Friday, May 2, 2008

பிள்ளைகள் கூடி பிதாமனுக்கு அஞ்சலி

நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது
நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது

(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).




சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற போக்கில் 200 கதைகளும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை வாசித்தபோது இவர்கள் மாமரத்தின் பயன் என்ன என்று கேட்டால் கீழிருந்து சீட்டாடலாம் என்று எழுதுவார்களோ என்று தோன்றியது. சுஜாதாவிற்கு விஞ்ஞானி, ஓவியர், முகாமையாளர், இசைவல்லுனர், திரைப்பட வசனகர்த்தா, திரைக்கதையமைப்பாளர் என்று பல முகங்கள் இருந்தாலும் அவரது அடையாளம் அவரது எழுத்தும் இலக்கியப்பணிகளுமே.


இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கலைஞர் முதல் … என்று எழுதிய காரணம் தற்போது எழுது கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் மிக நீண்டகாலமாக எழுதிக் கொண்டிருப்பவர் கலைஞர் என்பதும் எழுத்துப் பயணத்தில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் கையெழுத்துப்பிரதி எழுத்தாளர்கள் என்பதுமேயாகும். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இப்படி முதிர்ந்த, முதிர்ந்து வருகின்ற, முதிர போகின்ற பல தரப்பட்ட எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்த சுஜாதா, அதே சமயத்தில் அவர்களாலும் கவரப்பட்டு, அவ்விதம் தன்னை கவர்ந்த ஆக்கங்களை பரப்புகின்ற ஒரு இலக்கிய பிரச்சாரகராகவும் விளங்கியிருக்கிறார் என்பதேயாகும்.


புதிய அல்லது இளைய வாசகர்களை பொறுத்தவரை சுஜாதா ஒரு எழுத்தாளர் என்பதையும் தாண்டி, நல்ல எழுத்துக்களை அறிமுகம் செய்து வைக்கின்ற ஒரு நண்பராக எடுத்த பங்கு மிக முக்கியமானது. என்னுடைய சொந்த அனுபவத்தில் சல்மா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், கி.ரா, சாரு நிவேதிதா, மகுடேஸ்வரன் போன்றவர்களின் பெயர்களை கூட சுஜாதா இல்லாவிட்டால் நான் தெரிந்துகொண்டிருக்கமாட்டேன். சுஜாதாவை வாசிக்க முன்பாக என்னுடைய இலக்கிய உலகம் என்பது தமிழ்வாணன், சிவசங்கரி, பாலகுமாரன் என்ற அளவில்தான் இருந்தது.


திரைப்பட பாடல்களில்கூட வைரமுத்து பாடல்கள் புனைவது குறைந்த 2000களின் பின்னர் ஒரு வெறுமையை நான் உணர தொடங்கியிருந்த காலப்பகுதியில் அவர் காதல் திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதியிருந்த “ஒரு குழந்தை என நான் நினைத்திருந்தேன்; உன் கண்களிலே என் வயதறிந்தேன்” என்கிற வரிகளை சிலாகித்து எழுதியிருந்தார். பிற்பட்ட காலத்தில் நா. முத்துக்குமார் உண்மையாகவே மருதகாசி – கண்ணதாசன் – வைரமுத்து என்று தொடர்ந்த பாடலாசிரியர்கள் வரிசையிலே தன்னை பலமாக நிலை நிறுத்திக்கொண்டார். (கவிஞர் வாலி பற்றி இங்கே குறிப்பிடவில்லை காரணம், கண்ணதாசனுக்கு சமகாலத்தவரான வாலி கண்ணதாசனுக்கு எதிர்கடை விரித்ததை போல வைரமுத்துவிற்கும் போட்டியாளராகவே திகழ்ந்தார். இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றியது வெறும் 4 ஆண்டுகள் தான், ஆனால் இப்போதும் கூட இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றார்கள்)


அதேபோல யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மனதை திருடி விட்டாய் திரைப்படத்தில் வருகின்ற மஞ்சக் காட்டு மைனா… என்ற பாடலையும் வெடுவாக சிலாகித்து எழுதியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களிலேயே யுவனும் ராம், காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலணி என்று இசையுலகின் உச்சத்தை எட்டினார். இவற்றிற்கெல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பாக கணையாழி இதழில் கமலஹாசன் பற்றி எழுதியபோது “தமிழின் நவ சினிமாவுக்கான எதிர்காலத்தை இந்த இளைஞரிடம் பார்க்கிறேன். இப்பாது அவருக்கு வயது 24” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல ரோஜா திரைப்படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் “குழந்தை முகம் கொண்ட இந்த இளைஞரிடம் அபார இசை ஞானம் இருக்கின்றது. He will go for places” என்று ஏ. ஆர். ரஹ்மான் பற்றி கூறியிருந்தார். சுஜாதா பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல அவருக்கு நல்ல கவிதைகளை (கவிதை என்று மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டிருந்தார், என்னை பொறுத்தளவில் எந்த ஒரு விடயத்திலும்) இனம் காணுகின்ற விசேஷமான மோப்ப சக்தி ஒன்று இருந்திருக்கவேண்டும்.


சுஜாதா என்றவுடன் குறும்பு கொப்பளிக்கின்ற அந்த வசன நடையையும் இளமையையும் அடுத்து ஞாபகம் நிற்பது மரபுகளை உடைத்தது. இன்று மிகப் பிரபலமாகியுள்ள பத்தி எழுத்தினை (Column writing / blogging) அறிமுகப்படுத்தியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் கூட சுஜாதாதான். என்ன இவர் டைரி எழுதுவது போல எழுதிகிறாரே, இதையெல்லாம் கூட பிரசுரிக்கின்றார்களே என்று விசனப்பட்டவர்கள் கூட இருக்கின்றார்கள். சுஜாதாவின் வண்ணான் கணக்கைகூட பிரசுரிக்ககூடிய வணிகப்பத்திரிகைகள் என்ற விமர்சனம் எழுந்தபோது சாவி உண்மையாகவே சுஜாதாவின் வண்ணான் கணக்கை வாங்கி பிரசுரித்தார் என்றும் சொல்வார்கள். சொல்லப்போனால், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றது பெற்றதும் போன்றனவே இன்றைய பத்தியெழுத்துக்களுக்கெல்லாம் முன்னோடிகள் மட்டுமல்ல முன்மாதிரிகளும் கூட.


அறிவியல் ரீதியான பார்வை கொண்ட சுஜாதா தமிழ் மொழி பற்றி தமிழர்களிடம் நிலவுகின்ற முட்டாள்தனமான சில கொள்கைகளை கேலி செய்தார். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது, முதல் மனிதன் பேசியது தமிழ் போன்ற கற்பிதங்கள் தமிழ் மொழிக்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்று டாப் 10 துரோகங்களில் பட்டியல் படுத்தினார். அளவுக்கு அதிகமாகப் பேசுவது, உணர்ச்சிவசப்படுவது எந்த விடயத்தையும் மிகைப்படுத்திச்சொல்லுவது போன்ற தமிழர்களின் கல்யாண குணங்களையும் பலமுறை விமர்சனம் செய்தார். (எந்த விடயத்தையும் மிகைப்படுத்தும் பழக்கம் தமிழர்களிடம் கலிங்கத்துப் பரணி காலம் தொட்டு நிலவுகின்றது. அரங்கம் நிறைந்த கூட்டம் என்றால் மைக் செட் காரரையும் சேர்த்து ப்தினொரு பேர் என்று அர்த்தம்). இந்த குணங்களை சிலர் திரிவுபடுத்தி சுஜாதா பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இப்படி எழுதுகிறார் என்றும் அவர் தமிழ் மொழிக்கு எதிரானவர் என்றும் சொன்னது உண்டு. சுஜாதாவின் பாணியில் சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். என்னை பொறுத்தவரை சுஜாதாவை ஜாதி ரீதியாக பிரிப்பது காற்றுக்கும் நீருக்கும் ஜாதி சொல்வது போன்றது.


ஏராளமான ஈழத்தமிழ் வாசகர்களை கொண்டிருந்தவர் சுஜாதா. அதே சமயம் ஈழத்து எழுத்துக்களை அவர் வெகுவாக நேசித்தும் இருக்கின்றார். மஹாகவி, ஜெயபாலன் ஆகியோரின் கவிதைகளை அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டியும் வந்திருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அவர் எழுதிய “ஒரு லட்சம் புத்தகங்கள்” தமிழ் மக்களின் கண்ணீருக்கு சாட்சியாக காலமெல்லாம் இருக்கப்போகும் ஒரு படைப்பு. அதேபோல தமது சுயலாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை பலர் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய கொலை அரங்கம் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு குறுநாவல். (83ல் எழுதப்பட்ட இக்கதையில் வருகின்ற உத்தம் போன்ற கதாபாத்திரங்களை இப்போதும் கூட காணலாம்). சுஜாதா பங்கேற்ற “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்ற காட்டமான விமர்சனம் பலரிடம் உண்டு. உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற மிகுந்த சென்சிட்டிவ் ஆன பிரச்சனைகளை பதிவு செய்வதில் நடைமுறையிலும் சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களாலும் மிகுந்த தடைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.


தனது ஆரம்பகால எழுத்துக்களில் மிக தீவிரமாகவும் வலுவாகவும் தனது கருத்துக்களை சொன்ன சுஜாதா தனது பிற்காலத்தில் தனது விமர்சனங்களை சற்று மென்மைப்படுத்திக்கொண்டார். இதைப்பற்றி கேட்டபோது நான் நண்பர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தாராம். இதைப்போன்ற இக்கட்டான தருணங்களை நடைமுறையில் நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம். சுஜாதா எல்லாவற்றையும் பற்றி எழுதுவார் ஆனால் எந்தப்பக்கமும் சார்பாகவும் எழுதமாட்டார் என்று அவர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஒரு பாராட்டாகவும் கருதலாம். இதைப்பற்றி ஒருமுறை “நாங்கள் எல்லாம் எழுதத்தொடங்கும் போது சூரியனை சுட்டெரிப்போம், பூமியை புதிதாக அமைப்போம் என்றுதான் எழுத தொடங்கினோம். ஆனால் ஒரு மண்புழுவை கூட எம்மால் மாற்றி அமைக்கமுடையாது என்று பின்னர்தான் புரிந்துகொண்டோம்” என்று கூறியிருந்தார்.


எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சுஜாதா. அவருக்கு கட் அவுட்டுகள் கூட வைக்கப்பட்டிருக்கின்றன. எனது நண்பர்கள் மத்தியில் நான், தயாபரன், குணாளன் மூவரும் தீவிர சுஜாதா ரசிகர்கள். ஒரு எட்டு வருடங்களின் முன்பாக கொழும்பில் இருந்த எனது நண்பனுடன் தொலைபேசிக்கொண்டிருந்தேன். அது மிக தீவிரமாக பாலகுமாரனை வாசித்துக்கொண்டிருந்த காலம். அப்போது என் நண்பன் கூறினான் “நீ போற போக்கில சுஜாதாவையே மறந்திடுவாய் போல இருக்கே” என்று. இல்லையடாப்பா, என்ன இருந்தாலும் அவர் தான் எங்கட குரு என்று. மின்சாரம் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணபகுதியில் எமது பொது அறிவு தேடல்களுக்கு ஒரே வடிகாலாய் இருந்தவை அவரது ஏன்? எதற்கு ? எப்படி?, தலைமைச்செயலகம், அறிவோம் சிந்திப்போம் போன்ற புத்தகங்கள் தான். அங்கே 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஏன்? எதற்கு? எப்படி? யில் படித்த குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி நானும் நண்பன் குணாளனும் பேசி பேசி ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே எமக்கு பட்டப்பெயராகவும் மாறிவிட்டது. அந்நாட்களில் எல்லாம் குரு என்றுதான் சுஜாதாவை குறிப்பிடுவோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது, சுஜாதா எம்மை அணுகாது, அகலாது, குருவுமாகி நின்ற ஒரு தோழனாகத்தான் இருந்திருக்கிறார் என்று. என்ன, எனக்கும் அவருக்கும் ஆக நாற்பத்தைந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம்.