3 How the world leader Obama was welcomed in Ottawa?
4 What Obama going to do to control the tension arise in middle east?
இதை எல்லாம் படிக்கும் போதே ஒபாமாவை உலகையே மீட்க வந்த ஒரு சக்திபோல ஒரு கட்டமைப்பை முன்னெடுத்து, ஒபாமா என்கிற அமெரிக்க ஐக்கிய குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஒரு அகில உலகின் தலைவராக, ஒரு மீட்பராக உருவகிப்பது, நம் காலத்து கல்கியாக, யேசுவாக, நபிகளாக கட்டமைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


அண்மைக்காலத்தில் பத்திரிகைகளிலும், மக்கள் வாயிலும் அதிகம் அடிபட்ட பெயர் ஒபாமாவாகத்தான் இருக்கும் என்னும் அளவுக்கு எம் சமகால வாழ்வை பெருமளவு சலனப்படுத்திய மனிதர் ஒபாமா என்பதில் எதுவித மறுப்பும் கிடையாது. மக்கள் தம்மை இலகுவாக தொடர்பு படுத்தக்கூடியதாக இருந்த அவரது பேச்சுக்களும், புஷ்ஷின் மிக மோசமான தலைமையின்கீழ் மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தில் சிக்குண்டு மாற்றம் தேவை என்று இருந்த மக்களுக்கு “மாற்றம் தேவை” என்பதையே கருப்பொருளாக்கி ஒபாமா செய்த தேர்தல் பிரசாரங்களும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தான் போதைப் பொருள் உட்கொண்டது பற்றி மக்களிடம் கதைத்தும், நடனம் ஆடியும், கூடைப்பந்து ஆடியும் அவர் மக்கள் முன் ஏற்படுத்திய விம்பமானது மக்களுக்கு அவரை நெருக்கமானவராக உணரப்பண்ணியது. இதன் தொடர்ச்சியாக அவர் அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகின்றார். இது போல கொண்டாடப்பட்ட நிகழ்வு அண்மைக்காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது இல்லை. கிட்டதட்ட 95/96 தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி நேரடியாக குதித்திருந்தால் (அப்போது நிச்சயம் வென்றிருப்பார்) எப்படி ஒரு கொண்டாட்டம் இருந்திருக்குமோ அப்படி ஒரு கொண்டாட்டம். (ரஜினியை அரசியல் அணுகுமுறையில் ஒபாமாவுடன் நான் ஒப்பிடவில்லை. பிரபலம், என்கிற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரும் எவரையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை).

இனிதான் சோதனைக்காலம் தொடங்குகிறது. உடனடியாக குவண்டனாமா சிறைகளை மூடுவேன் என்றவர் இப்போது இயன்றவரை விரைவில் மூடுவேன் என்கிறார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் குவண்டனாமா சிறை மூடுவதென்பது குவண்டனாமா சிறையில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிறுத்தப்படுவதாய் இருக்கவேண்டுமே தவிர, குவண்டனாமாவை மூடிவிட்டு இன்னுமொரு இடத்தில் அதே நடைமுறையுடன் கூடிய ஒரு சிறையை நிர்மாணிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. (
குவண்டனாமா சிறையால் பாதிக்கப்பட்ட கனேடிய இளைஞன் ஓமர் கடார் பற்றிய ஒரு பதிவு).


இதே சமயம் அமெரிக்கா வெளிநாட்டு உறவுகளில் ஏற்படுத்திய பிழைகள் உடனடியாக திருத்தப்படவேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும், பதவியேற்பின்போதும் முழங்கியவர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் இரு மடங்காக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அப்படி இருமடங்காக்கியவுடன் அமெரிக்காவுக்கு உண்டாகும் இழப்புகள் இன்னும் பல மடங்காகும், அதற்காகத்தான் காத்திருக்கின்றோம் என்று அல்-கொய்தா தலைவர் ஒருவர் அறிவித்திருக்கின்றார். அதே சமயம் புஷ்ஷுக்கு ஆப்கான் போல ஒபாமாவுக்கு பாகிஸ்தான் என்று சில ஊடகங்கள் தொடர்ந்து சொல்லுகின்றன. தம்மை ரட்சிக்க வந்தவர் என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஒபாமா இப்போது என்ன செய்கிறார் என்று அவர் பில்லியர்ட்ஸ் விளையாடும் அழகையும், அவர் நன்றாக நடனம் ஆடக்கூடியவர் என்றும், அவர் கூடைப்பந்தில் ஷூட் பண்ணும் அழகே தனி என்றும் இதழ்கள் நடுப் பக்கத்தில் “எந்திரன் படத்தின் புதிய காட்சிகள்” என்கிற அளவில் படங்களை வெளியிட்டு வருகின்றன. பழைய மொந்தையில் புதிய கள் என்று பெரியார் விமர்சித்தது நினைவு வருகின்றது. என் சொந்த கருத்தில் "அமெரிக்கர்கள் எப்போதும் அமெரிக்கர்களாகவே இருக்கின்றார்கள்”.



(2)

பொதுமக்கள் தம் வாழ்வில் இழந்துவிட்ட வசந்தங்கள் எல்லாவற்றையும் மீட்க வந்த ரட்சகராக ஒபாமாவை பார்ப்பதுபோல இன்னுமொரு ரட்சகரை 15 வருடங்களுக்கு முன்னரே பார்த்த அனுபவம் இலங்கை தமிழ் மக்களுக்கு உண்டு. 1994 ஆகஸ்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதூங்க இலங்கை பிரதமராக பதவியேற்கிறார். தொடர்ந்து 1994 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். தேர்தல் காலங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்களால் பெருமளவு கவரப்பட்ட தமிழர்கள் எமக்கொரு மீட்பர் அவதரித்துவிட்டார் என்பதுபோல குதூகலிக்கின்றனர். வழமைபோல நல்லூர் திருவிழா நடைபெறுகின்றது. ஆனால் வழமைக்கு மாறாக மக்கள் சந்திரிக்கா காப்பு, சந்திரிக்கா பொட்டு, சந்திரிக்கா மாலை, சந்திரிக்கா சேலை எல்லாம் அமோகமாக விற்பனையாகின்றது. சிங்களப் பெண்ணான சந்திரிக்கா இவை எல்லாவற்றையும் அணிவாரா என்கிற கேள்வி யாரிடமும் எழவில்லை. பில்லா சாரி என்று வாங்கி அணிகிறோம், பில்லா படத்தில் யார் சேலையுடன் வந்தார்கள் என்று கேட்டோமா, எமது மூத்த தலைமுறையினர் தானே அவர்கள். தமிழர்கள் எப்போதும் ஏமாற தயாராக இருக்கின்றார்கள். ஏமாற்றுபவர்கள் மட்டும் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். ட்ரெண்டுக்கு ஏற்ப எடுக்கும் படம்தான் ஓடும் என்பதுபோல ட்ரெண்டுக்கு ஏற்ப செய்யும் ஏமாற்றுதான் எடுபடும்போல.



(3)

உலக ரட்சகர், இலங்கை ரட்சகர் என்பதுபோல தமிழ் நாட்டு ரட்சகர் ஒருவரும் இப்போது உதயமாகி இருக்கின்றார். எனக்கு தெரிந்து தனது கட்சியின் கொள்கை என்ன என்று கூட சொல்லாமல் சில தேர்தல்களை சந்தித்த ஒரே அரசியல் தலைவர் இவர்தான். கருணாநிதியின் தீவிர ஆதரவாளனாக இருந்து அவரிடமே கேட்டு ( ஆதாரம் – கலைஞர் பொன்விழா மலர்) படித்த வசனமான “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று தனக்கே உரிய உச்சரிப்புகளுடன், இயலுமானவரை முழங்க முற்படும், தன்னை கறுப்பு எம் ஜி ஆர் என்று தானே பெயரிட்டுக்கொண்ட விஜயகாந்த், எம் ஜி ஆருக்கு ஒரே ஒரு உதவிதான் செய்திருக்கிறார். அதாவது எம் ஜி ஆர் முதல்வர் ஆனபோது அவரிடம் பத்திரிகையாளர்கள் உங்களது ஆட்சி என்ன கப்பிட்டலிஸமா, இல்லை கம்யூனிஸமா என்கிற ரீதியில் கேள்வி கேட்க அவர் சொன்னாராம் அண்ணாயிசம் என்று. பொதுவாக எம் ஜி ஆர் மீதான ஒரு நக்கலாக சொல்லப்படும் விடயம் இது. எம் ஜி ஆர் அதையாவது சொன்னார், அவரது நிலைப்பாடு அது. சினிமாயிஸம் என்கிற தன் நிலைப்பாடை கூட சொல்லாமல் இன்றுவரை கட்சி நடத்தும் விஜயகாந்த் உண்மையில் வருங்காலங்களிலும் எம் ஜி ஆருக்கு தொடர இருந்த இந்த அவப்பெயரை தீர்த்துவிட்டாரென்றே சொல்லவேண்டும்.


முன்னொரு காலத்தில் ஈழப்பிரச்சனை தீரும்வரை தன் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இவர். அதை தொடர்ந்து கப்டன் பிரபாகரன் என்று தன் படத்துக்கு பெயர் வைத்தும், விஜய பிரபாகரன் என்று தன் மகனுக்கு பெயர் வைத்தும் இலங்கை தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை போலவே மாறினார் இவர். இது அவருக்கு பெரும் பரபரப்புடன் கூடிய புகழையும் ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர் கால ஓட்டத்தில் அவரும் ஒரு அரசியல்வாதியாகி போனார். குமுதத்தில் இயக்குனர் மகேந்திரன் வழங்கிய ஒரு நேர்காணலில் “விடுதலை புலி உறுப்பினர்களும், தமிழீழ மக்களும் நடிகர் விஜயகாந்தை சின்ன பிரபாகரன் என்றே அழைக்கின்றனர்” என்ற ஒரு கருத்து தான் சொல்லாமல் சேர்க்கப்பட்டதாக இய்க்குனர் மகேந்திரனே ஒரு கடிதம் வழங்கினார். ஆனால் அந்த சேர்க்கை ஏற்படுத்திய தாக்கம் பலமாக பரப்பப்பட்டது. இதில் விஜயகாந்தின் செல்வாக்கு இருந்ததாக பரவிய செய்தியை மறுக்க முடியவில்லை.


கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருவருக்கும் தானே மாற்று என்று சொல்லும் விஜயகாந்த் அவரது பேச்சுக்களிலும், ஆனந்த விகடன் ஆதரவுடன் நடந்தேறிய ஊர்வலம் என்கிற நாடகத்திலும் (ஆனந்த விகடன் நிகழ்த்தும் இன்னுமொரு நாடகம் “சிவா மனசில சக்தி” படத்தின் வெற்றி தொடர்ந்து வெளியாகும் செய்திகள்) தான் ஒரு பக்கா நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றார். கருணாநிதி இலவச ரேஷன் அறிவித்தால் இவர் தான் ஆட்சிக்கு வந்தால் வீடுவரை இலவசமாக விநியோகம் செய்வேன் என்கிறார். என்ன, மக்கள் எல்லாரும் முடமாகி போய்விட்டார்களா? ஏன் இந்த பித்தலாட்டம். இங்கே நடப்பது மூன்றாந்தர சினிமா இல்லை. வாழ்க்கை. விஜயகாந்தை நினைக்கும்போது எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்ன ஒரு கருத்து தான் நினைவுக்கு வருகின்றது. ஆனந்த விகடன் ஒரு நேர்காணலில் ஜெயகாந்தனிடம் “திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் கட்சி தொடங்கியிருக்கின்றாரே?” என்கிற ரீதியில் கேட்கப்பட்டபோது அவர் சொன்னார் “கழுதை என்றொன்று இருந்தது, குதிரை என்றொன்று இருந்தது, இப்போது கோவேறு கழுதை என்றொன்று புதிதாக வந்திருக்கின்றது” என்று.