Wednesday, February 25, 2009

சுஜாதா இல்லாமல் ஓராண்டு


தோற்றம் - மே 3, 1935 - - - - மறைவு - பெப்ரவரி 27, 2008

நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது
நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது

(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).


சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற போக்கில் 200 கதைகளும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை வாசித்தபோது இவர்கள் மாமரத்தின் பயன் என்ன என்று கேட்டால் கீழிருந்து சீட்டாடலாம் என்று எழுதுவார்களோ என்று தோன்றியது. சுஜாதாவிற்கு விஞ்ஞானி, ஓவியர், முகாமையாளர், இசைவல்லுனர், திரைப்பட வசனகர்த்தா, திரைக்கதையமைப்பாளர் என்று பல முகங்கள் இருந்தாலும் அவரது அடையாளம் அவரது எழுத்தும் இலக்கியப்பணிகளுமே.

இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கலைஞர் முதல் … என்று எழுதிய காரணம் தற்போது எழுது கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் மிக நீண்டகாலமாக எழுதிக் கொண்டிருப்பவர் கலைஞர் என்பதும் எழுத்துப் பயணத்தில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் கையெழுத்துப்பிரதி எழுத்தாளர்கள் என்பதுமேயாகும். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இப்படி முதிர்ந்த, முதிர்ந்து வருகின்ற, முதிர போகின்ற பல தரப்பட்ட எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்த சுஜாதா, அதே சமயத்தில் அவர்களாலும் கவரப்பட்டு, அவ்விதம் தன்னை கவர்ந்த ஆக்கங்களை பரப்புகின்ற ஒரு இலக்கிய பிரச்சாரகராகவும் விளங்கியிருக்கிறார் என்பதேயாகும்.


புதிய அல்லது இளைய வாசகர்களை பொறுத்தவரை சுஜாதா ஒரு எழுத்தாளர் என்பதையும் தாண்டி, நல்ல எழுத்துக்களை அறிமுகம் செய்து வைக்கின்ற ஒரு நண்பராக எடுத்த பங்கு மிக முக்கியமானது. என்னுடைய சொந்த அனுபவத்தில் சல்மா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், கி.ரா, சாரு நிவேதிதா, மகுடேஸ்வரன் போன்றவர்களின் பெயர்களை கூட சுஜாதா இல்லாவிட்டால் நான் தெரிந்துகொண்டிருக்கமாட்டேன். சுஜாதாவை வாசிக்க முன்பாக என்னுடைய இலக்கிய உலகம் என்பது தமிழ்வாணன், சிவசங்கரி, பாலகுமாரன் என்ற அளவில்தான் இருந்தது

திரைப்பட பாடல்களில்கூட வைரமுத்து பாடல்கள் புனைவது குறைந்த 2000களின் பின்னர் ஒரு வெறுமையை நான் உணர தொடங்கியிருந்த காலப்பகுதியில் அவர் காதல் திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதியிருந்த “ஒரு குழந்தை என நான் நினைத்திருந்தேன்; உன் கண்களிலே என் வயதறிந்தேன்” என்கிற வரிகளை சிலாகித்து எழுதியிருந்தார். பிற்பட்ட காலத்தில் நா. முத்துக்குமார் உண்மையாகவே மருதகாசி – கண்ணதாசன் – வைரமுத்து என்று தொடர்ந்த பாடலாசிரியர்கள் வரிசையிலே தன்னை பலமாக நிலை நிறுத்திக்கொண்டார். (கவிஞர் வாலி பற்றி இங்கே குறிப்பிடவில்லை காரணம், கண்ணதாசனுக்கு சமகாலத்தவரான வாலி கண்ணதாசனுக்கு எதிர்கடை விரித்ததை போல வைரமுத்துவிற்கும் போட்டியாளராகவே திகழ்ந்தார். இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றியது வெறும் 4 ஆண்டுகள் தான், ஆனால் இப்போதும் கூட இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்ற எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றார்கள்) அதேபோல யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மனதை திருடி விட்டாய் திரைப்படத்தில் வருகின்ற மஞ்சக் காட்டு மைனா… என்ற பாடலையும் வெடுவாக சிலாகித்து எழுதியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களிலேயே யுவனும் ராம், காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலணி என்று இசையுலகின் உச்சத்தை எட்டினார்.
இவற்றிற்கெல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பாக கணையாழி இதழில் கமலஹாசன் பற்றி எழுதியபோது “தமிழின் நவ சினிமாவுக்கான எதிர்காலத்தை இந்த இளைஞரிடம் பார்க்கிறேன். இப்பாது அவருக்கு வயது 24” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல ரோஜா திரைப்படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் “குழந்தை முகம் கொண்ட இந்த இளைஞரிடம் அபார இசை ஞானம் இருக்கின்றது. He will go for places” என்று ஏ. ஆர். ரஹ்மான் பற்றி கூறியிருந்தார். சுஜாதா பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல அவருக்கு நல்ல கவிதைகளை (கவிதை என்று மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டிருந்தார், என்னை பொறுத்தளவில் எந்த ஒரு விடயத்திலும்) இனம் காணுகின்ற விசேஷமான மோப்ப சக்தி ஒன்று இருந்திருக்கவேண்டும்.


சுஜாதா என்றவுடன் குறும்பு கொப்பளிக்கின்ற அந்த வசன நடையையும் இளமையையும் அடுத்து ஞாபகம் நிற்பது மரபுகளை உடைத்தது. இன்று மிகப் பிரபலமாகியுள்ள பத்தி எழுத்தினை (Column writing / blogging) அறிமுகப்படுத்தியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் கூட சுஜாதாதான். என்ன இவர் டைரி எழுதுவது போல எழுதிகிறாரே, இதையெல்லாம் கூட பிரசுரிக்கின்றார்களே என்று விசனப்பட்டவர்கள் கூட இருக்கின்றார்கள். சுஜாதாவின் வண்ணான் கணக்கைகூட பிரசுரிக்ககூடிய வணிகப் பத்திரிகைகள் என்ற விமர்சனம் எழுந்தபோது சாவி உண்மையாகவே சுஜாதாவின் வண்ணான் கணக்கை வாங்கி பிரசுரித்தார் என்றும் சொல்வார்கள். சொல்லப்போனால், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றது பெற்றதும் போன்றனவே இன்றைய பத்தியெழுத்துக்களுக்கெல்லாம் முன்னோடிகள் மட்டுமல்ல முன் மாதிரிகளும் கூட.


அறிவியல் ரீதியான பார்வை கொண்ட சுஜாதா தமிழ் மொழி பற்றி தமிழர்களிடம் நிலவுகின்ற முட்டாள்தனமான சில கொள்கைகளை கேலி செய்தார். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது, முதல் மனிதன் பேசியது தமிழ் போன்ற கற்பிதங்கள் தமிழ் மொழிக்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்று டாப் 10 துரோகங்களில் பட்டியல் படுத்தினார். அளவுக்கு அதிகமாகப் பேசுவது, உணர்ச்சிவசப்படுவது எந்த விடயத்தையும் மிகைப்படுத்திச்சொல்லுவது போன்ற தமிழர்களின் கல்யாண குணங்களையும் பலமுறை விமர்சனம் செய்தார். (எந்த விடயத்தையும் மிகைப்படுத்தும் பழக்கம் தமிழர்களிடம் கலிங்கத்துப் பரணி காலம் தொட்டு நிலவுகின்றது. அரங்கம் நிறைந்த கூட்டம் என்றால் மைக் செட் காரரையும் சேர்த்து ப்தினொரு பேர் என்று அர்த்தம்). இந்த குணங்களை சிலர் திரிவுபடுத்தி சுஜாதா பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இப்படி எழுதுகிறார் என்றும் அவர் தமிழ் மொழிக்கு எதிரானவர் என்றும் சொன்னது உண்டு. சுஜாதாவின் பாணியில் சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். என்னை பொறுத்தவரை சுஜாதாவை ஜாதி ரீதியாக பிரிப்பது காற்றுக்கும் நீருக்கும் ஜாதி சொல்வது போன்றது.



ஏராளமான ஈழத்தமிழ் வாசகர்களை கொண்டிருந்தவர் சுஜாதா. அதே சமயம் ஈழத்து எழுத்துக்களை அவர் வெகுவாக நேசித்தும் இருக்கின்றார். மஹாகவி, ஜெயபாலன் ஆகியோரின் கவிதைகளை அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டியும் வந்திருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அவர் எழுதிய “ஒரு லட்சம் புத்தகங்கள்” தமிழ் மக்களின் கண்ணீருக்கு சாட்சியாக காலமெல்லாம் இருக்கப்போகும் ஒரு படைப்பு. அதேபோல தமது சுய லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை பலர் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய கொலை அரங்கம் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு குறுநாவல். (83ல் எழுதப்பட்ட இக்கதையில் வருகின்ற உத்தம் போன்ற கதாபாத்திரங்களை இப்போதும் கூட காணலாம்). சுஜாதா பங்கேற்ற “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்ற காட்டமான விமர்சனம் பலரிடம் உண்டு. உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற மிகுந்த சென்சிட்டிவ் ஆன பிரச்சனைகளை பதிவு செய்வதில் நடைமுறையிலும் சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களாலும் மிகுந்த தடைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

தனது ஆரம்பகால எழுத்துக்களில் மிக தீவிரமாகவும் வலுவாகவும் தனது கருத்துக்களை சொன்ன சுஜாதா தனது பிற்காலத்தில் தனது விமர்சனங்களை சற்று மென்மைப் படுத்திக்கொண்டார். இதைப்பற்றி கேட்டபோது நான் நண்பர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தாராம். இதைப்போன்ற இக்கட்டான தருணங்களை நடைமுறையில் நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம்.
சுஜாதா எல்லாவற்றையும் பற்றி எழுதுவார் ஆனால் எந்தப்பக்கமும் சார்பாகவும் எழுதமாட்டார் என்று அவர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஒரு பாராட்டாகவும் கருதலாம். இதைப்பற்றி ஒருமுறை “நாங்கள் எல்லாம் எழுதத்தொடங்கும் போது சூரியனை சுட்டெரிப்போம், பூமியை புதிதாக அமைப்போம் என்றுதான் எழுத தொடங்கினோம். ஆனால் ஒரு மண்புழுவை கூட எம்மால் மாற்றி அமைக்கமுடையாது என்று பின்னர்தான் புரிந்துகொண்டோம்” என்று கூறியிருந்தார்.


எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சுஜாதா. அவருக்கு கட் அவுட்டுகள் கூட வைக்கப்பட்டிருக்கின்றன. எனது நண்பர்கள் மத்தியில் நான், தயாபரன், குணாளன் மூவரும் தீவிர சுஜாதா ரசிகர்கள். ஒரு எட்டு வருடங்களின் முன்பாக கொழும்பில் இருந்த எனது நண்பனுடன் தொலைபேசிக்கொண்டிருந்தேன். அது மிக தீவிரமாக பாலகுமாரனை வாசித்துக்கொண்டிருந்த காலம். அப்போது என் நண்பன் கூறினான் “நீ போற போக்கில சுஜாதாவையே மறந்திடுவாய் போல இருக்கே” என்று. இல்லையடாப்பா, என்ன இருந்தாலும் அவர் தான் எங்கட குரு என்று. மின்சாரம் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணபகுதியில் எமது பொது அறிவு தேடல்களுக்கு ஒரே வடிகாலாய் இருந்தவை அவரது ஏன்? எதற்கு ? எப்படி?, தலைமைச்செயலகம், அறிவோம் சிந்திப்போம் போன்ற புத்தகங்கள் தான். அங்கே 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஏன்? எதற்கு? எப்படி? யில் படித்த குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி நானும் நண்பன் குணாளனும் பேசி பேசி ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே எமக்கு பட்டப்பெயராகவும் மாறிவிட்டது. அந்நாட்களில் எல்லாம் குரு என்றுதான் சுஜாதாவை குறிப்பிடுவோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது, சுஜாதா எம்மை அணுகாது, அகலாது, குருவுமாகி நின்ற ஒரு தோழனாகத்தான் இருந்திருக்கிறார் என்று. என்ன, எனக்கும் அவருக்கும் ஆக நாற்பத்தைந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம்.



இது ஒரு மீள்பதிவு

Monday, February 23, 2009

ரிஹானா : மறுக்கப்படும் பெண்ணுரிமைகள்

நாம் முன்னேறிவிட்டோம், நாகரிக வளர்ச்சியில் உச்சத்தில் உள்ளோம் என்றேல்லாம் சொல்லப்படும் நம்பிக்கைகளை அடியோடு களைவதுபோல சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்தே வருகின்றன. காட்டுமிராண்டித்தனம் என்பதையும் தாண்டி கற்காலம் என்று சொல்ல வேண்டிய அளவு மிருகத்தனமாக நடைபெற்ற அண்மைய நிகழ்வுகளில் ஒன்று பிரபல பாடகி ரிஹானா (Rihanna) மீது அவரது காதலர் ப்ரவுணால் (Brown) மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதல். இந்த தாக்குதல் சம்பவம் ரிஹானா – ப்ரவுண் என்கின்ற இரண்டு பிரபலங்களின் இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சனை என்பதை தாண்டி அன்றாட வாழ்வில் நாம் அவதானிக்கக்கூடிய பெண்கள் மீதான அடக்குமுறையின் மற்றொரு வடிவமாகவே பார்க்கப்படவேண்டும். ஆள்வதற்கான ஆளுமை என்பதை தாண்டி ஆண் என்பதால் பிரயோகிக்கப்பட்ட அதிகாரமே இந்த வன்முறையாக மாறியது என்பதை இங்கே வெளிப்படையாக காணலாம். வெறும் ரிஹானா – ப்ரவுண் பிரச்சனை என்றில்லாமல் தின வாழ்வில் நாம் காணும் மனிதர்களில் காணும் இயல்புகளே இங்கே ரிஹானா – ப்ரவுணாக திரிபடைந்துள்ளனர்.


தனது 16வது வயதில் அவர் வெளியிட்ட முதலாவது பாடல் தொகுப்பிலேயே பெரும் புகழ் பெற்றவர் ப்ரவுண் (Chris Brown). இதுவரை இவர் வெளியிட்ட இரண்டு ஆல்பங்களுமே (Chris Brown, Exclusive) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை. அது தவிர இவர் 16வது வயதில் வெளியிட்ட முதலாவது தொகுதியில் இடம்பெற்ற ரன் இட் ( run it) என்ற பாடல் ஒரு அறிமுக ஆண் பாடகர் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இன்றுவரை கருதப்படுகின்றது.

இதுபோல ரிஹனாவும் பாபடோஸில் 1988ல் பிறந்தவர். ப்ரவுண் போல இவரும் 2005லேயே அறிமுகம் ஆனார். கிட்ட தட்ட பாப் உலகில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட / ஏற்படுத்திக்கொண்ட குழப்பங்களால் ஒரு சரிவை ஏற்படுத்திக்கொண்ட காலப்பகுதிகளில் இசை உலகில் அடி எடுத்து வைத்த ரிஹானா குறுகிய காலத்திலேயே உருகியும் அழுதும் குதூகலத்துடனும் அவர் பாடிய பாடல்கள் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் சகோதர உணர்வு, நட்புணர்வு என்று பயணித்து காதல் என்கிற கட்டத்தை அடைந்ததுமே பிரச்சனைகள் ஆரம்பமாகின. இதன் உச்சக்கட்டமாக கிராமி விருது வழங்கும் நிகழ்வுக்கான ஒத்திகையின்போது இருவருக்கும் ஏற்பட்ட விரிசல் விவாதமாகி கடைசியில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட நிலையில் ரிஹானா கண்களிலும், நெற்றியிலும் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டு, உதடுகள் வெடித்த நிலையில் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட மறுநாள் ப்ரவுண் சரணடைந்திருக்கின்றார். வட அமெரிக்காவில் கடுமையாக பின்பற்றப்படும் குடும்ப வன்முறை (Domestic Violence) என்கிற பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்.

இவர்களது பிரபலம், பொருளாதார நிலை, வாழும் நாடு , கலாசாரம் என்று எல்லாவற்றையும் தாண்டி கிரிஸ் ப்ரவுணின் மனநிலை அல்லது பக்குவம் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக் இருக்கின்றது. அத்துடன் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையையும் அதன் காரணிகளையும் பார்க்கின்றபோது, எம்மை நாமே சுய பரிசோதனை செய்யும்போது எமக்குள்ளும் க்ரிஸ் ப்ரவுண்களும் ரிஹானாக்களும் உள்ளனர் என்று உணர முடியும்.

இது தொடர்பாக இப்போது ஆங்கில சஞ்சிகைகளில் வரும் செய்திகளில் ப்ரவுண் மீது வைக்கப்படும் மிக முக்கிய குற்றச்சாட்டு அவர் ரிஹானாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார் என்பதாகும். அதாவது அவரது ஒப்பந்தங்களை, இசையினை, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் அவரது தலையீடு அதிகம் இருந்ததென்றும் மூர்க்கத்தனமான அவர் இயல்புகளை சிலசமயங்களில் ரிஹானா கேள்வி கேட்டபோதெல்லாம் அது பிரச்சனைகளில் முடிவடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (அதாவது இது போல சிறிய அளவில் முன்னரே நடந்ததாகவும், சென்ற டிசெம்பரில் கூட ரிஹானாவின் கழுத்தில் காயங்களை அவர்கள் அவதானித்து கேட்டபோது அவர் அதை மறைத்ததாகவும், இம்முறை மறைக்க முடியாமல் போனதாலேயே முதலில் கார் விபத்து என்று சொல்லியும் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டதாகவும் அவர்கள் நண்பர்களே சொல்லியிருக்கின்றனர்.). இது எல்லாவற்றையும் தாண்டி ப்ரவுண் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவரது சந்தேக குணம் பற்றியதாகும். ரிஹானா கலந்துகொள்ளும் இசைப் பயணங்களில் இவர் முன் அறிவித்தல் இல்லாமல் திடீரென்று கலந்துகொள்ளுவது அவரது சந்தேக புத்தியின் காரணமாகத்தான் என்பது ஒரு வாதம். ( Kanye West உடன் இவர் சென்ற ஆண்டு பயணத்தில் ப்ரவுணின் வருகை குறிப்பிடத்தக்கது, இது தற்செயலானது என்று எதிர்வாதம் செய்பவர்கள் கிரிஸ் ப்ரவுன் போன்ற பிரபலம் அவர் காதலியின் இசை நிகழ்வுக்கு திடீரென்று கலந்துகொள்லுவது தற்செயலானது என்பது நம்ப சற்று கடினமானது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.) அது போல Justin Timberlake, Jay Z போன்றவர்களுடன் ரிஹானாவுக்குள்ள நட்பை இவர் சந்தேகப்படுத்திப் பார்ப்பதாகவும், கிராமி விருதிற்கான ஒத்திகையின்போது “டிம்பலாண்டுடன் உனக்கு தொடர்புள்ளது, நீ அவனுடன் உறவு கொள்கிறாய், அவன் படுக்கையில் உன்னுடன் எப்படி நடந்துகொண்டான்” என்று பலர் முன்னிலையில் ப்ரவுன் பேசியதாகவும் செய்திகள் சொல்கின்றன. இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ப்ரவுணின் கைத்தொலைபேசியில் அவரது முன்னாள் காதலியின் தொலைபேசி இலக்கம் இருந்ததாகவும் அது தொடர்பாக எழுந்த கருத்து வாக்குவாதத்திலேயே ரிஹானா தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதுதான் ஆணாதிக்கத்தின் உச்சக்கட்டம்.

இதே சமயம் 2007ல் அளித்த ஒரு பேட்டியில் ப்ரவுன் தான் தன் மாற்றாந்தந்தை தன் தாயை கொடுமை படுத்தியதை தன் பால்யம் பூர்வமும் பார்த்ததாகவும் சிலசமயம் அவரை பேஸ்பால் மட்டையால அடித்து கொன்றுவிடலாமா என்று கூட நினைத்ததாகவும் கூறியிருந்தார். தன் வாழ்வில் பெண்களை தான் பெரிதும் மதிப்பேன் என்று உறுதி வேறு அளித்திருந்தார். அதையும் தாண்டி அவர் தன் காதலியுடன் நடந்துகொண்ட விதத்திற்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. சிறு வயதில் குடும்ப வன்முறையின் மத்தியில் வளரும் குழந்தைகள் தாம் வளரும் போது அதே வன்முறையை பின்பற்றுவார்கள் என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சிறு வயதில் ஒரு விடயம் மீது ஏற்படும் அளவுக்கு அதிகமான வெறுப்புணர்வு பிற்காலத்தில் (அதே சாயல் கொண்ட) இன்னொரு விடய்ம் மீது பரவும் என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) சொன்னது குறிப்பிடதக்கது.

பெண் தன் அடிமை என்கிற நினைப்பு ஆணுக்கு சிறுவயதில் இருந்தே ஊட்டப்படுகின்றது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை, ஆண் கெட்டால் சம்பவம் பெண் கெட்டால் சரித்திரம் என்றெல்லாம் சொல்லி சோடிக்கப்பட்ட சமுதாய கோட்பாடுகள் எல்லாம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பிற்போக்குத்தனங்கள். ஆணும் பெண்ணும் கைகோர்த்து இயங்கும் சமூகமே அடுத்த தலைமுறையை சரியான முறையில் உருவாக்கும் என்று ஆய்வு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்கள். நிர்வாக ரீதியில் பெண்ணுக்கு அதிகம் திறன் உண்டென்றும், செயல் ரீதியான விடயங்களில் ஆணுக்கு அதிகம் செயற்படு திறன் உண்டென்றும் ஆய்வுகள் தெளிவாக சொல்கின்றன. இந்த நிலையில் பெண்களை உடல் வலிமை என்கிற ஒரே காரணம் கொண்டு அடக்க முற்படுவது அந்த சமுதாயத்தின் செயற்பாடுகளை பெருமளவு முடக்கும். தன்னை நிலை நிறுத்த முடியாமல் தன் துணையை அடக்குவதால் மட்டுமே தான் வெற்றி பெற்றவன் என்று காட்டும் மனப்பாங்கு மிகப்பெரிய ஒரு மனநோயின் சாயல்.

எம்மை நாமே பரிசீலனை செய்துபார்த்தால் இது ஏறத்தாழ எல்லா ஆண்களிலும் உள்ள குறை. பெண்ணை தெய்வம் என்று உயர்த்தாமல் (அதுவும் ஒரு விலக்கல்தான்) மாயப்பிசாசென்று வெறுக்காமல் தன் சக ஜீவியாய் பார்ர்கும் மனப்பாங்கு கை கூடவேண்டும். வட அமெரிக்க நாடுகளில் பெருகும் குடும்ப வன்முறைகளை கட்டுப்படுத்த Domestic Violence சட்டங்களை கடந்த ஆண்டுகளில் கடுமையாக்கி உள்ளனர். திருமணம் தாண்டிய உறவுகள், தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நாகரீகங்களை / பழக்கங்களை பெண்கள் மேற்கொள்வது என்று ஆயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் இதை ஆண்கள் செய்யும் போது சமூகம் எவ்வாறு தீர்ப்பளித்தது என்பதை பக்க சார்பில்லாமல் பரிசீலனை செய்ய வேண்டும்; கூடவே எனக்கு தோன்றும் இரண்டு கேள்விகளையும்

1) பல திரைப்படங்களில் தாம் விரும்பும் பெண் தம்மை விரும்பாதபோது விரல் சொடுக்கி உன்னை என்னிடம் மன்னிப்பு கேட்க வைத்து காதலிக்க வைக்கிறேன் என்று சவால் விடுபவர்களை நாயகர்களாக சித்திகரிப்பவர்கள் ஏன் பெண்கள் அதை செய்கின்றபோது வில்லிகளாக்குகின்றார்கள்? (உதாரணம் படையப்பா, திமிரு மற்றும் பல)

2) தமிழ் திரைப்படங்களில் வருங்கால முதல்வர்களாக நாயகத்தன்மை சிருஷ்டிகரிக்கப்பட்ட / படுகின்ற எம் ஜி ஆர், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் எல்லாரும் ஏன் பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று மிகவும் பிற்போக்கான கருத்துகளை தொடர்ந்து உளறித்தள்ளுகின்றனர்?

Tuesday, February 10, 2009

மாற்றம் தேவை : சே குவேரா மற்றும் Slum Dog Millionaire

1
சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரியா நடித்த ஸ்ரீ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம் அப்படத்தின் இயக்குனர் புஷ்பவாசகன் பத்திரிகை பேட்டி ஒன்றில் ”சே குவேரா, ஹோசிமின், பிரபாகரன் போன்ற புரட்சியாளர்களை பார்த்து நாம் வியந்திருக்கிறோம், ஆனால் அவர்கள் எப்படி, எதன் தூண்டலால் புரட்சியாளர் ஆனார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. உலக புரட்சியாளார்கள் எப்படி உருவானார்கள் என்று இப்படம் சொல்லும்” என்று சொல்லியிருந்தார். புது இயக்குணர் வேறு. சூர்யா கூட அப்போதுதான் நந்தாவில் நடித்து முடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார். எனவே முதல் நாளே அத்திரைப்படத்தை பார்க்க பெரும் எதிர்பார்ப்புடன் சென்றேன். அத்தனை எதிர்பார்ப்பும் புஸ் என்றாகி படம் இயலுமானவரை சொதப்பலாக எடுக்கப்பட்டிருந்தது. அனேகமாக சூரயாவின் மற்றும் அவர் ரசிகர்களின் ஞாபக இடுக்குகளில் இருந்து இப்படமே மறைந்து போயிருக்கும். அதற்கு பிறகு புஷ்பவாசகனும் வேறுபடம் ஒன்றும் எடுக்கவில்லை. தயவுசெய்து அவர் எங்கிருந்தாலும் உடனடியாக “the motor cycle diaries” திரைப்படத்தை பார்ப்பது நல்லது. அவ்வளவு அருமையாக சே என்கிற மகா புரட்சியாளன் எப்படி ஒரு புரட்சியாளனாக உருவானான் என்று படிப்படியாக ஆற்றியுள்ளார் இயக்குணர் Walter Salles.

2

சே பற்றி சிறு வயதில் இருந்தே துண்டு துண்டாக பல விடயங்களை அறிந்தும் படித்தும் வந்துள்ளதால் “சே” என்கிற விம்பம் மீது தீவிரமான ஒரு ஈர்ப்பு இருந்தேவந்தது. தொடர்ந்து சே பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறும் அவரது கனவிலிருந்து போராட்டத்துக்கு புத்தகமும் வாசித்தபின்னர் உலகப் புரட்சிகளுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி போல சொல்லப்படுகின்றன அவர் பற்றியும், அவரது புரட்சிகள் பற்றியும் நிறைய அறிய முடிந்தது. ஒரு மென்மையான, கூச்ச சுபாவம் கொண்ட, சதா ஆஸ்த்துமாவால் வாடுகின்ற Ernesto Guevara (1928 – 1967) எப்படி உலகமே வியக்கும் சே என்கிற தலைவனாக மாறினான் / மாற்றப்பட்டான் என்று தெளிவாக காட்டப்பட்டுள்ளது. படம் ஸ்பானிஷ் மொழியில் இருந்தாலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் பெருமளவு தடங்கள் இன்றி ஒன்றித்து படம் பார்க்க முடிகின்றது.

தமது மோட்டர் சைக்கிள் பழுதடைந்து பின்னர் பெரு நோக்கி செல்லும்போது வேலை தேடி செல்லும் கணவன் – மனைவியை காண்கின்றனர். அப்போது அவர்கள் தாம் எப்படி அடிமையாக்கப்பட்டோம் என்று சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட்களாய் இருந்ததற்காக தாம் நசுக்கப்பட்டோம் என்றும் பல சக கம்யூனிஸ்ட்கள் காணாமல் போய்விட்டனர் என்றூ தெரிவிக்கின்றனர். வேலை கிடைக்குமா என்பதே தெரியாமல் பயணிக்கும் அவர்களின் நிலை “சே”யை உலுக்குகின்றது. இந் நேரம், அவர் முகம் இறுக்கமடைவதையும், தன் ஆஸ்துமாவையும் பொருட்படுத்தாமல் தன் குளிருக்கான ஆடைகளை அந்த தம்பதியரிடம் சே வழங்குவதையும் அவர் மனநிலையில் உருவாகும் மாற்றத்தை வெளிக்காட்டுகின்றது. தொடர்ந்து வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது தாகம் தீர்க்க தண்ணீர் கூட கொடுக்காமல் அழைத்து செல்லும்போது அது பற்றி கேள்வி எழுப்புகின்றார், தொடர்ந்து அந்த வாகனத்துக்கு கல்லால் எறிந்து தன் எதிர்ப்பையும் காட்டுகின்றார். மக்கள் உரிமைகளுக்காக சே வன்முறையை கையெடுக்கும் முதல் கட்டம் அது.

பின்னர் பெருவில் மக்களின் நிலை அவரை பெரிதும் பாதிக்கின்றது. இன்கா நாகரிகம் சார்ந்த அந்த மக்களுக்கு வானசாஸ்திரம், மருத்துவம், கணிதவியல் போன்ற துறைகளில் ஆழமான அறிவிருந்தும் துப்பாக்கி என்கிற ஒரே வல்லமை கொண்டு அனைத்து மக்களும் அதிகாரத்தின் கீழ் ஒடுக்கப்பட்டமை கண்டு வேதனை அடைகின்றார். இதில் இவர் எழுப்பும் What would America look like today if things had been different? என்ற கேள்வி இன்று வரை எல்லார் மனதுள்ளும் உள்ளது. (ஓபாமா எழுப்பிய மாற்றம் தேவை என்கிற கோஷம் கூட இந்த மனநிலையின் வெளிப்பாடுதான்).

படத்தின் மிக முக்கியமான தருணங்கள் சில படத்தில் இறுதிப்பகுதியில் தொழு நோய் ஆஸ்பத்திரியில் இடம்பெருகின்றன. இதில் நடைபெறும் ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாக கவனிக்கப்படவேண்டியவை. “சே” என்கிற பேராண்மை கச்சிதமாக கட்டியெழுப்பப்படுகின்ற சம்பவங்கள் அவை. தொழு நோயளிகளுடன் விளையாடியும், கைகுலுக்கி அரவணைத்தும் பழகும்போது அவரது மனிதாபிமானமும், ஆற்றின் மறுகரையில் இவரது பிறந்த நாளை கொண்டாடும்போது இவர் ஆற்றின் குறுக்காக நீந்தி (கவனிக்கவும் இவர் ஒரு ஆஸ்துமா நோயாளி) தொழு நோயளிகளுடன் சேர்வது ஒரு அருமையான இடம். இது இவர் மன உறுதியை காட்டுவதுடன் இவர் கரை ஏறும்வரை இவரை அந்த முயற்சியை கைவிடும்படி சொல்லும் இவர் நண்பர், கரையேறியவுடன் “I always knew he’d made it” என்று சொல்வது சாதாரண மக்களின் குணவியல்பை பிரதிபலிக்கின்றது.

வரலாற்றின் பக்கங்களில் அழிக்கவேமுடியாத தடங்களை ஏற்படுத்திச்சென்ற சே என்கிற தனிமனிதனின் கதையை சே எப்படி உருவானார் என்பதுவரை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குணர். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, ஆளுமை, மனித நேயம் என்று ஒரு தலைவனுக்கு தேவையான அத்தனை குணமும் கொண்டு போராடிய சே பற்றி சுருக்கமான ஒரு அறிமுகம். ஒப்பீடற்ற ஒரு ஆளுமை பற்றி அறிந்த திருப்தியை இந்த திரைப்படம் அறிந்தாலும் எமது சமுதாயத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற ஆளுமைகள் பற்றிய நேர்மையான படைப்புகள் எபோது வெளிவரும் என்கிற கவலை எழுவது உண்மைதான்

3

Slum Dog Millionaire திரைப்படம் பெரு வெற்றியையும் பலத்த கவனத்தையும் பெற்று வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. கோல்டன் க்ளோப், பாஃப்டா விருதுகளை தொடர்ந்து ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் ஆஸ்காரிற்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் இந்தியர்களும் தமிழர்களும் ஆஸ்காரை எதிர்பார்த்தபடி இருக்கின்றனர்.

இந்நிலையில் வழமைபோல இந்தப்படம் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை பார்க்கவேண்டாம், இந்தியாவின் மரியாதையை இழிவு செய்கின்றார்கள், இந்தியாவில் உள்ள வறுமையை உலகமெல்லாம் கூவி கூவி அம்பலப்படுத்தி காசு உழைக்கின்றனர் என்கிற ரீதியில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. படத்தின் தலைப்பு ஏழை / சேரி மக்களை அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி இத்திரைப்படம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வெளிநாட்டு முதலீடுகளுடன் மூன்றாம் உல்க நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் மீது இப்படியான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்துவருகையில் இதன் பின்னாலிருக்கும் நியாயத்தையும் அரசியலையும் நாம் கவனிக்கவேண்டும். இப்படியான படங்கள் அவற்றை பார்ப்பவர்களிடையே இந்தியா ஒரு வறுமை பீடித்த நாடு, ஏழைகள் மீது பணக்காரர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் தொடர்ந்து நிலவும் ஒரு நாடு, சேரிகளிலும், தெருவோரங்களிலும் சுகாதாரம் மிக மோசமாக உள்ள நாடு போன்ற கருத்துகளை உருவாக்கலாம். இதனை முன்வைத்து பார்க்கின்றபோது இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி நிலை பற்றிய கற்பிதங்களிலும், பிரமிப்புகளிலும் இருப்போருக்கு இந்தியா பற்றிய விம்பம் மாற்றி அமைக்கப்படலாம். பொதுவாக மேலைநாடுகளில் வாழ்பவர்களுக்கு பட்டினியும், பிச்சை எடுப்போர் நிறைந்தவை, அசுத்தமான தெருக்களும் நோய்வாய்பட்ட மக்களும் நிறைந்த நாடுகள் என்று மூன்றாம் உலக நாடுகள் பற்றிய பொதுப் புத்தி இருக்கின்றபோது இப்படியான படங்கள் அவர்களின் எண்ணத்தை உறுதி செய்யும். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது இவர்களின் போராட்டங்களின் பின் இருக்க கூடிய நியாயங்களை அறியமுடிகின்றது (இந்த சமுதாய அக்கறையே அவர்களின் ஒரே நோக்கமாக இருப்பின்).

கனடாவில் வார நாட்களில் இரவு 9:30 க்கு ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இந்தியர்களின் வாழ்கை முறையை மையமாக காண்பிக்கப்படுகின்றது. இதனை பிறநாட்டை சேர்ந்த எனது சக ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த தொடரில் வேற்று மதத்தவரை பார்த்தாலே உடனே முகத்தை திருப்பிக் கொண்டுபோய்விடுவார்கள், அவர்களின் சாதிவெறி, காதலித்து பிற சமூகத்தை சேர்ந்தோரை திருமணம் செய்ய விரும்பும் மகனிடம் “நீ எனது மகனுமில்லை, உனக்கு எனது சொத்தில் பங்குமில்லை” என்று கூறும் தந்தை என்று காட்சிகள் போகின்றன. இதனை பார்த்த என் சக நண்பர், நீங்கள் எல்லாரும் இப்படியா?” என்று மிகப்பெரும் ஆச்சரியங்களுடன் என்னை கேட்டார். ஒரு காலத்தில் அப்படி இருந்தது, இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது என்று ஒருவாறு சமாளித்தேன்.

ஆனால் உண்மையில் எத்தனை சதவீதம் மாறிவிட்டது என்ற கேள்விக்கு மரியாதை தரும் பதில் வராது என்பதுதான் உண்மை. வறியவன் மேலும் வறியவனாகிக்கொண்டு போகின்றான், பணக்காரன் மேலும் பணக்காரனாகி வருகின்றான். இதனால் இந்தியா ஒளிர்கின்றது போன்ற கோஷங்கள் ஒலிக்கின்ற அதேநேரம் அடிப்படை உரிமைகளுக்காக கூட குரலெழுப்ப தெரியாமல் நைந்துபோகும் ஒரு சமுதாய அமைப்பு பெருகிவருகின்றது. அவர்கள் அப்படி இருக்கின்றார்கள் என்று ஆளும் வர்க்கம் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை, தாம் அடிமையாக இருக்கின்றோம் என்று அவர்களும் ஒருபோதும் உணரப்போவதில்லை. இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதை விட மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, அவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவது போன்றவை அதிக பலன் அளிக்கும். அதைவிட்டு இப்படி வழக்கு போடுவது என்று காலத்தை செலவழித்தால் காலமெல்லாம் வழக்குப்போட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

Wednesday, February 4, 2009

ஈழப்பிரச்சனை – பாகம் 2


ஈழப்பிரச்சனை கொழுந்துவிட தொடங்கிய நாட்கள் முதலாக பலவிதமான விமர்சனங்கள் அதன் மீது எழுத போதும் அதை பற்றிய எதிர்வினைகளை நான் தவிர்த்தே வந்தேன். நேற்று சாருவின் வலைப்பக்கத்தில் அந்த கடிததத்தை பார்த்ததும் அதை பற்றிய எதிர்வினையாக நேற்றைய பதிவை எழுதினேன். இந்த கடிதம் மீது நான் வைக்கின்ற மிக முக்கியமான விமர்சனம் என்னவென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது தமக்கான கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்று கவலைப்படுபவர் தனது கருத்து சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மீது காட்டினாரா என்பதே. இலங்கையை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது எப்போதோ காணாமல் போய்விட்டது. ஊடகங்கள் கூட எழுதி தரப்படும் செய்தியையே வெளியிட வேண்டிய கட்டாயம் வேறு. தராகி சிவராம், நிமலராஜன், லசந்த போன்றவர்கள் தமது கருத்தை தொடர்ச்சியாக பதிவுசெய்துவந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். இதன் அடிப்படையில் அண்மையில் ஷோபாசக்திகூட “சீமானும் செல்வியும்” என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் இந்த எல்லா விமர்சனங்களையும் தாண்டி, அரசாங்கம் செய்யும் இனவழிப்பானது தமிழ் மக்களை விடுதலைப்புலிகளை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நேரத்தில் மக்கள் எதையும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பார்க்காமல் அறிவு பூர்வமாக அலசி ஆராய்ந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது பதிவில் இரயாகரன், ஷோபாசக்தி போன்றவர்கள் வெளியிடும் மாற்றுக்கருத்துகள் பற்றி எழுதியிருந்தேன். இன்று சில நண்பர்களுடன் கதைத்தபோது இவர்கள் கருத்தையெல்லாம் முற்றாக நிராகரிக்கவேண்டும் என்ற தொனி சற்று பலமாகபட்டது. இந்த நிலைப்பட்டில் இருக்கும் விளைவுகள் மிகுந்த அவலத்தை தரக்கூடியன. தற்கால படைப்புலகில் புலம்பெயர் இலக்கியம் என்று கதைக்க முற்படும்போது ஷோபாசக்தி என்ற பெயரை தாண்டி இலக்கியம் கதைப்பதே சிரமமானது. என்னை வாழ்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் எந்த கூட்டமும் நடைபெறுவதில்லை என்று அண்மையில் கருணாநிதி சொன்னதுபோலதான் ஷோபாசக்தியின் நிலையும். இரயாகரன் எழுதும் கட்டுரைகளில் கூட அவர் வைக்கும் வாதங்கள் மிகப் பலமானவை. அவர்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு எம்மிடம் விடைகள் இல்லை என்பதே உண்மை நிலை. இந்த நிலையில் அவர்களை புறம் தள்ளுவது எனபது கடந்த கால தவறுகளை மீண்டும் தொடரவே வழிசெய்யும் என்பதை உணரவேண்டும். அவர்கள் முன்வைக்கும் கேள்விகளை விமர்சனத்துக்குள்ளாக்கி அவற்றில் இருந்து ஒரு தெளிவை நோக்கிய பயணமாக செயற்படாமல், அவர்கள் மாற்று கருத்துகளை முன் வைக்கின்றார்கள் என்பதற்காக அவர்களை “துரோகி என்று தீர்ப்பெழுதுவது” ஒரு விதத்திலும் ஆக்க பூர்வமா அமையாது. அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது போர்ப் பிரகடனம் செய்து அமெரிக்க ஜனாதிபது ஜோர்ஜ் புஷ் உரையாற்றியபோது “either in our side or terrorists’ side” என்ற சொற்களை பாவித்தார். இன்றுவரை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட வரிகள் இவை. எமது பக்கம் சேராத எல்லாரும் சமூக விரோதிகள் என்ற கூற்றுபட அமைந்த வார்த்தைகள் அவை. இது போன்ற நிலைப்பாட்டை நாமும் முன்னெடுப்பதில் அவதானம் தேவை. இன்றளவும் விடுதலைப்புலிகளை நோக்கி தொடர்ச்சியாக செய்யப்படும் குற்றச்சாட்டுகள் சகோதர குழுப் படுகொலை, முஸ்லீம்களின் வலுக்கட்டாய வெளியேற்றம், அறிவு ஜீவிகள் மீதான அடக்குமுறை, கட்டாய போர் பயிற்சி போன்றவை. எனது கருத்தில் விடுதலைப் புலிகளை விட கேள்வி கேட்காமல் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் மக்களே இதற்கு முழுப்பொறுப்பாளிகள். இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் அரசியல் ரீதியாக பலம்பெற்று கடந்த கால தவறுகளை பெருமளவு விடுதலை புலிகள் திருத்தி வருகின்ற போதும் மக்கள் இன்னமும் அதே உணர்ச்சியால் உந்தப்பட்ட போக்கிலேயே வளர்ந்து வருகின்றனர். உதாரணமாக சிங்கள ராணுவம் தொடர்ச்சியான இனப் படுகொலைகளில் ஈடுபடுகின்ற இன்றைய நாட்களில் இதுவரை எந்த விதமான தாக்குதல்களோ கொழும்பில் / சிங்கள மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் இதுவரை நடைபெறவில்லை. இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் வல்லமை இன்றளவும் விடுதலைப் புலிகளுக்கு உண்டென்பதும், ஒரு கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் செயபடுகிறார்கள் என்பது ராஜபக்‌ஷே உட்பட பலரும் அறிந்த உண்மையே. சிங்கள அரசும் இதர தமிழ் குழுக்களும் பெரும்பான்மை தமிழரின் நம்பிக்கையை இழந்துவிட்ட பின்னர் இலங்கை பிரச்சனை தொடர்பாக மக்களுக்கு இன்றளவும் நம்பிக்கை இருக்கின்ற ஒரே ஒரு அமைப்பு விடுதலப்புலிகள்தான். இந்தநிலையில் மக்கள் தம்மை சுய பரிசோதனை செய்து தமது அணுகுமுறையில் சில மாறுதல்களை கொண்டுவரவேண்டியது அவசியம்.

கடந்த சில நாட்களாக கருணாநிதி மீது இணையத்தில் வசைபாடி எழுதபடும் பதிவுகள் பெருமளவு அரங்கேறிவருகின்றன. கலைஞரின் அரசியலை எந்த நிலையிலும் ஒரு முன்மாதிரி அரசியலாக முன்வைக்க முடியாது என்பது தி மு கவின் உண்மைத்தொண்டர்கள் உட்பட எல்லாருக்கும் தெரியும். ஆனால் இன்றைய சூழலில் கலைஞர் இல்லாவிடத்து அங்கு ஆட்சி அமைக்ககூடிய வல்லமை உள்ள ஒரே நபர் ஜெயலலிதா தான். இப்போது யோசித்து பாருங்கள், கலைஞரை ராஜினாமா செய்ய சொல்பவர்கள் அவர் ராஜினாமா செய்து ஜெயலலிதா ஆட்சி அமைத்தால் என்ன நிலை வரும். ஜெயலலிதாவின் பாசக்கார உடன்பிறப்பாய் இருக்கும் கலிங்க வீரர் வைகோ அப்போது 19 மாதம் சிறையறை வாசம் செய்தார். இந்த நிலையில் ஜெயலலிதா ஆட்சி என்றால் சீமானுக்கெல்லாம் ஆயுட்சிறைதான். கலைஞர் மத்திய அரசில் திமுக வின் பதவிகளை அல்லது இருக்கைகளை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரலாம் என்பது பலரும் முன்வைக்கின்ற கருத்து. ஆனால் அப்படி செய்தால் அவரால் மாநில அரசில் கூட பதவி வகிக்க முடியாது என்பதே உண்மை. இந்த நிலையில் கலைஞர் எமக்கு நேரடியாக உதவுகின்றாரோ இல்லையோ, அவர் பதவியில் இருப்பது இலங்கைத் தமிழருக்கு சாதகமானது என்றே பார்க்கவேண்டும். இதை மீறி கலைஞர் ஒழிக, கலைஞர் எப்போ சாவார் என்றெல்லாம் செய்யப்படும் கருத்துகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும். தமிழ் நாட்டில் எந்த மீட்பரும் தோன்றி எம்மை உய்விக்கும் சந்தர்ப்பம் இல்லாதபோது, கலைஞருக்கு சரியான மாற்று இல்லாதபோது எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கலைஞர்தான். நேற்றைய பதிவில் நான் சொன்னதுபோல “ஒரு சமூக அலகுக்கான மாற்றீடு உருவாகும்வரை அதை விமர்சிப்பவன் கூட அந்த அலகை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.”

இதேபோல கடந்த வாரம் என் கவனத்தை ஈர்த்த இன்னொருவிடயம் கனேடிய ஊடகம் சம்பந்தப்பட்டது. கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் CTV என்கிற தொலைக்காட்சி மக்களிடையே பிரபலாமனது. சென்ற வாரம் இத்தொலைக்காட்சி ஈழப்பிரச்சனை தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றில் கலந்துகொள்ளுமாறு மக்களை அழைத்திருந்தது. கைத்தொலைபேசியின் குறுஞ்செய்திகளாக இச்செய்தி தொடர்ச்சியாக அனுப்பப்பட்டது. இவ்வாக்கெடுப்பின் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு தொலைபேசி இலக்கத்தை கொண்டிருக்கும். அத்தொலைபேசி இலக்கத்தை அணுகினால் அந்த தேர்வின் கீழ் வாக்கு பதியப்படும். 100,000 வாக்குகள் பதிவானால் சில நடவடிக்கைகளில் தாம் ஈடுபடுவோம் என்று தொலைக்காட்சி அறிவித்திருந்தது. போனவாரம் புதன்கிழமை தொடங்கிய இவ்வாக்கெடுப்பில் பல தமிழர்கள் சென்ற திங்கள் கிழமை வரை கலந்துகொண்டனர். இப்படியிருக்க திங்கள் பின்னேரம் தொலைக்காட்சி , வெள்ளிக்கிழமையே ஈழத்தமிழர்கள் பற்றிய வாக்கெடுப்பு முடிவடைந்துவிட்டதாகவும் ஆனாலும் தொடர்ந்தும் தமிழர்கள் தம் வாக்கெடுப்பில் ஈடுபடுவதாகவும், இது தமது அடுத்த வாக்கெடுப்பு (வேறேதோ பிரச்சனை) தொடர்பான முடிவுகளை பாதிக்கும் என்றும் அறிவித்திருந்தது. இப்போது இரண்டுவகையான குறுஞ்செய்திகளும் பரவ தொடங்க வாக்களிக்க வேண்டாம் என்று செய்தியனுப்பிய சிலர் துரோகிகளின் வலைப்பின்னலின் அங்கமாக இருக்ககூடுமோ என்று மற்றவர்களால் கருதப்பட்டனர். எந்த விடயததையும் உணர்ச்சிவசப்பட்டே பார்ப்பதை நிறுத்தும்வரை இது போன்ற விடயங்களை தவிர்க்கவே முடியாது.

(............இன்னும் சில அடுத்த பதிவில்)

Tuesday, February 3, 2009

நீங்களுமா சாரு நிவேதிதா அல்லது கருத்து சுதந்திரம்

சமூக பிரச்சனைகள் பற்றி அடிக்கடி தனது கருத்துகளை வெளிப்படையாக சொல்லிபருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. விஜய் டிவியில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிக்கடி இவர் கலந்து கொள்ளுபவர் இவர். அப்படி இவர் கலந்து கொள்ளும்போதெல்லாம் இவரை அறிமுகப்படுத்த “மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லக்கூடிய எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள்” என்று நீட்டி முழக்கி சொல்லப்படுவது உண்டு. காஷ்மீர் பிரச்சனை பற்றி (அஸாதி அஸாதி), சட்டக் கல்லூரி கலகம் பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் உயிர்மையில் இவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் பலத்த கவனத்தை பெற்றவை. ஆனால் இலங்கை பிரச்சனை பற்றி இவர் அண்மையில் பெரிதாக எதையும் எழுதவில்லை. எனக்கு தெரிந்தவரை 6 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை தவிர ஈழப்பிரச்சனை பற்றிய எந்த பதிவும் இவரால் மேற்கொள்ளப்படவில்லை (குறிப்பாக கடந்த இரண்டாண்டுகளில்). இந்த நிலையில் இன்று ”இலங்கையில் இருந்து” என்ற தலைப்பில் கொழும்பில் இருந்து தருண்யன் என்பவர் எழுதிய கடிதம் இவரது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை சாருவின் எதிர்வினை அல்லது பதில் இடப்படவில்லை. இந்த நிலையில் சாருவின் கருத்தும் இதுவா அல்லது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தருண்யனின் பதிவிடப்பட்டு இனி அது பற்றிய எதிர்வினை ஆற்றப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.

தருண்யன் முன்வைக்கும் கருத்துகள் தர்க்க ரீதியில் பலமானவை। ஆனால் அந்த தர்க்கங்கள் இரண்டுதரப்பாரையும் நோக்கி எழுப்பப்பட்டவையா என்ற கேள்வி எழக்கூடிய வகையில் அவரது கடிதம் அமைந்துள்ளது. இலங்கையில் நடைபெரும் பிரச்சனைகளை தமிழகத்தில் இடம்பெறும் உணர்ச்சியூட்டும் பேச்சுகள், கலகங்கள், எதிர்ப்புகள் போன்றவற்றால் மட்டும் நிறைவேற்றி வைக்கமுடியாது என்பது உண்மை. ஆனால் செய்தி தணிக்கை பலமாக அமுல் படுத்தப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெறும் பிரச்சனைகள் நோக்கி தமிழக, இந்திய மற்றும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்க இது போன்ற போராட்டங்கள் உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லை. எனது அலுவலகத்தில் முன்னர் ஒரு சிங்களவர் பணிபுரிந்து வந்தார். அவர் பிறநாடுகளை சேர்ந்த சக ஊழியர்களிடம் எல்லாம் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு. அங்கு வாழும் எல்லா தமிழர்களும் தேயிலை தோட்டங்களில் பணிசெய்ய இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வட பகுதியில் நடைபெறும் எல்லா கற்பழிப்புகளையும் தமிழர்களே செய்துவிட்டு ராணுவம் மீது போட்டு விடுகின்றனர் என்கிற வகையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான பல செய்திகளை கூறியிருந்தார். இதையே அவர்களும் பரவலாக நம்பி வந்தனர். அண்மையில் எமது அலுவலகத்தை அண்டிய பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு பற்றியும் சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் தமிழருக்கு நடைபெற்ற அநீதிகள் மற்றும் இலங்கை வரலாற்றில் தமிழரின் பங்கு போன்றவற்றை வழங்கியபோது போர்த்துக்கீஸ், கயணா, யூத இனங்களை சேர்ந்த சிலர் தாம் முன்னர் தெரிவித்த கருத்துகளுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டனர். இது போன்ற விளைவுகளை வித்திட்டு வைத்தது தமிழகம் தரும் தார்மீக ஆதரவுதான்.

நமக்கான கரிகாற் பெருவளவனை தேடுகின்றோமா என்றும் மக்கள் அழிவை தடுக்க வேறேதும் மார்க்கங்கள் இல்லையா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் இப்போது உள்ள நிலையை சற்று பார்க்கவேண்டும். கடந்த சில வாரங்களாக வைத்தியசாலைகளையும், அம்புலன்ஸ் வாகனங்களையும் சேதமாக்கியுள்ளது அரசாங்கம். அது தவிர பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்பட்ட இடங்களை நோக்கியும் தொடர்ச்சியான குண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இப்படியான நிலையில் மக்களின் மீது தொடர்ச்சியாக செய்யப்படும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி ஏன் எந்த நாடும் இதுவரை குரல் எழுப்பவில்லை?. அவர்களுக்கான அடிப்படை மருத்துவ உதவிகளாவது சரியாக நடைபெறுகின்றதா என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில்கள் இருக்கின்றதா?. மக்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகின்றது. இதே சமயம், இலங்கை ஒரு சிங்கள நாடு, சிறுபான்மையினர் எமக்கு கீழே வாழலாம் என்றும், துட்ட கைமுனுவின் காலம் மீண்டும் திரும்பிவிட்டது என்றும் சிங்கள தலைவர்கள் பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக்கொண்டிருகின்ற நிலையில் விடுதலை புலிகள் அனுமதித்தால் கூட மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் போவார்களா என்ற கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அண்மையில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளுமாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றதாக சிங்கள மக்களே குற்றம் சுமத்தியுள்ள நிலையில் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களுக்கு என்ன சதவீதம் பாதுகாப்பு அல்லது உயிர்வாழும் உரிமை வழங்கப்படும் என்பது விடையே இல்லாத வினா. போராளிகளை விடுதலைப்புலிகள் கட்டாயமாகவே போராட்டத்தில் சேர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டும் அதேவேளை போராளி குடும்பத்தினர் எல்லாரையுமே ராணுவம் புலிகளாகவே பார்க்கின்றது. இதில் இருக்கும் முரண் நிச்சயம் கவனிக்கப்படவேண்டும். விடுதலைப்புலிகள் போராளிகளை கட்டாயமாக/பலவந்தப்படுத்தி போராட்டத்தில் இணைத்தால் ராணுவம் அந்த போராளிகள் குடும்பம் மீது அனுதாபம் தானே காட்டவேண்டும்; அப்படியிருக்க ஏன் ராணுவம் அவர்களையும் புலிகளாகவே பார்க்கின்றது? விடுதலப்புலிகள் பாவிக்கும் எல்லா ஆயுதங்களும் ராணுவத்தினரிடம் இருந்தே பெறப்பட்டவை என்பது இலங்கைத் தமிழ் மக்கள் நகைச்சுவையாக சொல்லும் ஒரு செய்தி. அதுபோல விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவும் ராணுவத்தினராலேயே அதிகரிக்கப்பட்டது என்று வருங்காலம் பதிவு செய்யும்.


(2)


ஈழப்போராட்டம் பற்றிய கருத்து சுதந்திரம் பற்றிய நோக்கிலேயே இந்த கடிதம் இருந்திருக்குமானால், இலங்கையில் கருத்து சுதந்திரம் எப்போது செத்துவிட்டது. இது பற்றி ஷோபாசக்தி, இரயாகரன் போன்றவர்கள் நிறைய எழுதிவிட்டார்கள்। நிறையப்பேர் எழுதாமல் நண்பர்களிடம் மட்டும் பேசிக்கொண்டுள்ளனர்। “எல்லாக் கருத்தையும் வளர விடக்கூடாது” என்று சிலர் சொல்லலாம், ஆனால் அதைத்தான் “எல்லாருமே” (ராணுவம், விடுதலைப்புலிகள், இதர தமிழ் குழுக்கள்) கூறுகின்றனர்। ஷோபா சக்தியின் கொரில்லா நாவலில் வரும் ஒரு பேராசிரியர் கருத்து சுதந்திரம் பற்றி அடிக்கடி கூறுவார்। ஒருமுறை பேராசிரியரின் மனைவி பற்றி ஒருவர் கருத்து தெரிவிக்க (பேராசிரியரின் மனைவியுடன் உடலுறவு கொள்வது தன் ஆசை என்று) அந்தோனிதாசன் அவரை தாக்க முற்பட பேராசிரியர் அது அவனின் கருத்து சுதந்திரம் என்று சொல்லி சமாதானம் செய்வார். பிற்பாடு அதே பேராசிரியர் தனது மனைவி இன்னொருவனுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்றறிந்து கொலை கூட செய்கிறார். இது பற்றி எனது நண்பன் ஒருவன் அண்மையில் சொன்னபோது பின் நவீனத்துவ இலக்கியங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ”ஆசிரியன் இறந்துவிட்டான்” என்ற ரொலான் பார்த்தேஸ் Roland Barthesன் (தகவலை தந்துதவிய டிஜே தமிழனுக்கும் அந்நியனுக்கும் நன்றிகள்) வரிகளைதான் இங்கே நினைவு கூறவேண்டும் என்றேன். பொய் சொல்லாதே என்பது ஒரு பொது அறம். ஆனால் எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக பொய் சொல்லியிருப்பர். அதற்காக பொய் சொல் என்பதை எவரும் அறமாக்குவது இல்லைதானே. கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை. தனிமனித சுதந்திரம். அது எங்கே மீறப்பட்டாலும் அது மிகுந்த கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்படவேண்டியது. இதில் ஒரு வித மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்ககூடாது. ஏனென்றால் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்ற சமுதாயத்தில் தனிமனிதனின் கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவன் அடிமையாக்கப்படுகின்றான். பாஸிஸம் தலை தூக்குகின்றது. இலங்கையில் இன்றைய யுத்த சூழலில் இப்படியான நிலை நிலவுகின்றது என்பது நடு நிலையாளர்கள், நடுநிலையாளர்கள் என்று சொல்லி வருபவர்கள், ராணுவ ஆதரவாளர்கள் மற்றும் புலி ஆதரவாளர்கள் என்று அனைவருமே சொல்லுகின்ற் குற்றச்சாட்டு. விடுதலைப் புலிகள் மீதும் இந்த குற்றச் சாட்டு நிலவுகின்றது. அதே நேரம் தமிழ் மக்கள் அனைவரையுமே புலிகள் என்று கூறி ஒரு இன அழிப்பில் சிங்கள ராணுவம் ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் விடுதலைப் புலிகளை நிராகரிப் பவர்களிடம் விடுதலைப்புலிகளுக்கு மாற்றாக நடைமுறைச் சாத்தியமான வேறேதும் ஒரு தீர்வு இருக்கின்றதா என்ற கேள்வி முக்கியமானது. ஒரு சமூக அலகுக்கான மாற்றீடு உருவாகும்வரை அதை விமர்சிப்பவன் கூட அந்த அலகை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.