Monday, December 29, 2008

அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்

அபியும் நானும் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஓரிரு தினங்களின் பின்னரே கனடாவில் வெளியானது. அண்மைக்காலங்களில் நான் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இது. வைரமுத்து – வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணி ஏற்கனவே மொழியில் ஒரு இனிய இசை அனுபவத்தை தந்த பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதிலும் பாலா உயிரை தந்து பாடி இருந்த அழகிய அழகிய... பாடலும் சின்னம்மா கல்யாணம்... பாடலும் எப்படியாக படமாக்கப்பட்டிருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிரகாஷ்ராஜ் மீது ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல ஒரு ரசனையாளர் என்றளவிலும் ஒரு மரியாதை உண்டு. இந்த நேரத்தில் படத்தை இங்கே திரையிடவில்லை என்றதும் நல்ல படங்களை திரையிடுவதில்லை என்ற தம் வழக்கத்தை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக ஓரளாவு சொல்லத்தக்க சென்னை 600 028, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் இங்கு திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் பிரகாஷ் ராஜ் பூங்கா ஒன்றில் பிருத்விராஜை சந்தித்து தனது மகளுடனான தன் அனுபவங்களை சொல்வதாக செல்கின்றது. திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நதி போல செல்கின்ற கதையும் அதில் இயல்பாகவே கலந்த்விடப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகளும் ஒரு இனிய அனுபவத்தை படம் பார்ப்பவருக்கு கொடுக்கின்றன. இயல்பான, தெளிவான காதலர்களாக திரிஷாவும், கணேஷும் காட்டப்படுகிறார்கள். திரைப்படத்தில் போகிற போக்கில் ஒரு சர்தார்ஜி, அவர்களை கேலி செய்து கொண்டிருந்த தமிழர்களிடம் ஒரு ரூபாயை கொடுத்து அதை காண்கின்ற பிச்சை எடுக்கும் சர்தார்ஜியிடம் கொடுக்க சொல்வதாகவும், இன்றுவரை அந்த ஒரு ரூபாய் தமிழனிடமே உள்ளதாயும் சொல்லும் காட்சி “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி” என்று எம்மவர்களை பற்றி எங்கோ படித்ததை நினைவூட்டியது. தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்லிக்கொண்டேயிருக்காமல் இப்படியான படங்களை அரங்கிலே சென்று பார்ப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2

ஆனந்த விகடனின் தற்போதைய தரம் பற்றிய ஒரு பதிவை கடந்த வாரம் வாசித்திருந்தேன். இதே கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். புதிய அளவில் ஆனந்த விகடன் வெளியானபோது மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் உள்ளடக்கம் பெருமளவான வண்ணப்படங்களாலேயே நிறைக்கப்பட்டிருக்கின்றது. அகமும் புறமும் என்று வண்ணதாசன் எழுதிய பிறகு தீதும் நன்றும் என்று நாஞ்சில் நாடன் எழுதிவருகிறார். பத்தி எழுத்துவகையை சேர்ந்த கட்டுரைகள் இவை. இதற்கு முன்னர் இதே விதமாக ஆனந்த விகடனில் எழுதிய சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது இவர்களின் எழுத்து இறுக்கம் குறைந்ததாகவே தெரிகின்றது. நாஞ்சில்நாடனின் நஞ்சென்றும் அமுதென்றும் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை தொகுதி. எந்த விதமான ஆவேசமும் இல்லாமல் ஒரு மெல்லிய த்வனியில் தனது கருத்துக்களை மிக நெருக்கமான ஒருவருடன் கதைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக சொல்லியிருப்பார். அதேபோல வண்ணதாசனின் சிறுகதைகளும் என்னை கவர்ந்திருக்கின்றன. வண்ணதாசனின் படைப்புகள் அவற்றில் வருகின்ற ரசனை பூர்வமான சொல்லாடல்களுக்கு பேர்பெற்றவை. அதிலும், அவரது கட்டுரைகள். அகமும் புறமும் எழுத தொடங்கு முன்பாக விகடனில் இவரது பேட்டி ஒன்று வெளியாகி அடுத்த இதழிலேயே அவர் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால் அவர் எழுதிய அகமும் புறமும் அவரது முன்னைய படைப்புகளுடன் ஒப்பிடும்போது என்னை பாதித்த விதம் சற்று குறைவாகவே இருந்தது. வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற அழுத்தம் சிலவேளை இவர்களது படைபாற்றலை பாதித்திருக்கலாம்.

அதுபோல கடந்த சில மாதங்களாக மாறி மாறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க பற்றி மாறி மாறி எக்ஸ்ரே ரிப்போர்ட் என்கிற பெயரில் ரிப்போர்ட்கள் வந்தன. அதுவும் அழகிரி ராஜ்யம் பற்றியும், இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தவர்களதும் விபரங்களுடனும் வந்த கட்டுரைகள் முக்கியமானவை. ஆனால் இதேநேரம் விகடன் கிராமம், கிராமமாக விஜயகாந்துடன் டூர் அடிக்க தொடங்கினான். இது கிட்ட தட்ட இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுத் தீர்வாக மக்கள் விஜயகாந்தை பார்ப்பது போன்ற ஒரு விம்பம் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றது. ஒரு தனிக்கட்சியாக விஜயகாந்த் பிரமிக்க தக்க அளவு வளர்ந்திருந்தாலும் அவரிடம் இருக்கும் மாற்று தீர்வு என்ன? என்ற அடிப்படை கேள்விக்கு இன்றுவரை எவருமே பதிலளிக்கவில்லை. கறுப்பு எம். ஜி. ஆர் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட இலவச பொருட்களை தருவதாக கூறி வாக்குகளை அள்ளும் கலாசாரத்தை இன்னும் வளார்த்துவிடுவாரோ என்றே எண்ண தோன்றுகின்றது. விகடன் மட்டுமில்லாமல் குமுதம் உட்பட பல பத்திரிகைகள் விஜயகாந்தை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றன. இயக்குனர் மகேந்திரன் வன்னி சென்று திரும்பியபின்னர் குமுதத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தை வன்னியில் சின்ன பிரபாகரன் / சின்ன தலைவர் என்று அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் தான் அப்படி ச்ரு செய்தியை கூறவேயில்லை என்று மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, குமுதமும் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. சன் குழுமம் என்ற பெயரில் பெரும்பான்மை மீடியாக்களை எல்லாம் தி. மு. க வளைத்து போட்டபின்னர், அரசியல் ரீதியான ஒரு பின்புலம் வேண்டும் என்பதாலேயே ஆனந்தவிகடன் இப்படி விஜயகாந்த் புகழ் பாடலாம் என்று அண்மையில் எனக்கு அறிமுகமான நண்பர் ரமணன் சொன்னது சரிபோலதான் தோன்றுகின்றது. விஜய்காந்த் பற்றிய விமர்சனங்களையும் ஆனந்த விகடன் சரியான முறையில் முன்வைக்காத இந்நாட்களில் அதே ஆனந்த விகடனில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் வந்துள்ளாரே என்று கேட்டபோது “கழுதை என்று ஒன்று இருக்கிறது, குதிரை என்று ஒன்று இருக்கிறது இப்போது கோவேறு கழுதை என்று ஒன்று வந்துள்ளது” என்று சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது.

3

நவீன இலக்கியம் மீதான எனது ஈடுபாட்டில் “காலம்” இதழாசிரியர் செல்வம் அவர்களின் பங்கு முக்கியமானது. யானையுடன் மோதாதே எலியே என்ற பொருள்பட கருணாநிதி எழுதிய ஒரு கவிதைக்கு (கருணாநிதி ஒரு பிரசார எழுத்தாளரே தவிர அவர் இலக்கியவாதி அல்ல என்று இளையபாரதியின் புத்தக வெளியீட்டை முன்வைத்து ஜெயமோகன் சொன்னதற்காக இக்கவிதை எழுதப்பட்டதாய் நினைவு) எதிர்வினையாக ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு விரைவிலேயே பதிலும் வந்தது. அவர் மூலமாகவே செல்வத்தின் அறிமுகமும் கிடைத்தது. அதற்கு முன்பொருமுறை ஒரு கண்காட்சியில் செல்வத்திடம் இருந்து கணையாழியின் தொகுப்பு ஒன்றை பெற்றிருக்கிறேன். சென்ற வாரம் அவரை எதேச்சையாக சந்தித்தபோது காலம் சஞ்சிகையின் 31வது இதழையும் கனவாகிப்போன கச்சதீவு என்ற நூலையும் பெற்றுக்கொண்டேன். கனடாவின் குறுகிய வணிக சாத்தியங்களுக்கு மத்தியில் காலம் சிறப்பாகவே வந்துகொண்டுள்ளது. இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இதே போல கருணாமூர்த்தியின் கதையில் தன் பால்ய சினேகிதங்களை தேடி அலையும் ஒருவனின் அனுபவம் சொல்லப்படுகின்றது. இலங்கை செல்லும் கதை நாயகன் இறுதியில் பாலசந்திரன் என்ற தன் பால்யசினேகிதனை காண்கிறான். தான் எழுதிய புத்தகத்தை பரிசளித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கின்றான். அந்தரங்கமான பழைய நினைவுகள் எல்லாம் கிளறப்படுகின்றன. தான் திரும்பி செல்ல முன்னர் மறுமுறை வருவதாக வாக்களித்துவிட்டு விடைபெறும்போது நண்பன் (பாலசந்திரன்) இவர் கொடுத்த புத்தகத்தின் பின்புறத்தை பார்த்தவாறு (அதில் அ. முத்துலிங்கம் எழுதிய முன்னுரை இருக்கின்றது) “அ. முத்துலிங்கம் என்று எங்களோட யாரும் படிக்கேல்லையே.....நீ யார் மச்சான்.... உனக்கு என்ன பெயர்?” என்று கேட்கிறான். அத்துடன் கதை முடிகின்றது. ஒரு கதையை சரியான இடத்துடன் நிறுத்திவிடுவதில்தான் அதன் வெற்றி உள்ளது என்பார்கள். அதனை திறம்பட செய்துள்ளார் கருணாமூர்த்தி அவர்கள்.

4.

கடந்த சில நாட்களாக இணையத்தில் பெண்புலிகளின் இறந்த உடல்களை சிங்கள ராணுவத்தினர் புணர்ந்து அதை வீடியோவில் எடுத்ததாக வந்த வீடியா துண்டுகள் பெரும்பாலானவர்களின் மனதை பாதித்தன. ஈழப்போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவற்றை பற்றி சரியான முறையில் வந்த பதிவுகள் குறைவென்பது எனது கருத்து. அண்மையில் டிசே தமிழன் எழுதிய ஒரு சிறுகதை சரியான முறையில் வாசகன் மனதிலும் இந்த பாதிப்பை கொண்டுசென்றிருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்ட இவர் என்னை ஒரு கட்டுரையாளராக, ஒரு புனைவு எழுத்தாளராகதான் பெருமளவு கவர்ந்திருக்கிறார். இனி நீண்ட காலத்துக்கு, உங்களை பாத்தித்த சிறுகதை எது என்று கேட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த கதையை கூறலாம்

Monday, December 22, 2008

கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்

பொதுவாக எந்த ஒரு விடயத்திலும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதிலும் கலைகள், விளையாட்டுத்துறைகளில் ஏற்படுகின்ற ஏகப்பிரதிநிதித்துவம் அந்த துறைகளின் வளர்ச்சியை முற்றாக ஸ்தம்பிக்க செய்துவிடும் என்பது என் நம்பிக்கை. மேலும், ஏகப்பிரதிநிதித்துவம் எல்லா மாற்று முயற்சிகளையும் தன் ராட்சச கரங்களால் நசுக்கி விடுகின்றது என்பதும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நளவெண்பா காலத்து சொல்லாடலுடன் அந்த துறைகளை நிறுத்தி விடும் என்பதும் எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஒரு துறை இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்று அந்த துறையில் பலர் உச்ச கட்ட புகழுடன் / வெற்றிகளுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது எனது கருத்து.

கிரிகெட்டில் முடிசூடா மன்னர்களாக கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாறி மாறி திகழ்ந்த மேற்கிந்திய, அவுஸ்திரேலிய அணிகள் அடிக்கடி (முன்பு மேற்கிந்தியா இருந்தது, இப்போது அவுஸ்திரேலேயா மட்டுமே) எதிர் அணிகளால் சோதனைக்குள்ளாக்கப்படுவது கிரிக்கெட் ஆரோக்கியமான வளார்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. இந்தியாவுடன் டெஸ்ட் தொடரிலும், சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மும்முனை தொடரிலும், தற்போது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விகள் அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி என்பதாகவே கருதப்படவேண்டும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற அளவில் இருந்த அணி அவுஸ்திரேலிய அணி. இதற்கு சரியான உதாரணம் 1994-95ல் நடைபெற்ற ஒரு ஒரு நாள் தொடர். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டி தொடர் ஒன்று நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 3 / 4 போட்டிகளில் ஆடி இறுதி போட்டியில் நுழையும். 94-95ல் அவுஸ்திரேலியா இந்த தொடரில் இங்கிலாந்து, ஸிம்பாப்வே அணிகளுடன் நான்காவது அணியாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணியையும் (Australia – A) நுழைத்தது. இதில் எல்லார் புருவங்களும் உயரும்படி இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியாவுடன் மோத அவுஸ்திரேலிய இரண்டாவது அணி தெரிவானது. அதாவது, ஏற்கனவே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகளைவிட வலிமையாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணி இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய அணியின் தூண்களாக இருந்த மத்யூ ஹைடன், க்ரேக் ப்ளீவட், ரிக்கி பொண்டிங், மைக்கேள் பவான் போன்றவர்கள் அதன் இரண்டாவது அணியில் ஆடினார்கள். இந்த இறுதி போட்டி ஐ சி சி யால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் பின்னர் அவுஸ்திரேலியா இப்படியான முயற்சியையும் செய்யவில்லை. 1992ல் மேற்கிந்திய அணியின் மாபெரும் வீரர்களான ரிச்சர்ட்ஸ், மார்ஷல், க்ரீனிட்ஜ், டுஜோன் போன்றவர்கள் ஒரேயடியாக ஓய்வுபெற, அவுஸ்திரேலியா மெல்ல மெல்ல ஆதிக்கம் பெற்றது. அதே நேரம் ஷான் வார்ணின் வருகையும் அமைய, ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் புகழ்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி ஒரு முழுமையான அணியாக உருவெடுத்தது. ஒரு அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஒரு சுழல் பந்து வீச்சாளார் தன்னும் இருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி. உலகில் அசைக்க முடியாத அணியாக மேற்கிந்தியா உருவெடுத்த 70களில் அவ்வணி தலைவர் க்ளைவ் லோயிட் “சந்திரசேகர் போன்ற ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் இருந்தால் எம்மை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. ஷான் வார்ணின் மாய விரல்களில் சிக்கி தவித்த பாட்ஸ்மன்களை பற்றி கதை கதையாக சொல்லலாம். ஒரு சுழல் பந்து வீச்சாளனின் எல்லா சாத்தியங்களையும் செய்து காட்டியவர் அவர். விக்கெட்களின் எண்ணிக்கையில் முரளி அவரை தாண்டி போனாலும், அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் சுழல் பந்து கைகொடுக்காத மைதானங்களில் ஷான் வார்ண் பந்து வீசினார் என்பதை கவனித்து கொள்ளவேண்டும். அந்த நாட்களில் எல்லாம் பந்து எகிறும் அவுஸ்திரேலிய பிட்ச் என்றாலே பாட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம்தான். மைதானத்தில் கரணமடித்தும், வழுக்கி சென்றும் அவர்கள் செய்யும் களத்தடுப்பை ஒரு அதிசயம் போலதான் மற்ற அணிகள் பார்த்துக்கொண்டிருந்தன.


இதன் பின்னர் தென்னாபிரிக்காவின் வருகையுடன் எல்லா அணியினரும் களத்தடுப்பிலும், பல்துறை ஆட்டக்காரர்களை அணியில் அதிகம் இணைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்க கிரிக்கெட் நவீனப்படுத்தப்பட்டது. பாட்ஸ்மன், பந்து வீச்சாளார் என்றில்லாமல் களத்தடுப்பு என்ற வகையிலும் வீரர்கள் ரசிக்கப்பட்டனர். பாட்டிங்கை பொறுத்தவரை ஒரு சராசரி வீரரான ரோட்ஸ் ஒரு நட்சத்திர வீரராக மதிக்கப்பட்டார். இந்திய அணி பல ஆட்டங்களில் ரொபின் சிங்கை சேர்த்துக்கொண்டது. தனது மெதுவான துடுப்பாட்டத்தை தாண்டியும் ரொஷன் மகனாம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சித்து, லக்‌ஷ்மண் போன்ற இந்திய வீரர்கள் அணியை விட்டு ஓரங்கட்டப்பட அவர்களின் மோசமான களத்தடுப்பும் உடல் தகுதியும் காரணாங்களாக காட்டப்பட்டன இதே சமயம் அணிகள் வேற்று நாட்டவரை சேர்ந்தவரை பயிற்றுவிப்பாளாராக கொண்டுவர தொடங்க, ஆசிய அணிவீரர்களுக்கு மற்ற அணிவீரர்களின் மனநிலை கற்றுத்தரப்பட்டது. இதே காலப்பகுதியில் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆர்வம் இந்திய, இலங்கை அணி வீரர்களிலும் பிரதிபலித்தது. அவ்ஸ்திரேலிய, தென்னாபிரிக்க வீரர்கள் போல இவர்களும் வேகமான உடல் இயக்கங்கள் மூலம் களத்தடுப்பில் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தினர். முக்கியமாக டில்ஷான், முரளிதரன், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரய்னா, கைஃப் போன்றாவர்கள். உலகமயமாக்கல் என்கிற பலத்த கேள்விகளுக்குள்ளான ஒரு இயல்பினால் வந்த ஒரு சாதகமான நிலை எல்லா நாட்டு இளைஞர்களும் கிட்ட தட்ட ஒரே மனநிலைக்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாவற்றுடன் சமரசம் செய்துகொள்வது என்ற தென்னாசிய மனநிலையை விட்டு இளைஞர்கள் வெளிவந்து எதையும் ஒரு சவாலாக, போராட்ட மனப்பாங்குடன் எதிர்கொள்ள தொடங்க கிரிக்கெட்டின் தீர்மானிக்கப்பட்ட கூறுகள் அனைத்தும் ஒரே நாளில் தகர்ந்து போயின. ஃப்ளிண்டொஃப் உடன் சூடாக விவாதித்த பின்னர் யுவ்ராஜ் அடித்த ஆறு 6களும், அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களுக்கு ஈடாக இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதும், ஆண்ட்ரே நெல்லை சுற்றி ஸ்ரீ சாந்த் ஆடிய ஆட்டமும், தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் தன் பந்து வீச்சால் மட்டும் எதிர்கொண்ட முரளியும், தமக்கு எதிராக செய்யப்பட்டது அநீதி என்றவுடன் உடனே இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இருந்து விலகிக் கொண்ட இன்ஸமாமும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.


அத்துடன் நேரடி ஒளிபரப்பும், பலகோண காமரா வசதியும் ஒவ்வொரு ஆட்டக்காரரதும் பலவீனங்களை அறிந்துகொள்ள பேருதவி செய்தன. இவற்றை செய்வதற்காகவே சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு பாட்ஸ்மன் வரும்போதும் அவனுக்கு எப்படியான வியூகம் அமைக்கப்படும் / அமைக்கப்படவேண்டும் என்பதை கடைக்கோடி ரசிகன் வரை தெரிந்துகொள்ளகூடியதான வாய்ப்புகளை தொழில்நுட்பம் செய்து தந்தது. இதனால் அணிகளுக்கிடையில் குறைந்தளவு தீர்மானிக்கப்பட்ட வித்தியாசங்களே அமைய பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் அந்த நாள் மோதல்களிலேயே தீர்மாணிக்கப்பட்டன.

அவுஸ்திரேலிய அணியில் கூட தற்போது கில்க்றைஸ்ட், ஷான் வார்ண், மக்ராத் என்ற மும்மூர்த்திகளின் ஓவை காரணம் காட்டலாம். ஆனால் மக் டேர்மட், மேர்வ் ஹ்யூஜ், அலன் போடர், மார்க் டெய்லர், மார்க் வா, ஸ்டீவ் வா போன்றாவர்களின் ஓய்வு அந்த அணியில் இந்தளாவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும், முன்னர் சொன்ன மூவரின் இடங்களில் ஷான் வார்ண் தவிர மற்ற இடங்களில் வந்தவர்கள் ஏற்கனவே திறமை நிரூபிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உண்மையான கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ரசிப்பதற்கு அருமையான காலம் கனிந்துள்ளது.

Tuesday, December 16, 2008

“இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம்

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி, மற்றவர்கள் ஊடாக எனக்கு கிடைப்பது குறைவு. ஒரு கண்காட்சி ஒன்றில் காலம் சிற்றிதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தத்தின் அறிமுகம் கிடைத்தது, பின்னர் அவர் ஊடாக, அவர் நடத்தும் புத்தக கண்காட்சிகளில் அவர் சிபாரிசு செய்து சில நல்ல புத்தகங்களை வாசித்துள்ளேன். அண்மையில் அப்படியான ஒரு கண்காட்சியில் கோபிகிருஷ்ணன் எழுதிய “இடாகினி பேய்களும்” என்கிற நாவலை அவர் அறிமுகம் செய்ய, பல நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட கோபிகிருஷ்ணனின் நடை தரும் அனுபவத்தை முதன் முதலாக அனுபவித்தேன். நகர்ப்புற வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்வு மீதான ஆழமான சலிப்பும், மன உளைச்சலும் பற்றி வீர்யமாக, அதே நேரம் காதோரமாய் ஒரு தோழன் கதை சொல்வதுபோல சொல்லும் நடை இவருக்கு கைவந்திருக்கின்றது.

எனது புரிதலில், நாவல் self fiction வடிவில் கொண்டு செல்லப்படுகின்றது. அதாவது, சேவை மையம் ஒன்றில் அவர் பணியாற்றிய போது அவர் பெற்ற அனுபவங்களை அவர் வாசகரிடம் சொல்வதாக கதை போகின்றது. அந்த மூலக்கதையில் வரும் சில சம்பவங்களை மையம் கொண்ட 9 சிறுகதைகளும் ஒரு கவிதையும் பிண்ணினைப்பாக தொடர்கின்றது. அதாவது, மூலக்கதையைவிட, கிளைக்கதைகள் அளவில் பெரியனவாக உள்ளது. சாருவின் ராஸலீலாவில் சில அத்தியாயங்கள் இப்படி அமைந்தது. தொடர்ச்சியான மன உளைச்சல்களாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டே அவர் இறந்தார் என்று அறிந்திருக்கிறேன். கதையில், சமூகத்தின் போலியான மனிதர்கள் மீதான அவரது வெறுப்பு தெளிவாக காட்டப்படுகிறது. அவரது அலுவலகத்தில் உயர் நிலை அதிகாரிகள் மட்டும் பாவிக்க என்று ஒரு கழிவறையும், சாதாரண ஊழியர்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் தட்டச்சு பணியாளார்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் பேணாப்படுகிறது. உயர் அதிகாரிகள் ஒவ்வொருமுறை கழிவறை போய்வந்த பின்னரும் அதற்கென இருக்கும் ஒரு தொழிலாளியால் கழிவறை சுத்திகரிக்கப்படும் வழமை கொண்டுவரப்படுகிறது. இதைப்பற்றி சுத்திகரிப்பு தொழிலாளி கோபியிடம் “என்ன சார் மேடம்கள் மூத்திரம் பெய்றது இல்லைபோல, பன்னீர்தான் பெய்றாங்களா?” என்று கேட்கிறான். அதுபோல வாகனத் தரிப்பிடத்திலும் சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, சாதாரண நிலை ஊழியர்கள் தம் டூ வீலர்களை தாழ்வான இடத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனால் இரண்டு படிகளில் டூவீலர்களை ஒவ்வொரு நாளும் ஏற்றி இறக்கவேண்டிய கட்டாயம் வருகின்றது. இதில் உள்ள சிரமங்களை விளக்கி, அந்த படிகளை மறைத்து நீண்ட சாய்வான மரமொன்றை வைக்குமாறு தொழிலாளர் சார்பாக கோபி வைக்கும் வேண்டுகோள் மிக மோசமாக நிராகரிக்கப்படுகின்றது. உன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று தலைமை அதிகாரி கூறுகிறார். இப்படியான சம்பவங்களால், ஆறு மாதங்களின் பின்னர் வேலையை விட்டு விலகுகிறார்.
அதுபோல நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு பகுதி, சமாதானம் என்ற பெண் ஊழியருடன் கோபிக்கு ஏற்பட்ட உறவு பற்றிய பகுதி. ஏற்கனவே கோபிக்கு திருமணமான நிலையில் அது ஒரு வரம்பு மீறிய உறவேயானாலும் மிகுந்த காதல் ரசத்துடன் அந்த உறவு கூறப்படுகின்றது. காதல் மனச மட்டும் தான் பார்க்கும் அது இதென்ற பிதற்றல்கள் இல்லாமல் காதலும் காமமும் கலந்து அந்த உறவை மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதிக்க வைத்துள்ளார். ஒரு முறை காரில் கேளாம்பாக்கம் நோக்கி தொலைதூர பயணம் செல்கையில் சமாதானத்தின் உடல் மீதான ஸ்பரிசிப்பில் இருவரும் காமவசப்படுகிறார்கள். “it’s very soothing” என்கிறாள் சமாதானம், அப்போது “நான் வரம்புகள் அற்றவன், ஆனால் நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணரவைக்க மாட்டேன்” என்கிறார் கோபி. சுதந்திரம் என்பது மற்றவரின் இருப்பையும் அங்கீகரித்தல் என்ற தொனிவரும் இடம் இது.

சமூகப்பணிகளுக்கென வரும் பணம் தேவையில்லாமல் விரயம் செய்யப்படுகின்றது. வெளிநாடொன்றில் இருந்து ஒருவர் செய்யும் நன்கொடை பற்றிய விபரங்களை பார்க்க மூவர் பணியாற்றுகிறார்கள். இப்படியான நிகழ்வுகள் கதை ஓட்டத்தில் சொல்லப்படுகின்றன. இவற்றின் மீதான அவரது வெறுப்பும் அது சார்ந்து அவருக்கு அதிகாரிகள் மீதெழும் கோபமும் பல இடங்களில் தெளிவாக தெரிகின்றது. (கனடாவில் சேகரிக்கப்படும் charitable trust நிதிகள் எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்று சில ஆண்டுகளின் முன்னர் தொடர்ச்சியாக சில நாட்கள் புள்ளிவிபரங்களுடன் Toronto star பத்திரிகை நிறுவியது ஞாபகம் வருகின்றது) அவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிய ஒரு பெண் response என்பதை responce என்று எழுதுகிறாள். இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டும்போது இன்னொரு அதிகாரியால் “Gopikrishnan is not an authority in English” என்று திட்டப்படுகிறார். ஆற்றலும், அறிவும், சரியான உழைப்பும் இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வலி சுட்டிக்காட்டப்படுகின்றது. இது அப்பட்டமாக அவரது சொந்த வாழ்வின் நிலையே தான். அவர் இறந்தபோது இறுதி சடங்குகள் செய்யக்கூட காசு இருக்கவில்லை என்று வாசித்திருக்கிறேன். இது பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியவர்களைவிட பெருமளவு பாதிப்பை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தின. எந்த இலக்கிய அரசியலிலும் ஈடுபடாது தன் எழுத்து நடை போல அமைதியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் இவர். இவரது பிற படைப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.

வலைப்பூக்களில் இவர் பற்றிய இரண்டு பதிவுகள்
லேகாவின் பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் உயிர்மை பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்

Thursday, November 27, 2008

நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை


மனிதவாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரசனைகளும், விருப்பங்களும் கொள்கைகளும் முக்கியத்துவங்களும் மாறிவருவதுபோல உறவுகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் எம் கண்ணுக்கு தெரியாத ஒரு ரகசியபாதையில் தடம் மாறி செல்கின்றன. குழந்தை பருவத்தில் தாயுடன் இருக்கின்ற நெருக்கமான உறவு பின்னர் தந்தையுடன் நெருங்கிபின்னர் பதின் பருவத்தின் மத்தியில் நண்பர்களுடன் தாவுகின்றது. இந்த உறவு எல்லார் வாழ்விலும் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது.

பொதுவாக உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு தீர்க்கமுடியாத பந்தத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நட்பை பொறுத்தவரை அதற்கு எந்தவித கட்டாயமுமில்லை. எந்த ஒரு நெருங்கிய நண்பனையும் ஒரே நாளில் நண்பனில்லை என்று ஒதுக்கி வைக்ககூடிய ஒரு உறவு அது. நட்பின் பெருமையும் இதுவே, சிறுமையும் இதுவே. இளமையில் நட்பை கொண்டாடுவோர் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு வசனம் இது. இருபதுகளின் ஆரம்பத்தில் பொறுளாதார ரீதியில் பெரிய நெருக்கடிகளும் ஏற்படாத, அதே சமயத்தில் சமூகத்தில் ஒரு முழுவயதினராக (adult ) கணிக்கப்டும் போது நண்பர்களே உலகம் என்று தோன்றும். நட்புக்காக உயிரை தருவேன் போன்ற வசனங்கள் எல்லாராலும் பேசப்படும். ஒருவித குழு மனப்பான்மை பரவி சிலசமயங்களில் குழு கலாசாரம் வரை (Gang Culture / Mob Culture) இட்டுச்செல்லும்.

இதன் பிறகு இருபதுகளின் இறுதியில் திருமணம் நிகழ அதன் பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். விரும்பிய நேரத்தில் படுத்து, எழும்பி, உண்டு, குளித்து , சவரம் செய்து அல்லது இவையேதும் செய்யாமல், வார இறுதி என்றால் இரவிரவாக நண்பர்களுடன் வெட்டிக் கதைபேசி இருந்த வாழ்வுக்கு புதிதாக ஒரு தடா வந்தவுடன் பெரும் மனக்குழப்பம் வரும். அதிலும் நண்பர்களின் பிறந்த நாள், அவர்களின் காதலியரின் பிறந்த நாள், முன்னாள் காதலியரின் பிறந்த நாள், இந்தியா பாகிஸ்தானை வென்ற நாள் மூன்றாம் மாடியில் இருக்கும் கீதா முதன் முதலாய் பார்த்து சிரித்த நாள் என்றெல்லாம் கூறி பார்ட்டி வைக்கும் கதையெல்லாம் எடுபடாமல் போகவே விரக்தியும் உண்டாகும். அதிலும் நண்பர்கள் கூட்டத்தில் முதலில் கல்யாணம் ஆனவன் என்றால் அதோகதி தான். அவன் இப்ப மாறீட்டான் மச்சான் (அல்லது அத்தான்), மனிசீன்ற கால்ல விழுத்திட்டான் என்ற காமென்ட்ஸ் அப்பப்ப காதில்விழ கோவிந்தா கோவிந்தாதான்.

இப்படிபட்ட ஒரு நிலையை மிக அழகாக எதிர்பக்கம் என்று ஒரு கதையாக்கியிருப்பார் பாலகுமாரன். கல்யாணத்தின் பின்னர் நண்பர்களுடனான தொடர்பு குறைய, கல்யாணம் ஒரு கால்விலங்கு போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கி, இறுதியில் வாழ்வின் ஒரு கட்டம் இது. இதுவும் கடந்துபோகும் என்று அழகாக கதையை முடித்திருப்பார் பாலா. வரது மைலாப்பூரில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். கணேசன், மனோகர், கலியபெருமாள், சுப்பிரமணி என்று ஒரே அந்தஸ்தில் உள்ள நண்பர்கள்.இந்நிலையில் திடீரென வரதுவுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அத்தனை நண்பர்க்ளும் தம் வீட்டு விசேஷம் போல காலை காப்பி முதல் கையலம்புகிற தண்ணீர் வரை பொறுப்பை இழுத்துபோட ஜாம் ஜாமென்று கல்யாணம் முடிகின்றது. வரது மனைவி கல்யாணியுடன் மைலாப்பூர் வருகின்றான்.

கல்யாணி வரதுவின் நண்பர்களை அண்ணா அண்ணா என்றழைக்கிறாள். வரது நண்பர்களுடன் தம்பதியராய் நின்று படமெடுத்து நடு ஹாலில் மாட்டுகிறான். பொம்பள கையால சாப்பிட்டு எத்தனை காலமாச்சு என்று ஒருவன் அங்கலாய்க்க அவர்களின் வீட்டிற்கு கல்யாணியின் சமையலில் இரண்டு வாரம் வத்தக்குழம்பு போகிறது, ஒருவாரம் ரசம் போகிறது , நாலாம் வாரம் முடியல என்று தகவல் மட்டும் போகிறது. அதே நேரம் கல்யாணி நண்பர்கள் திருமணத்தில் செய்த உதவிகளை எல்லாம் அடிக்கடி கேலியாக்குகிறாள். கிராமத்திலிருந்து வந்த கல்யாணியால் திருமணத்தில் லைட் ம்யூசிக் ஏற்பாடு செய்த நண்பர்களின் செயல் கேலி செய்யப்படுகிறது. பேச்சு வளர நண்பர்களுடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தவேண்டும் என்று கல்யாணி வற்புறுத்துகிறாள். தான் தன் வீட்டை விட்டு வந்தது போல வ்ரதுவும் நண்பர்களைவிட்டு விலக வேண்டுமென்று வாதிடுகிறாள். கல்யாணி இவன் நண்பர்கள் உதவிகளை எல்லாம் நக்கலாக பேச வரது பதிலுக்கு அவள் உறவினர்களை பற்றி திட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்லுகிறான்.

அடுத்த நாள், கல்யாணி கலியபெருமாளிடம் சென்று வரதுவை பற்றி முறையிட, மன்னிப்புகேட்டு வத்தகுழம்பு ஒரு சட்டியும் கொடுத்துவிட்டு வருகிறாள். முழு பிரச்சனையும் வத்தகுழம்பாலே வந்தது போன்ற ஒரு நிலை உருவாக்கப்படுகிறது. உன் உறவே வேண்டாம் என்று நண்பர்கள் வேறு புறக்கணிக்கதொடங்குகிறார்கள். அதன் பிறகு மனோகரை ஒரு சந்தர்ப்பத்தில் காண்கிறான். அவன் தனது கல்யாணத்துக்கு வரதுவை அழைக்கிறான். (இந்த இடத்தில் அவன் கை குலுக்கலில் சினேகமில்ல்லை என்று ஒரு வசனம் வரும்). கல்யாண ஒழுங்குகள் எல்லாமே காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டதாய் மனோகர் சொல்கிறான். ஒரு முறை பட்டதே போதும் என்று அவன் சொல்வது வரதுவை தாக்குகிறது. தனக்காக வீட்டில் புதிதாக யாரும் வந்துள்ளார்களா என்று வரது கேட்க ஆறு வருட ஸ்னேகமே மூன்று வாரத்தில் புட்டுகிச்சு, புதுசா ஒண்ணு தேவையா என்று சொல்கிறார்கள். கல்யாணியிடம் முன்னர் வத்த குழம்பு கேட்ட கணேசன் வத்த குழம்பென்றாலே தனக்கு பிடியாது என்கிறான். இப்படி புறக்கணிப்பின் வலி மீண்டும் மீண்டும் வரதுவுக்கு உணர்த்தப்படுகிறது. சில காலம் செல்கிறது. கல்யாணி பிள்ளை பெற , குடும்ப சகிதம் கோயிலுக்கு போகும்போது தாம் முன்பு சந்திக்கும் அதே கோயிலருகில் அடுத்த தலைமுறை இளைஞர்கள் நிற்பதை பார்த்தபடி, கல்யாணி குழந்தைகளின் உடை பற்றி ஏதோ சொல்ல ஆமாம் என்று சொன்னபடி போகிறான்.


நம் யதார்த்த வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை ஒன்றை இக்கதை மூலம் தெளிவாக காட்டுகிறார் பாலா. பொதுவாக போனால் வேலை, வந்தால் வீடு என்றளாவில் பலர் வெளிப்புற தேடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அதனை பார்த்து வளரும் பெண்கள் தம் கணவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் முளைவிடுகின்றது இந்த பிரச்சனை. அதுவும், தனது அப்பாவோ, அண்ணாவோ, மாமாவோ, அத்தானோ அப்படி இருக்கிறான் என்பதற்காக அப்படியே தன் கணவனும் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. பல்லாண்டுகாலமாக இருந்த தொடர்புகளை, வழக்கங்களை ஒரே நாளில் அறுப்பது முடியாதென்பதை இருவருமே உணரவேண்டும். இதற்கு இன்னொரு காரணம் ஒருவனுக்கு இருக்கும் எந்த கெட்ட பழக்கத்திற்கும் அவனது நண்பர்களையே காரணமாக சொல்கின்ற ஒரு சபிக்கப்பட்ட மனநிலை. ஒருவன் கெட்டுப்போனால் அவன் நண்பர்களை குற்றம் சாட்டுபவர்கள் ஒருபோதும் அவன் நல்ல நிலைக்கு வரும்போது நண்பர்களை பாராட்டுவதில்லை. இந்த நிலையே பெண்களை பொதுவாக கணவர்களை நண்பர்களிடம் இருந்து பிரிக்க தூண்டுகிறது. இதுபோல நான் அவதானித்த இன்னொரு முரண், ஒருவரை பற்றி விசாரிக்கும்போது “அவன் நல்ல பெடியன், friends என்றதே இல்லை” என்று கூறுவது. இதில் என்ன யதார்த்தம் என்ன என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை.

இந்த கதையில் பாலா எந்த ஒரு முடிவையும் முன்வைக்கமாட்டார். வரது அந்த வாழ்க்கையையே ஏற்றுகொண்டான் என்றளவில் கதை முடியும். இது ஒரு சமரச மனப்பாங்கு. இது நம் வாழ்க்கைமுறை பற்றி, குடும்பம் பற்றி மிகப்பெரும் கேள்விகளை எழுப்புகின்றது. எல்லா கேள்விகளும் பதில் சொல்லவேண்டியனவும் அல்ல ,பதில்கள் உடையனவும் அல்ல.


எதிர்பக்கம் கதை நானே எனக்கொரு போதிமரம் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளியானது.

Wednesday, November 26, 2008

தமிழ் சினிமாவில் தந்தைப்பாசம்

தமிழ் சினிமாவுக்கென்று நிறைய கல்யாணகுணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது செண்டிமெண்ட். இந்த சென்ரிமெண்ட் மசாலா கலக்கப்படாத எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறமுடியாது என்பது அதன் சாபக்கேடுகளில் ஒன்று. அதிலும் உறவு முறை சித்திகரிப்புகளில் தாய்ப்பாசம், காதல், சகோதரப்பாசம், நட்பு, எஜமான விசுவாசம், தேசப்பற்று, சாதிப்பற்று என்று வரும் பட்டியலில் மிகத்தொலைவிலேயே தந்தையர் பாசம் இருக்கின்றது. தாயை முன்னிலைப்படுத்துவதாலேயே பெண்களை கவரலாம் என்கிற ஒரு உத்தி இருப்பது இதற்குகாரணமானாலும், இதனை முன்னிலைப்படுத்தி தந்தையரை சித்திகரிக்கும் விதம் மிகுந்த விசனத்துக்குரியது. அதிலும் ஹீரோயினின் தந்தை என்றால் கேட்கவே வேண்டாம் 90% அவர்தான் வில்லன். அதனால் ஹீரோவுடன் மோதி, “நீ இவளோட அப்பன் என்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன்” என்று விரலை சொடுக்கி ஏகவசனத்தில் ஹீரோ பேசுவதை கிழிந்த சட்டை, உடலெங்கும் அப்பிய புழுதி மற்றும் காயங்களுடன் கேட்கவேண்டும். கதாநாயகனின் அப்பாவுக்கு கதாநாயகனிடம் அடிவாங்கும் சந்தர்ப்பம் வராதே தவிர அவரது இருப்பு பெரும்பாலும் படங்களில் உணரப்படுவதேயில்லை.

ஒரு பிள்ளை ஆரோக்கியமாக வளர தந்தை – தாய் உறவு நிலை நன்றாக இருக்கவேண்டும். அதே போலவே ஒரு சமுதாயம் இயங்கவும். ஆனால், தாயை போற்றுவதற்காக தமிழ் சினிமாவில் தந்தையர் பெரும்பாலும் காதலியை கர்ப்பினியாக்கிவிட்டு ஓடுபவர்களாகவோ (மிஸ்டர் பாரத்) குடிகாரர்களாகவோ, வேறு பெண்களுடன் தொடர்புள்ளவர்களாகவோ காட்டப்படுவது வழக்கம். இதற்கு எதிர்மாறாக நல்ல தந்தையை காண்பிக்கிறேன் பேர்வழி என்று தந்தையரை அளவிற்கு மிஞ்சிய ஏமாளிகளாக மகன்களால் பிற்காலத்தில் கைவிடப்படுபவர்க்ளாக காண்பிப்பது இன்னொரு மிகை (ஒன்பது ரூபாய் நோட்டு, சிவாஜியின் பல படங்கள்). போனால் போகட்டும் என்று ஒரு நகைச்சுவை பாத்திரமாக (ப்ரியமுடன்) அல்லது எது செய்தாலும் மகனை கரித்துகொட்டும் ஒருவித சைக்கோ காரக்டராகவோ வருவது (எம்டன் மகன், தனுஷின் படங்கள்) இன்னொரு வகைபடங்கள். இவை எல்லாவற்றையும் தவிர்த்து தந்தை – மகன் உறவை ஒரு யதார்த்தமான முறையில் வெளிக்காட்டிய படங்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படியான சில படங்கள் பற்றிய பார்வை இது.

கிங்

பெரியளவி
ல் வெற்றி பெறாத படம். விக்ரம் – சினேகா இணைந்து நடித்த இப்படத்தில் நாசர் – விக்ரம் முறையே அப்பா மகனாக நடித்தனர். ஹாங்காங்கில் இருவரும் இருப்பதாக வரும் காட்சிகளில் இருவரதும் உறவுமுறை நன்றாக காட்டபட்டிருக்கும். நோயால் தாக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் விக்ரத்திடம் அதை மறைத்து தனக்கு வருத்தம் என்று நாசர் நாடகமாடும் படம். உண்மையை விக்ரம் உணரும் கட்டங்களில் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். அவர் நடித்த படங்களிலேயே அற்புத நடிப்பை கொண்ட சில காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன. இயக்குனர் சாலமனின் (கொக்கி, லீ) முதல் படம் இது. இப்படத்திற்காக 8 பாடல்களை உருவாக்கி (வைரமுத்து – தினா) 3 பாடல்களை ஆல்பமாக தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பினார்கள்.


லவ் டுடே

இதுவும் ஒரு அறிமுக இயக்குனரின் படம். பாலசேகரன் இயக்கிய படத்தில் ரகுவரன் – விஜய் தந்தை மகனாக (விஜய் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு முற்பட்ட காலம்) நடித்திருந்தனர். இவ்வளவு அன்பான, நட்பான அப்பா எல்லார் கனவிலும் நிச்சயம் வந்திருக்கும். அதிலும் காலையில் அவசர அவசரமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நிற்கும் சுவலக்‌ஷ்மியை பார்க்க செல்லும் விஜயை ரகுவரன்
“காலங்காத்தால எங்க இவ்வளாவு அவசரமாக போற” என்று கேட்கும் ரகுவரனிடம் விஜய் “கம்பியூட்டர் க்ளாஸ்க்கப்பா” என்று சொல்ல அவர் சென்ற பின் (தனக்கேயுரிய) புன்னகையுடன் “நான் பாக்காத கம்பியூட்டர் க்ளாசா! எந்த பொண்ணு பின்னாடி சுத்திறானோ” என்று ரகுவரன் சொல்லும் காட்சி அற்புதம். அதேபோல மீன் தொட்டிக்கு அருகில் வைத்து விஜய்க்கும், சாப்பாட்டு மேசையில் வைத்து அவர் நண்பர்களுக்கும் ரகுவரன் அறிவுரை சொல்லும் காட்சிகள் நன்றாக இருக்கும்.

தவமாய் தவமிருந்து

படத்தின் முற்பாதியில் ராஜ்கிரனை தியாகி ரேஞ்சிற்கு கட்டமைத்த சேரன் பிற்பாதியில் சற்று யதார்த்ததுக்கு திரும்பியிருப்பார். கஷ்டப்பட்டு சேரனை படிப்பிக்க அவர் காதலியுடன் தகப்பனிடம் வாங்கிய பணாத்துடன் ஊரைவிட்டு ஓடி பின் ஓரளவு நல்ல நிலையில் மீண்டும் பெற்றோரை வைத்து போற்றுவதாகவரும் கதை. சேரனுக்கு பிள்ளை பிறந்தது தெரிந்து வரும் ராஜ்கிரண் அவருக்
கு பண உதவி செய்யும் காட்சியிலும் அதேபோல சேரனின் வீட்டை பார்த்து அடு பற்றி சேரனிடம் கேட்கும்போது சேரன் கடனில் வாங்கிய வீடென்று சொல்ல, “எப்பவும் நம்ம வருமானத்துக்குள்ள வாழ பாக்கனுமப்பா” என்று சொல்வதும் உணர்வுபூர்வமான காட்சிகள். படத்தின் பிற்பகுதியில் வசனமேயில்லாமல் பிண்ணனி இசையுடன் 10 நிமிடங்களுக்கு மேலாக வரும் காட்சி ஒரு கவிதை. அதுபோல ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு அம்மா அப்பா பாடலின் காட்சியும் நல்ல ரசனையுடன் படமாக்கப்படிருக்கும்.

உல்லாசம்

இப்படத்தில் அஜித்தும் விக்ரமும் மற்றவர்களின் தந்தையருடனே (ரகுவரன், பாலசுப்ரமணியம்) நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் உறவுமுறை நன்கு
காட்டப்படும். தனக்கு தெரிந்த கவிதை, பாடல், என்று பாலா விக்ரத்துக்கு சொல்லிக்கொடுத்து அவரை மென்மையாக வளர்க்க, ரகுவரன் தனக்குத் தெரிந்த அடி தடி, அதிரடிகளை அஜித்திற்கு சொல்லி வளர்க்கிறார். ரகுவரனின் அடியாள ஒருவர் இறக்க அந்த அடியாளின் கதிதான் அஜித்திற்கும் ஏற்படும் என்று விகரம் ரகுவரனிடம் கடுமையாக சொல்ல ரகுவரன் தனது ரவுடிசத்தை மூட்டைகட்ட முடிவெடுப்பார். இந்த சந்தர்ப்பத்தில் “சின்ன வயசில குரு ...” என்று தொடங்கி ரகுவரன் பேசும் வசனமும், மஹேஸ்வரியை விக்ரமும் காதலிப்பதால் அவரை விட்டு விலகும்படி அஜித்திடம் பாலா கேட்கும் காட்சியும் சிறப்பாக அமைந்தபடம். பாலகுமாரனின் வசனமும் ஜேடிகெர்ரியின் இயக்கமும் நன்றாக இருந்தும் சரியான திரையரங்குகளில் திரையிடப்படாமல் அமிதாப்பின் AB Corporationஐயே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வைத்தபடம்.

காதல்கவிதை

ஜனாதிபதி விருது பெற்ற அகத்தியனின் இயக்கத்தில் மணிவண்ணன் – பிரஷாந்த் முறையே தந்தை மகனாக நடித்தபடம். தந்தை மகன் உறவை இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம் என்றபோதும் சில காட்சிகள் நன்றாக இருக்கும். மணிவண்ணன் தொழிலதிபர். மனைவி அம்பிகா. மகன் பிரஷாந்த். பிள்ளையும் கணவனும் எப்போதும் வீட்டில் நிற்காததால் அம்பிகா எந்நேரமும் சண்டையிட்டுகொண்டே இருப்பார். பின்னர் மணிவண்ணன் இதை உணார்ந்து அவரை மாற்றுவார். இதில் வீட்டில் அமைதி இல்லை என்று வெளியே திரியும் பிரஷாந்தை மணிவண்ணன் கையேந்தி பவனில் வைத்து காணும் காட்சி சிறப்பு.

கிரீடம்

பிரியதர்ஷனின் மலையாளாத்திரிப்படத்தின் த
மிழ் படம் இது. ராஜ்கிரண் – அஜித் தந்தை மகனாக நடிக்க புதுமுக இயக்குனர் விஜை சிறப்பாக இயக்கினார். தன் மகன் போலிஸ் ஆகவேண்டுமென்ற தந்தையின் கனவை யதார்த்தமாக அணுகியிருந்தார். அதனாலோ என்னவோ படம் பெரிய வெற்றியை பெறவில்லை. மற்றும்படி தன் மகனை ஒவ்வொரு கட்டத்திலும் தாங்கும் ராஜ்கிரணின் அணுகுமுறையும், போலீசாக இருந்தபோதும் குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் காடும் மென்மையும் என்னை கவர்ந்தது. அஜித்தும் மென்மையாக, ஒரு matured கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருப்பார்.

வாரணம் ஆயிரம்

அண்மையில் வந்த படம் என்பதால் இதன் வெற்றி தோல்வி பற்றி இப்ப்ப்து ஒன்றும் கதைக்க முடியாது. ஆனால் படம் மிக மெதுவாக செல்கின்றது என்ற பொதுவான கருத்து உள்ளது. என்னை பொறுத்தவரை தந்தைக்கு தியாகி என்றோ, அப்பாவி என்றோ வேஷம் கட்டாமல் தன் மகனுக்கு ஒரு role model ஆக இருக்ககூடிய தந்தையை படத்தில் காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல்
”முதலடி வாங்கியவன் முடிவுக்கு அஞ்சுவதில்லை
வாங்கும் வரை வாதங்கள், வாங்கியபிறகு எல்லாம் வே
தங்கள்” என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையை அனுபவங்களின் தொகுப்பாக, எவரையும் புனிதராக்காமல் சொல்லும் படம். படத்திலேயே அப்பா சூர்யா சொல்வதுபோல life has to go on என்பதை மீண்டும் மிண்டும் வலியுறுத்துகிறபடம். பத்திரிகை விமர்சனங்களையும் மற்றோர் கருத்துக்களையும் மட்டும் கேட்காமல் படத்தை ஒருமுறை அரங்கில் பார்க்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இதுபோல இன்னும் சில படங்கள் வெளியாகியிருக்கலாம். அவற்றை தெரிந்தவர்கள் அறியதந்தால் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் நான் எடுத்துச் சொல்லப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் மற்றைய உறவுகளைவிட இந்த உறவு முறை மிக குறைந்த எண்ணிக்கையில் திரைப்படமாக்கப்பட்டமையே.

Monday, November 3, 2008

ஞாநியை நான் ஏன் நிராகரிக்கிறேன்

அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது.

ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர்
பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.


அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள்.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்????


முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடு
தலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.)
சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்ப
டாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா

Sunday, November 2, 2008

தோற்றுப்போன வெற்றி: என் உயிர்த் தோழன்

மிக தீவிரமான திரைப்பட ரசிகனாக இருந்தும் நல்ல சினிமா, கெட்ட சினிமா என்கிற விவாதங்களில் நான் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. என்னை பொறுத்தவர சினிமாவை ரசித்த சினிமா, ரசிக்காத சினிமா என்றுதான் பாகுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று கூறுவது இப்போதெல்லாம் ஒரு fashion ஆகவே மாறிவிட்டது. மொழி திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் போது ஞாநிக்கு பதிலாக இயக்குநர் அமீர் சொன்னது போல நல்ல சினிமாக்களை எல்லாம் திரையரங்கில் சென்று பார்த்திருந்தால், அதனை மற்றவர்களுக்கும் சொல்லியிருந்தால் நிச்சயம் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கும். எந்த இயக்குநர்களும் மோசமான படங்களை எடுக்கவேண்டும் என்று படம் எடுப்பதில்லை. திரைப்பட தயாரிப்பில் பெருமளவு பணமும் முதலீடு செய்யப்படுவதால் வணிகரீதியான வெற்றி பற்றிய தயக்கம் சில சமயங்களில் நல்ல படங்கள் எடுப்பதை தவிர்த்துவிடுகிறது. இந்த தொடரில் நல்ல கதையம்சத்துடன் வெளியாகி, பரவலான கவனிப்பை பெறாத, வசூல் ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் பற்றிய பார்வை.


என் உயிர்த் தோழன்


பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றான இது வசூல் ரீதியாக எடுபடாமல் போனது பலத்த ஏமாற்றமே. 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு பூபாளமாக புகுந்த பாரதிராஜா வித விதமான கிராமத்து காதல்கதைகளை திரையில் கவிதையாக விவரிப்பதில் தனித்த ஆளுமை கொண்டவராக விளங்கினார். இடையில் நகர்ப்புற கதைகளுக்கு வந்த போதும் அந்த கதைகளிலும் கூட அவரது கிராமத்து தேவதைகள் வெள்ளையுடையுடன் வந்து போனார்கள், சில காட்சிகள் கிராமங்களில் நடந்தன, அவையே மக்களால் பெரிதளவும் ரசிக்கப்பட்டன (உதாரணம் : நிழல்கள், ஒருகைதியின் டயரி, சிகப்பு ரோஜாக்கள்). இந்த நிலையில் தொடர்ந்து கிராமத்து காதல்களையும், த்ரில்லர்களையும் எடுத்து வந்த பாரதிராஜா சற்று மாறுபட்டு விமர்சனத்துக்குரிய ஒரு காதலை முதல் மரியாதை என்ற பெயரில் இயக்கினார். படம் பெரு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தாஷ்கெண்டில் வைத்து கௌரவிக்கப்பட்டபோது (வழமைபோல ) உணர்ச்சிவசப்பட்டு இனி சமூக சீர்திருத்த படங்களை மட்டுமெ எடுப்பேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து வேதம் புதிது, கொடி பறக்கிது (இது சமூக நீதிக்காக எடுக்கபடவில்லை, நிதி ரீதியான சில சிக்கல்களை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டது.)

இதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து கொண்டு தந்த அற்புதமான படம் தான் என்னுயிர் தோழன். இந்த படத்தின் டைட்டில் வரும்போது கூட பாரதிராஜாவின் என்று ஒரு slide வரும் பின்னர் என்னுயிர் தோழன் என்று அடுத்த slide வரும். பின்னர் இளையராஜா என்று அடுத்த slide வரும். அதாவது சேர்ந்து வாசித்தால் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், இளையராஜா என்று அர்த்தம் வரும். ஆனால் இளையராஜாவுடன் இணைந்ததால் 1980ம் ஆண்டு வைரமுத்துவை அறிமுகம் செய்த பின்னர் இந்த படத்தில் தான் (10 ஆண்டுகளின் பின்னர்) முதன் முதலாக வைரமுத்து பாடலெழுதாமல் ஒரு பாரதிராஜா திரைப்படம் வெளியானது.

புதுமுகங்களை வைத்து பெரு வெற்றிகளை பெற்ற பாரதிராஜா கமல், ரஜினி, சத்யராஜ் என்று பெரிய நடிகர்களை வைத்தே படங்களை இயக்குகிறார் என்ற குற்றசாட்டு பலமாக வைக்கப்பட்டபோது மீண்டும் மூன்று புதுமுகங்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பாபுவே வசனங்களை எழுதியிருந்தார். (இது போலவே புதிய வார்ப்புகள் திரைப்படத்துக்கும் அதன் வசன கர்த்தாவான பாக்யராஜையே நாயகனாக்கியிருந்தார்). மண்வாசனை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா படங்களை போலவே கலைமணியே இதற்கும் கதையெழுதிருந்தார்.

இந்த படத்தின் முக்கிய விடயம் இது சொல்லும் செய்தியாகும். எல்லா அரசியல்வாதிகளிற்கும் உணார்ச்சிவசப்பட்ட இளைஞர்களையும், மாணவர்களையும் தமது சுயநலத்துக்கு உள்ளாக்கினாலும் அதை விமர்சித்து எடுக்கப்பட்ட படங்கள் மிக குறைவு. இதற்கு காரணம் ஒரு புறம் அரசியல்வாதிகளால் வரக்கூடிய எதிர்ப்பாக இருந்தாலும் இன்னொரு காரணம் அரசியலில் ஈடுபடும் இளைஞர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற நிஜத்தை முகத்தில் அடிப்பது போல சொல்லி திரையரங்குகளுக்கு இளைஞர்களின் வருகை குறைந்துவிடக்கூடாதே என்பதுதான். இன்னும் சொன்னால் புதிய மன்னர்கள் (விக்ரம் நடிக்க விக்ரமன் இயக்கம்), சத்யா (கமல் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்) போன்ற பெரிய நட்சத்திரங்கள் இணைந்த படங்கள் பெருந்தோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிட்டு (ரமா) வசிக்கும் கிராமத்தில் நாடகம் போடவரும் தென்னவன் (ரமேஷ், பின்னர் தனது பெயரை தென்னவன் என்றே மாற்றி ஜெமினியில் “கை”யாக நடித்து பிரபலமானவர்) சிட்டை காதலித்து அவளை கூட்டிக்கொண்டு சென்னை செல்வதாக ஏமாற்றி அவளது நகைகளையும் எடுத்துக்கொண்டு அவளை ரயிலில் விட்டு விட்டு பிரிகிறான். அவள் தர்மனிடம் அடைக்கலம் கோருகிறாள். அதே நேரம் உள்ளூர் அரசியல்வாதி டெல்லியும் (லிவிங்ஸ்டன்) அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயல்கிறார். அப்போதைய எதிர்கட்சியான பொதுக்கட்சியின் தொண்டனான தர்மன் டெல்லியின் முயற்சிகளை முறியடைத்து அவளை மணக்கிறான். இதே சமயம் தென்னவனும் போர்முரசு பொன்வண்ணன் என்ற பெயரில் நடிகனாகிறான். டில்லி அரசியல் லாபம் தேடி டெல்லி பொதுக்கட்சியில் இணைந்து பின்னர் போர்முரசு பொன்வண்ணனையும் அதேகட்சியில் இணைக்கிறான். தர்மன் – பொன்னி இருக்கும் குயிலு குப்பம் தொகுதியில் போர்முரசு பொன்வண்ணன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறான். அவனை அடையாளம் காணும் பொன்னி தர்மனிடம் உண்மையை சொல்ல அவன் கட்சி செயல்பாடுகளிலிருந்து விலக, ஊரே பொதுக் கட்சியை புறக்கணிக்கிறது. அதன் பின்னர் கட்சி தலைவர் தர்மனை அழைத்து அழகு தமிழில் உணார்ச்சிமயமாக் ஒரு உரையாடலை நிகழ்த்த தர்மன் மனம் மாறி மீண்டும் தன் தலைவரின் நியாயங்களை பொன்னியிடம் சொல்லுகிறான். மீண்டும் கட்சி பணியில் முழுவீச்சில் இறங்குகிறான். தலைவர் புகழ்பாடி போஸ்டர்களை ஒட்டிவிட்டு, தேர்தல் பணிசெய்து களைத்துபோய் தன் சக கட்சி தொண்டனிடம் உணர்ச்சிவசப்பட்டு தன் தலைவரின் புகழ்பாடி, அவருக்கு பணி செய்யும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தர்மனை கொன்று அந்தப் பழியை எதிர்க்கட்சி மீது போட்டால் தாம் பெரு வெற்றி பெறலாம் என்ற அவன் கட்சியின் சதியில் பரிதாபமாக கொல்லப்படுகிறான். அதன் பின்னர் இறுதி காட்சியில் ஊரே கூடி போர்முரசு பொன்வண்ணனை, கட்சி தலைவரை, டெல்லியை என்று எல்லாரையும் கொன்று தள்ளுகிறது.


சமுதாயமும் அதில் இருக்கின்ற கட்சிகளும் எப்படியெல்லாம் மக்களை, அப்பாவி மனிதர்களை தமது சுயநலத்துக்கு பகடைகளாக பாவிக்கின்றாது என்று அருமையாக சொல்கிறதுபடம். எந்த விடயத்தையும் அளவுக்கு மிஞ்சி உணார்ச்சிவசப்பட்டு பார்க்கின்ற தமிழர்களின் நிலையை படம் துல்லியமாக் சொல்கின்றது. கட்சிதலைவர் பொன்னம்பலத்தை விடுதலை செய்யவேண்டும் எனக்கேட்டு தர்மன் தீக்குளிக்கும் காட்சி ஒரு உதாரணம். இந்த தீக்குளிக்கும் கலாசாரம் மிகப்பெரிய ஒரு பித்தலாட்டம் என்பது என் கருத்து. நடிகர்கள் இறக்கின்றபோது, அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரி, அவர்கள் புதிய பட அறிவிப்பை செய்யவேண்டும் என்றேல்லாம் கேட்டு செய்யப்படும் தீக்குளிப்புகள் மிகப்பெரிய அபத்தங்கள். படத்தின் இறுதியில் வரும் தர்மனுடனான கட்சிதலைவரின் உரையாடல் அரசியல்வாதிகளின் கபட பேச்சுக்கு ஒரு உதாரணம். தமிழர்களை பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய டாப் 10 குணாம்சங்களுல் முண்ணனி வகிப்பது அவர்களது பேச்சாற்றல். உணர்ச்சிவசப்படுத்தி மக்களை அறிவுரீதியாக சிந்திக்க வைக்காமல் உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்கும் இந்தப் பேச்சுகளால் எமது வாழ்க்கைநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டது என்று கடந்த கால வரலாற்றை பார்த்தால் தெரியும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னியுடனான தென்னவனின் பேச்சுகளும் தர்மனுடனான பொன்னம்பலத்தின் பேச்சுகளும் இதற்கு உதாரணங்கள். அதேபோல மக்கை கையில் பிடித்துகொண்டு எல்லாரும் பேசும் அப்த்தமான பேச்சுகள் (உதாரணமாக LIC கட்டடத்தை இரவில் ஏழைகள் தஙும் இடமாக மாற்றவேண்டும் போன்றா கருத்துகளை இப்படத்தில் ஒரு அரசியல்வாதி பேசுகிறார்). மேலும் எல்லா கதாபாத்திரங்களும் வழமையான தமிழில் கதிக்கின்றன, ஆனால் போலியான, மற்றவரை ஏமாற்றும் விடயங்களை பேசும்போது மட்டும் அழகு தமிழுக்கு மாறுகின்றன. திராவிடக்கட்சிகளினால் தமிழரின் பல அடையாளங்கள் காக்கப்பட்டாலும், இந்த ஆடம்பரமான அலங்கார வார்த்தைகளாலான பேச்சுகளும், ரசிகர்மன்ற, கட்சி தொண்டர் என்கிற, கட் – அவுட் போன்ற மக்களின் அடிப்படை வாழ்வை பெருமளவு பின்னோக்கி தள்ளிய கூறுகள் வாழ்வியலுடன் இணைந்தது மிகப்பெரிய ஒரு பாதிப்பே.



படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஒரு குறியீடாக காட்டபடும் முதியவரின் கதாபாத்திரம். அது பார்வையாளரை / அவர்களது மனநிலையை குறிப்பதாக அமைகின்றது. இறுதிக்காட்சியில் அந்த கதாபாத்திரம் மூலமாகவே டில்லி (லிவிங்ஸ்டன் - அப்போது அவர் ரஞ்சன் என்ற பெயரில் நடித்துவந்தார்) மற்றும் அரசியல்வாதிகள் கதாபாத்திரங்கள் கொல்லப்படுகின்றன. இதே போன்ற உத்தி பாலாவின் சேது திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதேபோலவே கட்சிக்காரர்கள் தயாரிக்கும் தர்மன் பற்றிய மரண அறிவித்தலிலும் அதேபோல தர்மன் எழுதும் தலைவர் ”பொன்னம்பபலம் வாழ்க” என்கிற சுவரோர வரிகளிலும் காண்பிக்கபடும் எழுத்துப்பிழைகள் கூட இயக்குணரின் வேண்டுமென்றே செய்தகுறியீடுகளாஅகத்தான் இருக்கவேண்டும்.


இந்தப் படத்தின் வணிக ரீதியான தோல்வியை நான் மக்களின் மனநிலையுடனேயே தொடர்புபடுத்தி பார்க்கின்றேன். என்னுயிர் தோழன் சொல்லும் நீதிகளை எவருமே ஒத்துக்கொள்ளப்போவதில்லை. கேட்டால் எனது தலைவர் அப்படிப்பட்டவரில்லை என்பார்கள். இருக்கலாம், ஆனால் ஒரு தனிமனிதனை தலைவனாக ஏற்று அவன் சொல்லும் கருத்துகளை எல்லாம் கண்மூடி தலையாட்டி மாற்றுகருத்துக்களை அடியோடு நிராகரிக்கும் சமுதாயம் மீளவே முடியாத பின்னடைவைத்தான் சந்திக்கும். இது வரலாறு சொல்லும் பாடம்.

Monday, October 20, 2008

நான் பார்த்த சினிமா


எல்லாற்ற மாடும் உழுகிதென்றிட்டு சுப்பற்ற பேத்தை மாடும் உழுகைக்கு போச்சாம் என்று அடிக்கடி என் நண்பன் விசாகன் சொல்வது போல எல்லாரும் ஏதோ செய்யினம் போல இருக்கு என்றுதான் நானும் வலைப்பூக்களுக்க வந்தனான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமென்று எழுதினாலும் இதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது உண்மை. அதை கொஞ்சம் கூட்டுவதுபோல கானாபிரபா வேற எனக்கு சினிமா பற்றிய தொடர் பதிவுக்கு அழைப்பு தந்தார். அவருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

கால் நூறாண்டை கடந்துவிட்ட வாழ்க்கை பயணத்திலே, சற்று நிதானித்து திரும்பும்போது, வாழ்க்கை பூங்காவின் பூக்களின் வாசனையை மீண்டும் மீட்டிப் பார்க்கும்போதெல்லாம் நினைவுப் பெட்டகங்களை நிரப்பி நிற்பவை மிக சில உறவுகள், அற்புதமான புத்தகங்கள் போன்ற நண்பர்கள், நண்பர்கள் போன்ற புத்தகங்கள், ரசனையான திரைப்படங்கள், பாடல்கள், கிரிக்கெட் ஆட்டங்கள்தான். சினிமா மீதுதான் என் வாழ்வின் முதல் ரசனை தொடங்கியது ஆனாலும் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மானிப்பாய் மணியம்ஸ் மூலமாக முளைவிட்ட எனது சினிமா மோகம் யாழ்ப்பாணம் சுப்பர் ஷோ (ரவி ஒளி காணம்) மூலம் கிளைவிட்டு கொழும்பு ஹம்டன் லேன் காயத்ரியில் செழித்து இன்று கனடாவில் பல விழுதுகளுடன் பலமாக வளர்ந்து நிற்கிறது. இதுதான் எனக்கும் சினிமாவுக்குமான முன்னுரை.

என்ன வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?, நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?, என்ன உணர்ந்தீர்கள்?

சினிமா பார்த்தால் கூடது, அது ஒரு தீய / தேவையில்லாத பழக்கம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லாதது என் வீடு. இதனால் இயல்பாகவே சிறு வயது முதல் படம் பார்த்து வந்திருக்கிறேன். முதன் முதல் பார்த்ததாக நினைவில் உள்ள படம் காளி. இது ரஜினி நடித்து 80ல் வெளியானபடம். ஆனால் நான் பார்த்து 84ன் தொடக்கங்கள் என்று நினைக்கிறேன். இப்படத்தில் அழும் இரண்டு குழந்தைகளை ரஜினி அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு காட்சியும், வேகமாக மோட்டார் சைக்கிளில் வரும் ஒரு காட்சியும் நினைவில் உள்ளன. எத்தனையோ பழைய படங்களை பின்னர் பார்த்திருக்கிறேன். ஏனோ இத்திரைப்பட பிரதிமட்டும் கிடைக்கவில்லை. இன்றுவரை ரஜினி ஒரு ஆதர்ச நாயகனாக இருப்பதற்கு இப்படத்தில் அவர் அழும் இரண்டு குழந்தைகளை அணைத்தபடி ஆறுதல் சொல்லும் அந்த காட்சிதான் காரணமாக கூட இருக்கலாம். அப்போது மானிப்பயில் இருந்து மணியம்ஸ் என்ற பெயரில் உள்ளூர் ஒளிபரப்பு ஒன்று இருந்தது. அதன்மூலமாகத்தான் இப்படங்களை திரையிடுவார்கள். பார்த்ததாக முழுமையாக நினைவில் இருக்கும் படம் சிம்லா ஸ்பெஷல் மற்றும் அபூர்வ சகோதரிகள். சிம்லா ஸ்பெஷலில் வரும் உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் அப்போது நிறைய பிடிக்கும். அந்த பாடலில் வரும் சில அசைவுகளை ஆடிப்பார்க்க முற்பட்டு எம் வீட்டு ஹாலில் பலதடவை விழுந்து அடிவாங்யிருக்கிறேன். அபூர்வ சகோதரிகள் ஊர்வசி, ராதா நடித்த படம் என்று ஞாபகம். அப்போதெல்லாம் வீடுகளில் அன்ரனா பூட்டினால் தான் படம் தெரியும். அதையும் அடிக்கடி திசைமாற்ற வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் படங்கள் ஏதோ ஆவிகளின் நடமாட்டம் போலத்தான் திரையில் தெரியும். எனது அம்மாவுக்கு சினிமாவில் நிறைய ஈடுபாடு. அப்போது அவர் ஒரு பச்சை நிற டயரியில்தான் பார்த்த படங்களை எல்லாம் தொடர்ந்து எழுதிவந்தார். அது அருமையான ஒரு பதிவு. அது போலத்தான் எனது அப்பாவும். வீட்டில் இரவு உணவுக்கு பிறகு ஒரு மணித்தியாலம் தன்னும் நாங்கள் எல்லாரும் இருந்து பல விடயங்களை பற்றி கதைப்போம். தமிழ்வாணன், ஆனந்தவிகடன், கமல், ரஜினி, எம். ஜி. ஆர், சிவாஜி என்று என்னவென்றாலும் கதைப்போம். ஏதோ ஒரு எம் ஜி ஆரின் திரைப்படத்தில் நடித்த இரண்டு நாயகியரும் தமது பெயர் தான் டைட்டிலில் முதல் வர வேண்டும் என்று சண்டையிட்டதாகவும் இதனால் வெறுப்புற்ற எம் ஜி ஆர் தனது பெயரை எல்லாரின் பெயரும் திரையிட்ட பின்னர் “இவர்களுடன் எம் ஜி ஆர்” என்று போட்டதாகவும் அப்பா சொல்வார். வெறும் புத்தகப் புழுவாக இராமல் பல தரப்பட்ட விடயங்களையும் அறிந்து கொள்ளும் எம் இயல்பு அந்த சாப்பாட்டு மேஜையில் வைத்தே தீர்மானிக்கப்பட்டதென்று நினைக்கிறேன்.
நல்ல ரசனைகள் எப்போதும் நல்ல நண்பர்க்ள் மூலமே வளர்த்து செல்லப்படும். அந்த வகையில் எனது ரசனைகள் தொடர்ச்சியான விவாதங்கள் மூலமே வளர்ந்து சென்றன. என் பெற்றோருடனும் சகோதரருடனும் தொடங்கிய இந்த வழக்கம் பின்னர் நண்பர்கள் தயா, தெய்வீகன், விசாகன், குணாளன் என்று இலங்கையிலும் பின்னர் புலம்பெயாந்து கல்லூரியில் ஒரு தோழி ஒருத்தியுடனும் (அவள் தந்த ஒரு பார்க்கவேண்டிய சினிமா பட்டியல் என் ரசனையையே மாற்றி அமைத்தது), கனடாவில் நண்பன் தீபனுடனான மணித்தியால கணக்கான விவாதங்களாலும் வளந்தது.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

காஞ்சிவரம்.
பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் கூட சிலவேளை சந்தேகம் தோன்றலாம். ஆனால் அவர் ஒரு அற்புதமான ரசிகர் என்பதில் எவருக்குமே சந்தேகம் தோன்றக்கூடாது. ஒரு அற்புதமான ரசிகனால் மட்டுமே இத்தகைய தேர்ந்த, அமைதியான ஓடை போன்ற ஒரு நடிப்பினை படம் வழியாக எடுத்துச்செல்லமுடியும். கனடாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தினை ஒரு பத்திரிகை விளம்பரம் மூலமே அறிந்துகொண்டு பிரகாஷ்ராஜ்க்காகவும் பிரியதர்ஷனுக்காகவும் பார்க்க சென்றேன். அதுவரை இப்படம் பற்றி ஏதும் கேள்விப்படாததால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி போய் நல்லதோர் பொழுதை அனுபவித்தேன்.

கடைசியாக அரங்கிலின்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பறவைகள் பலவிதம்.
மோசஃபெர் நிறுவனம் மீது எனக்கு பலவிதமான் விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக அது பல படங்களின் உரிமையை வாங்கி டிவிடி களை வெளியிடுகின்றது. ஆனால் தரம் ஒரு மாற்று கம்மிதான். உதாரணமாக மொழி, சென்னை 600028.
ஆனால் மொசஃபேர் மீது மரியாதை கொள்ள காரணம் டிவிடிக்கு வராத பிரபலமாகாத ஆனால் நல்ல பல திரைப்படங்களை டிவிடியாக வெளியீடுசெய்தது. அருமையான ஒரு உதாரணம் “பறவைகள் பலவிதம்”. உங்களில் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீர்களோ தெரியாது. ராம்கி-நிரோஷா, நாசர் – சபீதா ஆனந்த், ஜனகராஜ் – சிந்து என்று மூன்று சோடி கல்லூரி நண்பர்கள் தம் காதலைகூட வெளிப்படுத்தாமல் கல்லூரி நிறைவு நாளன்று பிரிகிறார்கள். சரியாக ஒரு வருடத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. இடையில் என்ன நடந்தது? அதன் பிறகு என்ன ஆனது என்று அற்புதமான கதை. ராம்கியின் நடிப்பு திறன் பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும் பல நல்ல படங்களில் நடித்துள்ளார். உதாரணம்: செந்தூரப்பூவே, என் கணவர், மருது பாண்டி, சின்னப் பூவே மெல்லப்பேசு, மிக குறுகிய காலத்தில் உச்சிக்கு போய் காணாமல் போன நடிகர். திரைப்பட கல்லூரியினர் திரியுலகில் வெற்றிக்கொடி கட்டியிருந்த காலத்தில் இவர் கொடியும் பறந்தது. பின்னர் மெல்ல காணாமல் போய், சில விஜயசாந்தி டைப்படங்களில் நடித்து பரிதாபமாக வில்லன்களிடம் அடிவாங்கினார். ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமத்ததுடன் எல்லாப் எழுதியும் உள்ளார். பாடல்கள் உணர்வுபூர்வமான வரிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஒவ்வொரு கட்டங்களிலும் ஒவ்வொன்று. ஆனால் முதன் முதலாக ஒரு திரைப்படத்தை பார்த்து அழுதது என்றால் பிரபு, சரத்பாபு நடித்த மனசுக்குள் மத்தாப்பூ திரைப்படத்தை பார்த்து. கதாநாயகியின் தந்தை ஒரு வைத்தியர், பிரபுவை அவர் செயல் இழந்த (கோமா மாதிரி) நிலைக்கு கொண்டுவர சரத்பாபு பிரபுவை கருணை கொலை செய்வதாக படம் முடியும். கதாநாயகி வேறு மனநிலை பாதிக்கப்பட்டுவிடுவார். பூந்தென்றலே நீ பாடிவா, வெண்ணிலவை முதல் நாள்... போன்ற சிறந்த பாடல்கள் இடம்பெற்ற படம் .
பின்னர் பூவே உனக்காக மிக பெரிய ஒரு மாற்றத்தை தந்தது. காதல் என்றால் கலைது சென்று கண்ணடித்தல், சைக்கிளோடி சைட்டடித்தல் என்றிருந்த நிலையை மாற்றி அதனை ஒரு உணர்வாக புரிய வைத்த படம். பெண்களை மரியாதையாக பார்க்க வேண்டும் என்று பாலகுமாரனை படிக்க ஆரம்பித்து வேர்விட்ட கொள்கை பெருமரமாக வளர உரமிட்ட படம்.
அதற்கு பிறகு கோகுலத்தில் சீதை, பூவேலி, தொட்டாசிணுங்கி என்று ஆரம்பித்து அண்மைக்கால சுப்ரமணியபுரம் வரை எத்தனையோ. இதுதவிர வேலை இன்மை, கம்யூனிச சித்தாந்தம், சுயமரியாதை போன்ற பல விடயங்களும் சட்டையை பிடித்து உலுப்ப பார்த்து பார்த்து பரவசப்பட்ட படம் வறுமையின் நிறம் சிகப்பு. அதுபோல அன்பே சிவம் படத்தை அரங்கில் விசில், கைதட்டல் ஓசையில்லாமல் இருந்து பார்க்கவேண்டும் என்பதற்காக கனடாவில் பகல் 1:30 காட்சிக்கு நானும் நண்பன் தீபனும் போய் பார்த்துவிட்டி அதிகாலை 2, 3 மணி வரை பேசிக்கொண்டிருந்ததும் ஒரு சுகமான நினைவு.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் – சினிமா அரசியல் சம்பவம்?

பல. படைப்பாளிகளை சுதந்திரமாக செயல்படமுடியாமல் பழைய சித்தாந்தங்களில் மூழ்கிய சிலர் கட்டிப்போடுவது. குருதிப்புனல், மகளிர் மட்டும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, என்று கமல் எத்தனையோ அழகு தமிழ் பெயர்களை படங்களிற்கு சூடியிருக்க மும்பை எக்ஸ்ப்ரஸை பிரச்சனையாக்கியது. அடுத்ததாக கிசுகிசுக்கள். அண்மையில் உளவியலில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பன் ஒருவன் கதைத்தபோதுதான் இவையெல்லாம் மனநிலை சம்பந்தமான குறைபாடுகளின் விளைவுகள் என்ற புரிதல் ஏற்பட்டதும் அவர்கள் மேல் பெரும் பரிதாபமே உண்டானது. அதுபோலவே படம் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்கள் மீண்டும் பணத்தை கேட்பது. ஒரு சின்ன கேள்வி, எதிர்பாராமல் படம் பெருவெற்றி பெற்ற போதெல்லாம் இவர்கள் மேலதிக பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தார்களா?

தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?


நிறைய.... ஆனால் ஒரு போதும் கிசுகிசுக்கள் என்கிற முட்டாள்தனத்தை வாசிப்பதில்லை. அவை நிஜமாக பின்னால் மாறியும் உள்ளன. ஆனால் எனது தனிப்பட்ட வாழ்வை நான் தனித்து வைத்திருப்பதுபோல எல்லாருக்கும் ஒரு privacy இருக்கின்றது. நான் வங்கி ஒன்றில் பணிபுரிவதால் அதன் வாடிக்கையாளர்கள் என் தனிப்பட்ட வாழ்வை, காதலை, குடும்ப விடயங்களை அலசுவதை ஒருபோதும் விரும்பமாட்டேன். சற்று யோசித்து பார்த்தால் இது நடிகர்களின் புகழ் மற்றும் வெற்றி மீதான் பொறமைகாரணமாகவும், அந்த இயலாமை காரணமாகவுமே பிறக்கின்றது. அதாவது தனக்கு பல பெண்களுடன் நெருக்கம் வரவில்லை என்று ஏங்குபவனே அந்த நடிகன் இரண்டு நடிகையருடன் நெருக்கமாக் உள்ளான் என்று கூவுவான்.

சுஜாதா எழுதிய 360 , பாலகுமாரனின் பலகட்டுரைகள், அ. ராமசாமியின் ஒளிதரும் உலகம் உட்பட பல கட்டுரை தொகுப்புகள், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா மற்றும் ஷாஜி ஏழுதும் கட்டுரைகள், பலதரப்பட்ட திரைக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் இப்படியாக விரிந்துபட்ட வாசிப்பு பழக்கம் என்னுடையது. சுஜாதாவின் கட்டுரைகள் எனக்கு நிறைய அற்புதமான திரைப்படங்களை அறிமுகம் செய்துவைத்தன. அதுமட்டுமன்றி வலைப்பூக்களில் கானாபிரபா, முரளிகண்ணன், மு. கார்த்திகேயன் (இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லையே, ஏன்), போன்றவர்களின் பதிவுகளை அடிக்கடி பார்த்து உடனுக்குடனேயே வாசித்துவிடுவேன்.

தமிழ் சினிமா இசை?


என்னை விட்டு பிரிக்கவே முடியாத ஒன்றென்றால் அது இசை மீதான என் காதல் தான். என் இசையுலகம் இளையராஜாவை மையம் கொண்டே வளர்ந்திருந்தாலும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலம் முதல் இன்று வந்த இசையமைப்பாளார்கள் வரை பலரது இசையையும் ரசிப்பது உண்டு. ஆசையாசையாக சேர்த்து பாடல் வெளியான ஆண்டு, படம், பாடியவர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், பாடலாசிரியர் போன்ற எல்லா விபரங்களையும் தொகுத்து வைத்திருந்த பதினெட்டாயிரத்துக்கு அண்மித்த பாடல்கள் கணனியின் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஒரேநாளில் தொலைந்தபோது தாளவே இயலாது துயரம் தோன்றியது.
இளையராஜா, பரத்வாஜ், வித்யாசாகர், யுவன், ரஹ்மான் போன்றவர்கள் என்விருப்ப இசையமைப்பாளார்கள். அத்துடன் எஸ். பி. பாலா, ஜென்சி, சுசீலா, ஜானகி, அனுராதா ஸ்ரீராம், ஷாஹுல் ஹமீத், கார்த்திக், இளையராஜா, கமல்ஹாசன் போன்ற பாடகர்கள் பாடியவையும் வைரமுத்து, முத்துக்குமார், கண்ணதாசன் போன்றாவர்கள் எழுதிய பாடல்களும் எனது தெரிவுகள். இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்து என் முதுமையை கொண்டாட வேண்டும் என்பது என் ஆசை. இப்பொழுது யுவன் மற்றும் ரஹ்மான் இசையமைத்த எல்லாப்பாடல்கலையும் தொகுத்து வைத்துள்ளேன். இளையராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட பிரிவும் விரிசலும் நல்லபாடல்களின் வருகையில் பெரும் தேக்கநிலையை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமாக்களை பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உலக மொழி சினிமாக்களில் குறிப்பிடதக்களவில் பார்த்ததில்லை. அனிமேஷன் என்கிற கற்பனாவாதத்து கதைகளை என்னல் ரசிக்க முடிவதில்லை. என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஒரு மனிதனின் அல்லது சமூகத்தின் வாழ்வினை சொல்லவேண்டும். ஆனால் நிறைய மலையாளப்படங்கள் பார்த்திருக்கிறேன். வடக்கும் நாதன், தன்மாத்ரா, அச்சுவிண்டே அம்மா,தேன்மாவின் கொம்பத்து போன்ற பல மலையாளப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். முன்பொருமுறை கானாபிரபா மலையாளப்படங்களின் பட்டியல் ஒன்றை எனக்கு பிரத்தியேகமாக அனுப்பினார். அதுதான் என்னை மலையாளக்கரையோரம் கொண்டுசேர்தது. ஆங்கிலப்படங்களின் கவர்ந்தவை the great Gatsby, a beautiful mind என்று மிகச்சில.

தமிழ் சினிமா உலகத்துடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?


இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் சிலருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. திரைப்பட உலகில் தொடர்புகொண்டவர்களுல் எழுத்தாளர்கள் பாலகுமாரனுடன் மட்டுமே தொடர்புகள் உள்ளன. அற்புதமான மனிதர். மனம் சஞ்டலப்படும் பல நேரங்களில் கதைக்கும் போதெல்லாம் பேராதரவு தரும் பேச்சு அவருடையது.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய யதார்த்தமான படங்கள் வருகின்றன, வெற்றி பெறுகின்றன. 80களுக்கு பிறகு இப்போதுதான் நிறைய படங்கள் நல்ல கதாம்சத்துடன் வந்து வெற்றிபெறுகின்றன. ஆனால் இசையின் தரம், அது பிண்ணனி இசையானாலும், பாடல்களானாலும் சற்று குறைந்துவிட்டன. எப்போதெல்லாம் என்னை நானே தாலாட்டவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்பொதெல்லம் இளையராஜாவின் இசையைத்தான் இப்போதும் கேட்கவேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமீர், பாலா, சசிக்குமார், ராம், வெங்கட் பிரபு, முருகதாஸ், கௌதம் இப்படி நிறைய புதிய இயக்குணர்களின் வருகை நம்பிக்கை அளிக்கிறது. அதுபோல எல்லா துறையிலும் நிறைய போட்டியாளார்கள் இருப்பதால் மெத்தனம் இல்லாமல் அவரவர் பாணியில் கடும் உழைப்பைக்காணமுடிகின்றது. ஆனால் மக்களுக்கும் திரையரங்கில் சென்று சினிமா பார்க்கும் குணம் வரவேண்டும். ஒரு டொலருக்கு கள்ள (திருட்டு) வி டி யில் படம் ஒரு குடும்பமே திரைப்படம் பார்த்துவிட்டு படம் குப்பை என்று சொல்லும் போக்கு பொறுப்பில்லாத்தனத்தின் உச்சக்கட்டம்.

அடுத்த ஒரு ஆண்டில் தமிழ் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலக்காட்சிகள், இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் எதிலுமே கிடையாது என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும்?. தமிழர்களுக்கு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?

புதிதாக வந்த படங்களைதான் பார்க்கவேண்டும் என்பதில்லையே? என்னைப் பொறுத்தவரை சற்று பழைய படங்களில் மீதுதான் எனக்கு நாட்டம் அதிகம், சரியாக சொன்னால் இந்த கதாநாயகர்கள் கையிலே கட்டையை தூக்கி கொண்டு பன்ச் டயலாக்குகளை சொல்லதொடங்க முதல் வந்த படங்கள். எத்தனை அருமையான படங்களை நாம் பார்க்காமலே கடந்து வந்திருக்கிறோம்?. இதுதான் சந்தர்ப்பம் என்று அவற்றை எல்லாம் தேடிபார்ப்பேன். அந்த ஓராண்டும் புதிதாக திரைப்பாடல்களும் வராது என்பதால், என்னிடமுள்ள பாடல்களை எல்லம் கணிணியேற்றி ஒழுங்கு செய்வேன்.
ஆனால் திரைப்படம் இல்லாவிட்டால் அது நிச்சயம் மக்களை மனவியல் ரீதியாக பாதிக்கும். தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கிருக்கின்ற மிகப்பெரும் கேளிக்கை சினிமாதான். (ஓரளவுக்கு ஒரே கேளிக்கை என்று கூட சொல்லலாம்). இதனால் அவர்களுக்கான வடிகால் (outlet) இல்லாமல்போக மிக மோசமான நிலையில் மக்களின் மனது பாதிக்கப்படும்.