Tuesday, December 12, 2006

தாயே உன்னை எப்படி பிரிந்து…..

தமிழ் சினிமா புதிய பாதையில் செல்கின்றது என்பதை அண்மையில் வெளியான இரண்டு படங்கள் சிறப்பாக காட்டியுள்ளன. இதில் ஒன்றின் போக்கு பயமுறுத்தி இருக்கின்ற அதே வேளை மற்றைய திரைப்படம் மனதை மயில் இறகால் தடவியது போல சுகமளித்திருக்கின்றது. ஒன்று “இது காதல் வரும் பருவம்” மற்றையது “வெயில்”. தான் இயக்கிய படங்களில் தனது நாயகனை சராசரிக்கு பெரியவனாக காட்டிய ஷங்கரின் ரசனை இன்னும் அவரது கை கூடாத கனவான “அழகிய குயிலே” ஆக தான் இருக்கின்றது என்பதை நிரூபித்திருக்கும் படம் இது. வெடுக்கென்றால் கோபமும் முணுக்கென்றால் அழுகையுமாக உணர்ச்சி பிராவகமாய் வாழும் கிராமத்து வெள்ளந்தி மனிதனை இரத்தமும் சதையுமாக காட்டியிருக்கின்றார் வசந்த பாலன். இந்த படத்தின் ஏதாவது ஒரு கட்டம் பெரும்பாலானவர்களின் வாழ்பனுபவமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் அந்த வெயிலோட விளையாடி…. பாடல் விசா, விமானம் ஏதும் இல்லாமலேயெ என்னை அப்படியே தூக்கி யாழ்ப்பாணத்தில் , உயரப்புலத்தில் தூக்கிபோட்டது. உயரப்புலம் கொக்குவில் சந்திக்கும் குளப்பிட்டி சந்திக்கும் இடையில் உள்ள அழகிய கிராமம். அந்த கிராமத்தின் அழகெல்லாம் ஒரு வீட்டில் தான் இருந்தது. ஆனந்தம் விளையாடும் வீடு என்று கூறும்படி ஆனந்தம் மட்டுமே அங்கே ஆட்சி செய்தது. அது எனது நண்பனின் வீடு. என் உயிர்த்தோழனின் வீடு. விசாகனின் வீடு. ஈழப்போராட்டம் எனக்கு செய்த உதவிகளில் ஒன்று காரைநகரில் இருந்த அவனை இடம்பெயர்த்தி அங்கே அமர்த்தியது. நான், விசாகன், தயா, பாலன், பிரதீவன், வாசன், தெய்வீகன், சயந்தன், மயூரன் என்று ரசனையும் ரகளையும் கூடிய அணி எம்முடையது.

அப்போது எமக்கு 15 வயது இருக்கும். ஏதோ ஒரு வேகத்தில் ஒரு ஸ்டைல் என்று நினைத்து எப்போதும் வாயில் பாக்குடன் வலம் வருவது எமது வழக்கம். இதில் முண்ணனி நான், விசாகன், தயா மூவரும் தான். இந்தியாவில் இருந்து வரும் நிஜாம் பாக்கு அப்போது அங்கே பிரபலம். கொக்குவில் பள்ளத்தடியில் இருக்கும் ஒரு கடையில் ஒரு ரோலாக பாக்கை வாங்கி வைத்து கொள்ளுவோம். எமது வாய்க்குள் நாக்குக்கு உடன்பிறவாத சகோதரன் போல பாக்கு ஒட்டிக்கொண்ட காலம் அது. விசாகனின் அம்மாவை பற்றி இங்கே சொல்லியே ஆகவேண்டும். அவவுக்கு இரண்டு பிள்ளைகள் என்றாலும் எங்கள் எல்லாரையுமே பிள்ளைகளாகத்தான் அவ பார்த்துக்கொண்டா. இப்போதும் அவவை அம்மா என்று தான் நான் அழைப்பது வழக்கம். ஒரு நாள் அவ விசாகனின் புத்தக (B)பாக்குள் இருந்த பாக்கை சாவகாசமாக போட்டிருக்கிறா. அது தலைய சுத்தி மயக்கம் வரப்பண்ணியிருக்கு. அவவுக்கு நாங்கள் ஏதோ போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகிட்டோம் என்ட பயம். இதுக்கிடையில் அவ போன டொக்டர் வேற இது ஏதோ பாண்டு நோய் என்ற வருத்தத்தை கொண்டு வரும் என்று சொல்லியிருக்கிறார். அன்றேல்ல இருந்த்து ஸ்கூலுக்கு போக முதல் ஒரு கப் பால் குடிக்க வேணும் என்று கட்டாய சட்டம். நானும் அவன் வீட்ட போய் ஸ்கூலுக்கு போற படியால எனக்கும் ஒரு கப் கிடைக்கும். ஏனென்றா நானும் அவவுக்கு மகன் தானே. ஒன்ற இங்கே சொல்லோனும், இதக்கேட்டெல்லாம் நாங்கள் பாக்கை விடேல்ல, அதுக்கு வேற ஒரு வரலாறு இருக்கு. அது பற்றி பிறகொரு பதிவில்.

அப்ப எங்களுக்கு கிரிக்கட் என்றால் பைத்தியம். BBC தமிழோசையில் ஞாயிறு தோறும் விளையாட்டரங்கம் என்ற ஒரு பகுதி வரும். அதைக்கேட்க என்றே அதை எமது இரவு உணவுக்கான நேரமாக மாற்றிக்கொண்டோம். அப்போது தூத்துக்குடி வானொலியில் இரவு 8:45 முதல் 9:00 வரை மூன்று பாட்டு ஒலிபரப்புவார்கள் பிறகு 9 முதல் 9:15 வரை ஆல் இந்தியா ரேடியோவின் ஆங்கில செய்திகள் பிறகு 9 :15 முதல் 9:45 வரை BBC. இது தவிர இந்திய மற்றும் இலங்கை வானொலிகளில் அப்பப்போ நேரடி வர்ணணை செய்வார்கள். இதை விட்டால் இந்தியாவில் இருந்து வரும் SPORTSTAR சஞ்சிகை. இவை தான் எமது கிரிக்கெட் அறிவை வளார்த்துக்கொண்டிருந்தன. இப்படியான சமயத்தில் எமக்கு ஆபத்பாந்தவனாக அறிமுகமானவன் தான் சுஜீவன். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ந்து கிரிக்கட் விமர்சனங்களை எழுதிவந்த நண்பர் இவர். ஒரு 8 Band ரேடியோவை கையில் பிடித்தபடி சைக்கிளில் போய்வரும்போதும் வர்ணனைகளை கேட்கும் அளவு தீவிர கிரிக்கட் ரசிகன் இவர். போராட்ட பிரச்சாரங்களும் ஆட்சேர்ப்பும் முழுவேகத்தில் நடந்த 95 ன் மத்திய பகுதிகளில் எனது வீடு தேடி வந்து எனக்கு கிரிக்கட் ஸ்கோர்களை சொல்லும் இனிய நண்பர் இவர். ஒரு முறை நானும் அவரும் நானும் சாவக்காடு ஊடாக எனது வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தோம். அப்போது இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் அடையே டெஸ்ட் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. தொடர் 1-1 என்றளவில் இருக்கையில் மூன்றாவது டெஸ்ட்டில் இலங்கையின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகி இருந்த நிலையில் வெற்றிக்கு தேவையான இறுதி இலக்கை விழுத்தி அரவிந்த டீ சில்வா வெற்றியை உறுதி செய்தார். அதை வர்ணணையில் சொன்னது தான் தாமதம், சுஜீவன் சைக்கிளை விட்டு இறங்கி “he is out, he is out, srilanka won” என்று கத்தியது இப்போதும் ஞாபகம் இருக்கின்றது. இந்திய அணி மீதான எனது ஈடுபாடும் இலங்கை அணி மீதான அவரது ஈடுபாடும் அடிக்கடி எம்மை சர்ச்சைகளில் ஈடுபடுத்தினாலும், எனது வாழ்வின் அழிக்கமுடியாத ஞாபக பக்கங்களில் அவருக்கும் ஓரிடம் உண்டு.

இதற்கு பின் ராணுவக் கட்டுபாட்டில் யாழ்ப்பாணம் வந்து அங்கே திரைப்படங்கள் பார்க்க சனம் தொடங்கிய நேரம். அப்போ நாங்கள் பார்த்த இரண்டரை மணி நேர படங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்வோம். எமது சந்திப்புகளை மையப்படுத்தி நாமே அமைத்த ஓலைக்குடிலும் வாசலோரமாக இருந்த பெருமரமும் தான் நாம் அவை கூடும் இடங்கள். அப்போது இந்தியன் திரைப்படம் வெளியாகி யாழ்ப்பாணத்தில் படமும் அதன் பாடல்களுல் ஏகப்பிரபலமாகி இருந்தன. ஒருநாள் நண்பன் ஒருவன் டெலிபோன் மணிபோல்… பாடலை பாடும்போது “காத்திருக்கும் கமலா இவள்தானா” என்று பாடினான். உண்மையில் “ஸாகிர் ஹுசய்ன் தபேலா இவள்தானா” (படத்தில் வரும் இக்காட்சி ஏகப்பிரபலம்??) என்பது தான் சரியான வரிகள். இதைப்பற்றி நாம் கூறியதும் அவன் இல்லை என்று கூறி தான் சொன்ன வரிகளுக்கு விளக்கம் சொன்னான். நேருவின் மனைவியின் பெயர் கமலாவாம் (அது உண்மையும் கூட). சுதந்திரப்போராட்ட காலங்களில் நேரு சிறை சென்ற பொழுதுகளில் எல்லாம் எப்படி கமலா காத்திருந்தாரோ அது போல தனது கடமையில் கண்ணாக திரியும் காதலனை எண்ணி இவளும் காத்திருக்கிறாள் என்பதே அதற்கு அர்த்தமாம் உண்மையில் வைரமுத்துவுக்கு கூட தோன்றாத அற்புதமான கற்பனை இது. இக்காலங்களில் நாம் அடிக்கடி பாடசாலைக்கு மட்டம் போட்டு யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் சந்திரன் என்பவர் நடத்திய மினி சினிமாவில் படம் பார்ப்பது வழக்கம். நாயுடு ஹால் என்பது நாம் அதற்கு வைத்த செல்லப்பெயர். அங்கே மீண்டும் மீண்டும் பார்த்த இருவர், மின்சாரக்கனவு, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லம் காதல் வாழ்க, தர்ம சக்கரம், பூவே உனக்காக, உள்ளத்தை அள்ளித்தா பாடல்கள் இப்பொது பார்த்தாலும் அந்நாள் நினைவுகளை மீட்பதாலேயெ நன்றாக இருக்கின்றன. அப்படி ஒருநாள் வேறு ஒரு சினிமாவில் ட்யூசனை மட்டம் போட்டுவிட்டு தளபதி படம் பார்த்தோம். நாம் வெளியில் திரிவதை என் அப்பா கண்டிருக்கிறார். ஆனால் அது எனக்கு தெரியாது. நான் வீடு வந்ததும் அப்பா எப்படி இண்டைக்கு வகுப்பு என்று கேட்டார். நான் உண்மைய சொன்னேன். அவருக்கு அது நல்ல சந்தோசம். பிறகுதான் தான் என்னை கண்டதாகவும், அதற்காகதான் கேட்டதாயும் நான் உண்மைய சொன்னது தனக்கு சந்தோசம் என்றும் கூறினார். வெயில் திரைப்படம் பார்த்தபோது எனது தந்தையின் நிதானமும் பெருந்தன்மையும் தான் நினைவு வந்தது,

இப்படி வெயிலோட விளையாடி ஷெல் அடியோட உறவாடிய எத்தனையோ நினைவுகள் எம் அனைவர் நெஞ்சிலும். அத்தனைக்கும் அச்சாரமாய் விசாகன் இருந்த அந்த அழகிய உயரப்புல வீடு. இவற்றில் இருந்து விலக்கி காலத்தின் கோலம் என்னை கனடாவுக்கு அனுப்பியது. கனடா வந்த நாள் முதல் என் மனதில் இருந்த பெரும் ஆசை எப்படியும் அந்த உயரப்புல வீட்டை எமக்கு உரிமையாக்கி எமது முதுமையை அங்கே கொண்டாடவேண்டும் என்பது. ஆனால் நான் கனடா வர தயாராகி கொழும்பில் இருந்த நேரம் விசாகன் உயரப்புல வாடகை வீட்டை காலி செய்து யாழ்ப்பாணம், கஸ்தூரியார் தெருவுக்கு இடம்பெயர அந்த வீட்டை மேற்பார்வை செய்த அருணகிரி என்பவர் அதை யாருக்கோ விற்று விட்டாராம். அந்த வீட்டை நான் வாங்க நான் தயார், உரிய ஏற்பாடுகளை செய் என்று கூறியும் ஏனோ என் உயிர்த்தோழன் விசாகன் அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அந்த அழகிய பெரு மரம் கூட தறிக்கப்பட்டு விட்டதாம். எமக்கு வாழ்வின் ஆட்டோகிராப் ஆக இருந்த அம்மரத்தையும் எவனோ ஒரு முட்டாள் மரம் என்று மட்டும் பார்த்திருக்கிறான். (இதை கேட்டவுடனேயே நினைவுகளின் பதிவெடாய் மரம் காட்டப்படும் ஏப்ரல் மாதத்தில் படத்தை வாங்கி சேமித்துவைத்துள்ளேன்.) ராமன் பிறந்து இறந்த பின்பும் கொண்டாடப்படும் அயோத்திபோல அந்த மரம் போன பின்பும் அந்த வீட்டை நான் கொண்டாடுகிறேன். அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், மண்ணும், கல்லும், புல்லும், புழுவும், பூண்டும் கூட எம் வரலாறு சொல்லும். அதற்காகவேனும் அதனை யார் உரிமைப்படுத்தி இருந்தாலும் எம்மிடம் கொடுத்துவிடுங்கள். எனது உயிரின் ஒரு பாதி அந்த மண்ணில் தான் பரவிக்கிடக்கிறது.

Friday, December 1, 2006

தொட்டாச்சிணுங்கி உறவுகள்


“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட ஐஸ்கட்டி உடைய, நட்பு பெருக, வரும்
தலைமுறை மீது அக்கறை அதிகமாகும். முன்பைவிட அக்கறையாய், அன்புச் சூழ்நிலையில் அமைதியான இடத்தில் அடுத்த தலைமுறை வளாரும். அந்த தலைமுறையில் கலை இலக்கியமும், அரசியலும், பொருளாதரமும், வாழ்க்கை நிலையும் உயரும்…..” - பாலகுமாரன்


அண்மையில் மீண்டும் ஒருமுறை தொட்டா சிணுங்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நல்ல சினேகிதம் மலரலாம், தொடரலாம் என்பதை அழுத்தமாக கூறிய மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மனதோடு மழைக்காலம் (ஷாம்-நித்யா தாஸ்), மறுபடியும் (அரவிந்த் சாமி-ரேவதி) போன்ற படங்களில் ஆண், பெண் சினேகிதம் பற்றி காட்டப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டியது இப்படத்தில் தான். ரகுவரன் தாழ்வு மனப்பான்மையுட ரேவதி- கார்த்திக் நட்பினை சந்தேகிப்பது போல வரும் காட்சிகளில் அவர் ஒரு சாதாரண மனிதனுக்கு இயல்பாக ஏற்படகூடிய மன உணர்வுகளை அல்லது மன உளைச்சல்களை பிரதிபலிக்கிறார். மேலும் வசனம் எழுதிய இயக்குனர் அதியமானின் அற்புதமான வாதத்திறமையினால் ரேவதி, கார்த்திக், ரகுவரன், தேவயானி, நம்பியார், பிரசாத் என்று அனைத்து கதாபாத்திரங்களின் நியாயங்களும் சரியான முறையில் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில் நாம் வாழும் பிற்போக்கான சமூகத்தினால் நிராகரிக்கப்படும் ஆண், பெண் நட்புகள் ஆண்களையும், பெண்களையும் மனதளவில் அங்ககீனர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. சகோதரியாகவோ. தாயாகவோ அதன் வழிவந்த உறவுகளாகவோ அல்லது மனைவியாகவோ மட்டும் தான் ஒரு பெண்ணுடன் உறவு ஏற்படமுடியும் என்பது இங்கே எழுதாத சட்டமாக மாறிவிட்டது. நான் உயர் கல்லூரியில் படித்தபோதும், அதன் பின்னும் இந்த நெருக்கடிகளுக்கு ஓரளவு வளைந்து “அவரோட அண்ணாமாதிரிதான் பழகுகிறேன்” என்று கூறும் பெண்களையும் “அவ எனக்கு தங்கச்சி மாதிரி” என்று கூறும் ஆண்களையும் எண்ணிக்கையில்லாமல் கண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவன் அக்கா, அக்கா என்றழைத்த பெண்ணுக்கு அவனைவிட இரண்டு வயது குறைவு… இதைபற்றி அவனிடம் கேட்டபோது சொன்னான் “நான் அவவை லவ் பண்ணேல்ல, ஒருவேளை அவவோ இல்லை வேறு யாராவதோ அப்படு நினனக்காமல் இருக்க தான் இப்படி கதைக்கிறேன்”. இப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது…. ஆனால் அக்கா, அக்கா என்று அன்பாக பழகியவனுக்கு அழைப்பு இல்லை. தனது புனிதத்தை காக்க அந்த பெண் செய்த / செய்யவேண்டிய காரியம் இது…. இதற்கு காரணம் இத்துப்போன எமது சமூக கட்டமைப்பு. ஆணும் பெண்ணும் மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் இவன் எனது தோழன் என்றோ அல்லது எனது தோழி என்றோ தனது குடும்பத்தினரிடமோ அல்லது கணவன், மனைவிக்கோ அறிமுகப்படுத்தும் நிலை
எம்மிடையே இன்று இல்லை.

ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நல்ல தோழமையாக இருப்பதாலும், ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பதாலும் அவர்கள் வாழ்வில் எவ்வளவு அனுசரிப்பு அதிகரிக்கும் என்பது ஏன் எவருக்குமே புரிவதில்லையோ?? கல்யாணச்சந்தையில் பெண் சினேகம் அதிகம் என்பது ஒரு ஆணின் மார்க்கெட்டை குறைக்கும் விடயமாகவே இருக்கின்றது, பெண் சினேகம் என்பதே ஏன் ஒரு கொச்சையான விடயமாக கருதப்படுகிறதோ தெரி்யாது, எதற்கெடுத்தாலும் ராஜராஜசோழன் என்றும், ராஜேந்திரன் என்றும் பழம்பஞ்சாங்கத்தை புரட்டும் நம்மவர்கள் ஏனோ அவர்கள் இருவரும் பெற்றா வழங்களுக்கு அவர்களுக்கு அமைந்த அற்புதமான பெண் தோழியரும் காரணம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

இப்படியான சமுதாய நிர்ப்பந்தங்களுக்கு வளாஇந்து கொடுக்காமல் கல்லூரி நாட்களில் நெருக்கமாக பழகிய (இந்த நெருக்கமாக என்பதை கூட வேறு அர்த்தத்தில் தான் சமுதாயம் பார்க்கும்) தோழனும் தோழியும் அவர்கள் குடும்பங்களாலேயே மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டு இருவரும் கண்டால் கூட கதைக்கக்கூடாது என ஆயுத முனையில் மிரட்டப்பட்டதை நன்றாக அறிந்தவன் நான்.

தொட்டாசிணுங்கி படத்தை முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் பார்த்துவிட்டு அதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது எனது நன்பன் ஒருவன் இந்த நட்பு நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று கூற நான் சாத்தியம் என்று கூறினேன். இதற்காக பந்தயமும் பிடித்தோம். இப்போது அவன் மணந்திருப்பது எனது சினேகிதியை, எம் நண்பன் ஒருவனின் சகோதரியை. மீண்டும் அவனை நேரில் காணும்போது அவனிடம் கேட்கவேண்டும்; அது சாத்தியமா இல்லையா என்று.

Saturday, October 14, 2006

பாலகுமாரன்: கம்யூனிஸ்ட்; எழுத்தாளர்; சித்தர்


அண்மையில் மீண்டும் ஒருமுறை பாலகுமாரன் எழுதிய இரும்புக் குதிரைகள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது பாலகுமாரன் மீது லேசான கோபம் வந்தது; ஏன் இவர் இப்படியான புத்தகங்களை இப்போது எழுதுவது இல்லை. அதிலும் அந்த குதிரை கவிதைகள்.

குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய் பறவை போல
இலக்குகள் குதிரைக்கில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர…
……………………………..
………………………………….
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்.

என்று அவர் எழுதிய குதிரை கவிதைகள் எமது பதின் வயதுகளில் எம்மிடையே மிகப்பிரபலம். அதிலும் யுத்தம் காரணமாக புத்தகங்கள் தட்டுபாடான யாழ்ப்பாணத்தில் எனது பெரியப்பா மூலமாக எனக்கு நிறைய புத்தகங்கள் கி
டைப்பதால் எனது நண்பர்களுக்கோ எனக்கோ புத்தகங்களுக்கு தட்டுபாடு கிடையாது. அப்படியான நேரத்தில் எனக்கு பாலகுமாரனை அறிமுகம் செய்தவன் எனது நண்பன் தயாபரன். அவன் மூலமாக அவரது நெல்லுக்கு இறைத்த நீர் வாசித்து அதன் பாதிப்பில் தொடர்ந்து பாலகுமாரன் புத்தகங்களாக வாசித்து தள்ளதொடங்கினேன்.

பாலகுமாரனின் படைப்புகளை தொடர்ந்து தீவிரமாக படித்துவருபவன் என்ற அளவில் அவரது படைப்புகளை ஆரம்பகாலம், இடைக்காலம், தற்காலம் என்ற அளவில் பெரிய வித்தியாசங்களை காணலாம்.

ஆரம்பகாலங்களில் முற்போக்கான எண்ணங்களுடன் கம்யூனிச சிந்தனை பெண்விடுதலை என்கிற அளவில் எழுதிய மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், அகல்யா, ஆசை எனும் வேதம், தாயுமானவன் என்று அவர் எழுதிய நாவல்கள் நல்ல தரத்தில் இருந்தன. அவருடைய இரும்புக்குதிரைகள் நாவலில் வருகின்ற தாரணி, கௌசல்யா, காயத்ரி என்கின்ற மூன்று பெண்களுமே சாதாரண இல்லத்தரசி, முன்னேறும் வேகமும், துணிச்சலும் கொண்ட பெண், மரபுகளை மதியாத, அவற்றை உடைத்தெறியும் வேகம் கொண்ட புதுமைப்பெண் என்கின்ற மூன்று நிலைகளில் காட்டப்பட்டு இருப்பார்கள். கதையின் நாயகனான விஸ்வநாதனோ இலக்கிய தேடலும் கவிதை எழுதும் மோகமும் கொண்ட, ஆனால் குடும்பவாழ்வின் சுமைகளில் மூழ்கிப்போனவனாக சித்திரிக்கப்பட்டிருப்பான்.

இதைப்போலவே மெர்க்குரிப்பூக்கள் நாவலும் கம்பனி ஒன்றில் நிகழும் ஸ்ட்ரைக்கில் கொல்லப்பட்ட் தொழிலாளியயும், அதே கம்பனியில் வேலை செய்த அயல்வீட்டுப்பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்த இளைஞனும் இவர்கள் இருவரையும் சுற்றிய நிகழ்வுகளிலும் கதை பின்னப்பட்டிருக்கும். இந்த கதையை தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே எழுதவதாயும் அவர் தனது சுயசரிதமான முன்கதை சுருக்கத்தில் கூறி இருந்தார். இந்த காலகட்டங்களில் அவர் ட்ராக்டர் கம்பனியில் வேலை செய்து கொண்டே எழுதியிருந்தாலும் அவரது படைப்புகள் நல்ல தரத்தில் இருந்தன.

இதற்கு பின்னர் அவர் சினிமா ஆசையில் உத்தியோகத்தை உதறிவிட்டு K பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சிந்து பைரவி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் பணியாற்றினார். அக்கால கட்டங்களில் அவருடன் சக உதவி இயக்குனராக வேலை செய்தவர்கள் தான் சுரேஷ் கிருஷ்னா (பாஷா, வீரா, பாபா, ஆளவந்தான்) வஸந்த் (கேளடி கண்மனி, ரிதம், ஆசை, நேருக்கு நேர்). பின்னர் பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு என்கிற படத்தை இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் அந்த படத்தில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களால் அதற்கு பின்னர் எந்த ஒரு படத்தையும் இவர் இயக்கவில்லை. (ஆனால் பல படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அண்மையில் கூட புதுப்பேட்டை, மன்மதன் படங்
களில் வசனங்கள் பாராட்ட்ப்பட்டன.) ஆனால் திரை துறையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படியில் நிறைய நாவல்களை எழுதினார். ஆனால் இந்த நேரத்தில் தான் அவரது நாவலின் தரம் குறைய தொடங்கியது என்றும் சொல்லலாம். எழுத்தையே முழு நேர தொழிலாக கொண்டதால் நிறைய எழுதும்படி ஏற்பட்ட கட்டாயமும் இதற்கு காரணமாய் இருக்கலாம்.

அதே சமயத்தில் யோகி ராம்சுரத்குமாரடன் ஏற்பட்ட அறிமுகமும் ஆன்மிகத்துடன் எற்பட்ட அதீத ஏடுபாடும் கூட அவரது எழுத்தை பாதித்தது என்றே சொல்லவேண்டும். இக்கால கட்டத்தில் விதுரன் கதை, க்ருஷ்ண அர்ச்சுணன், முதிர் கன்னி, பழமுதிர்குன்றம், தங்கத்தாமரை போன்ற சில நல்ல படைப்புகளை படைத்திருந்தார். ஆனால் ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளராக, முற்போக்காளராக அறியப்பட்ட பாலகுமாரன் அதன் பின்னர் காணாமல் போய்விட்டர். இதன் பின்னர் இந்துத்துவ கருத்துகளை மிக வேகமாக பரப்பவே முற்பட்டார். அதே போல அவரது சோழர்கள் மீதான ஈடுபாடும் அவரது நாவல்களில் வெளிப்படையாக தெரிந்தது. அதே போல அவர் தன் நாவல்களில் வரும் கதா பாத்திரங்களை தொடர்ந்து தெளிவானவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் காட்டிக்கொண்டார். தமிழ்மொழி ஆர்வம் தியானம் போன்ற விடயங்களை பரப்பும் முயற்சியில் இவர் பங்களிப்பு தந்திருந்தாலும் கதைகளில் திரும்ப திரும்ப அது கூறப்பட்டபோது சலிப்பே தோன்றியது. மேலும் ஒருகாலத்தில் தன்னை கம்யூனிஸ்ட்டாக காட்டிக்கொ
ண்ட இவர் பின்னர் வெளிப்படையாகவே தன் பிராமண ஆதரவை காட்டிக்கொண்டார். அதேபோல அண்மையில் எழுதிய “குருவழி” என்கிற புத்தகத்தில் ஒருகாலத்தில் தன்னை வழிகாட்டியதாக கூறிய அயன் ராண்ட் இன் கருத்துக்களையே முட்டாள்தனமானவை என்று கூறி, தொடர்ந்து அதுவே வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டார்.

முன்பொருமுறை முன்கதை சுருக்கம் என்று இவர் எழுதியதற்கும் இப்பொது எழுதி வரும் சுயசரிதமான காதலாகி கனிந்துவுக்கும் இடையிலேயே எத்தனையோ வெளிப்படையான வித்தியாசங்கள். அது மட்டுமல்லாமல் அவர் அண்மையில் எழுதிய ஏழாவது காதல், அப்பம் சடை தயிர் சாதம், உடையார், காதல் சிறகு போன்றவை கூட இவரது ஆரம்ப காலங்கள் போல அமையவில்லை. கிட்ட தட்ட பாலகுமாரனின் 100 புத்தகங்களை ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கும் என்போன்ற தீவிர பாலகுமாரன் வாசகர்களுக்கு இது ஒரு இழப்பு தான்.

Saturday, September 9, 2006

அது ஒரு அழகிய நிலாக்காலம்

சங்க காலம், சங்கமருவிய காலம் என்று சொல்வதுபோல ட்யூஷன் காலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு 90 களில் யாழ்ப்பாணம் எங்கும் ட்யூஷன் வகுப்புகள் ஆக்கிரமித்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே படத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்களும், சினிமாக்களும் தடை செய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமை இந்த ட்யூஷன்களுக்கே உண்டு.

வேலாயுதம் அவர்களால் நடத்தப்பட்ட மணி கல்வி நிறுவனம், பாஸ்கரன் அவர்களின் எடிசன் அக்கடமி, கோண்டாவிலில் இயங்கிய நிரு ட்யூஷன் சென்ரர் (இதனை தொடக்கியவர் இப்போதும் கனடாவில் இதே பெயரில் ட்யூஷன் வகுப்புகளை எடுக்கிறார், இவரது மகன் எனது நண்பன்) day claasses க்கு பெயர் பெற்ற விக்னா என்பவை இதில் முக்கியமானவை.

இதில் எடிசன் அக்கடமி யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகிலும், கொக்கு இந்துக் கல்லூரிக்கு அருகிலுமாக இரண்டு இடங்களில் இயங்கி வந்தது. இப்போது திரும்பி பார்க்கும் பொழுது 10 வருடங்கள் ஆன பின்னும் அந்த காலம் தான் எமது வசந்தகாலம் என்று தோன்றுகிறது.

திரைப்படங்களுக்கு விளம்பரம் தருவது போல இளஞர்களால் இளைஞர்களுக்காக நடந்த ட்யூஷன் இது. பாஸ்கரன், அரவிந்தன், கோபி, கொலின்ஸ், சந்திரமோகன் என்று பெரும்பாலும் இளைஞர்களே வகுப்பெடுத்தார்கள். அங்கு ஆங்கில ஆசிரியராக இருந்த சத்தியமூர்த்தி அவர்கள் இப்போது கனேடிய வானொலிகளில் ஆலய உற்சவங்களை வர்ணனை செய்கிறார். அவரது வகுப்பு மத்தியான நேரங்களில் நடப்பதாலும், அந்நேரம் அருகிலிருந்த கொக்குவில் இந்து மைதானத்தில் க்ரிக்கெட் மாட்ச் நடப்பதாலும் அவரது வகுப்பை விட்டு நாம் ஓடுவதும் அப்படி ஓடுபவர்களை துரத்திபிடிப்பதும் இப்போது நினைத்தாலும் சிரிப்புதான். தயா, விசாகன், பாலன், பிரதீவன், வாசன் என்று எமது கூட்டணி இப்படி ஓடுவதில் முண்ணனி வகித்தது குறிப்பிடத்தக்கது. இதில் நானும் பிரதீவனும் ஒரே மாதம், திகதிகளில் பிறந்தவர்கள். ஒருமுறை ஒரு பரீட்சையில் அவனும் நானும் date of birth ஒன்றாகப் போட்டதை நாம் copy பண்ணியதாக எண்ணி டோஸ் விட்டதும் நாம் எவ்வளவு சொல்லியும் நம்ப மறுத்ததும் தனிக்கதை.

அங்கு படிப்பித்த கோபி அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி கதாநாயகன், சற்று தடித்த குரலில் சாதுவான “கொன்னை”யுடன் கைகளை வேகமாக அசைத்துக்கொண்டும், shirt sleeve களை அடிக்கடி இழுத்திவிட்டபடி அவர் பேசும் ஸ்டைலுக்கு ரசிகர் கூட்டமே இருந்தது. அது மட்டுமல்ல சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் படிப்பிப்பதால் அரங்கம் நிறைந்த வகுப்புகளாகவே அவரது வகுப்புகள் போகும். “நீர் எங்கேருந்து வாறனீர்”, “நீர் ஏன் ரம்புட்டான் பழ வியாபாரி போல துரத்தி துரத்தி கதைக்கிறீர்”, போன்ற அவரது காமெண்டிகள் அந்நாளில் யாழ்ப்பாணத்தில் படு பிரபல்யமானவை. ஒருமுறை பலமாக கொட்டாவி விட்ட ஒரு மாணவனை பார்த்து “தம்பி வாய மூடும், நேற்று சாப்பிட்ட இடியப்பம் சாம்பாரில மிதக்கிது” என்றபோது கடலலை போல சிரிப்பலை தொடர்ந்தது. ஒரு முறை “சத்யா” கட் உடன் வந்த தயாவ பார்த்து “நீர் என்ன மிச்ச காசுக்கும் தலமயிர் வெட்டினீரா” என்று கெட்டது இப்பொதும் எம்மிடையே பிரபலமான காமென்ட்.

கொலின்ஸ் மாஸ்ரர் அதே நேரம் விப்ஜியோர் என்ற ட்யூசனை சொந்தமாக வைத்திருந்ததுடன் இங்கு விஞ்ஞானம் படிப்பித்து வந்தார். அவர் ஒரே தம்மில் நாய், எருமை, பண்டி, மூதெவி, வேதாளம் என்று திட்டுவதும் எம்மிடையே ஒரு பாஷன்.

எடிசனில் வகுப்பறைகளைவிட எமக்கு பிடித்த ஒரு இடம் என்றால் அது தெருவோரமாக இருக்கும் மதகுகள் தான். அருகில் உள்ள கடையில் வாங்கிய பீடாவை மென்றபடி அதில் ரோட்டோர ரோமியோக்களாக நாம் கொலு இருப்போம். சக மாணவர்களிடம் பிச்சை எடுத்து பக்கத்தில் இருந்த கடையில் பாணும், வாழைப்பழமும், அஸ்ரா மாஜரின் பக்கட்டும் வாங்கி உண்போம். அதைவிட ட்யூஷனில் இருந்து ஒரு படையாக புறப்பட்டு ஆனைக்கோட்டை மண்பிட்டிகளில் ஏறி நின்று பாடி ஆடி மகிழ்வோம். அந்நேரங்களில் எம்முடன் இருந்த பிரதீஸ் என்ற நண்பன் பின்னர் நவாலி தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல்களில் பலியானான். அவனுடன் கிராம சேவகராக இருந்த அவனது ஒன்று விட்ட சகோதரியும் பலியானது பெருங்கொடுமை.


பீடா, நிஜாம் பாக்கு, அருகில் இருந்த வள்ளிநாயகி கடையில் குடிக்கும் டீ, பின்பு எனது நண்பன் விசாகன் வீட்டில் விளையாடும் கிரிக்கெட் என்று போன வாழ்வை குலைத்தது 95 ஒக்டோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து கால்நடையாக போகையில் எடிசனை கடக்கும்போது வடிந்த கண்ணீர் இப்போதும் கரிக்கிறது. இதன் பின் 98 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சில நாட்களால் எடிசனுக்கு போனேன். ஓலைக் கூரைகள் சிதைந்து போய் இருந்தன. உள்ளே நுழைந்து வழமையாக நாம் அமரும் 7ம் வாங்கில் சில நொடிகள் அமர்ந்து பார்த்தேன். மேசையில் இருந்த தூசியை தட்டியபோது எனது பெயருடன் எனது 4 நண்பர்களின் பெயரை எழுதி இருந்ததை கண்டதும் கண்ணில் நீர் கட்டியது. அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் ஆனால் பிரகாசமாக அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.

Sunday, August 27, 2006

இனத்துக்காகவேனும் திருந்துங்கள்

அண்மையில் இலங்கை அரசினால் செஞ்சோலை மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சின்போது கொல்லப்பட்ட 61 பேருக்கும் இரங்கல் தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் கனடாவில் பல நிகழ்வுகள் இடம்ப்ற்றிருக்கின்றன. ஆனால் கனேடிய பத்திரிகைகளான Toronto Star, Sun, National Post, Global Mail என்பன இது பற்றி எதுவிதமான எதிர்வினைகளையும் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை பெற்ற ஓட்டாவாவில் பாராளுமன்ற முன்றிலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் கூட பத்திரிகைகளை ஈர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விடயமாகும்.

1987இல் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை பற்றி கூறும் பொழுது 98ம் ஆண்டு கம்பன் கழக விழாவிற்காக இலங்கை வந்திருந்த பிரபல இந்திய எழுத்தாளர் பாலகுமாரன், அந்நிகழ்வுகள் சரியான முறையில் இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியிருந்தது நினைவு இருக்கலாம்.

ஆனால் சரியான முறையில் எம்மால் பதிவு செய்யப்பட்ட அண்மைக்கால நிகழ்வுகள் கூட எதுவிதமான சலனங்களையும் பத்திரிகை ஊடகங்களில் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனால் அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் பல கைது நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை வைத்து பார்க்கின்றபோது தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டவேண்டும் என்கிற நோக்கத்துடன் பத்திரிகைகள் செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுவது இயற்கை.

ஆனால் இதனை இன்னொரு கோணத்தில் பார்த்தால் இதற்கான காரணங்களை எம்மால் ஒரளவு அறிந்து கொள்ளமுடியும். ஒரு ஆராய்ச்சி நோக்குடன் கனேடிய பத்திரிகை வட்டத்தில் கடந்த காலங்களில் தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றது கோஷ்டி மோதல்களிலும், கடன் அட்டை துஷ்பிரயோகங்களிலும் தான். அது மட்டும் அன்றி வங்கிரோத்து, சமூக நல உதவிகள் போன்றவற்றில் தமிழர்கள் எவ்வாறு துஷ்பிரயோகங்களை செய்கிறார்கள் என்று சில மாதங்களின் முன்னர் வெளியான பத்திரிகை ஒன்று விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்கார்பரோ பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு தமிழ் குழுக்களுக்கும் (Gangs) அவற்றின் வழிவந்த குழுக்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களால் தமிழர்களின் மதிப்பு மெல்ல மெல்ல செத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான நிகழ்வுகளால் தமிழர்கள் மீது பிற சமூகத்தினருக்கு எதுஇதமான அனுதாபமோ, இரக்கமோ இல்லமல் போனது எமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பேயாகும்.

அமைதியாக ஓய்வை கழிக்கவும், சுக சுவாத்தியத்துக்குமாக பராமரிக்கப்படும் பூங்காக்கள் தோறும் தமிழ் இளைஞர்கள் குழுக்களாக நின்று பியர் அருந்துவதும் பின்னர் அத்தனை போத்தல்களையும் அங்கேயே உடைத்து எறிந்துவிட்டு போவதையும் நீங்கள் கண்கூடாக கவனித்திருப்பீர்கள். இத்தகைய நிகழ்வுகளால் எமது மதிப்பு கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்க, சிங்கள இனத்தவரோ தம்மை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டதுடன் தம்மீது உயர்ந்த விம்பம் ஒன்றை (Descent Image) வருமாறும் பார்த்துக் கொண்டனர். குழு மோதல்களிலோ இல்லை கடன் அட்டை போன்ற துஷ்பிரயோகங்களிலோ எந்த ஒரு சிங்களவரினது பெயரோ இதுவரை இடம்பெறவில்லை (இல்லை) இடம்பெற்றது மிக மிக குறைவு. இவற்றை காரனம் காட்டி நாம் அவர்களை பசுக்கள் (பயந்தவர்கள்) என்று கேலி பேசி கொண்டிருக்க சிங்கள சமூகத்தினர் உண்மையாகவே பசுக்களாக, சாதுக்களாக மதிக்கப்பட்டு கொண்டார்கள். இது எமக்கு விடுதலை போராட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்த்தது.

தம்மை மாவீரர்களாகவும், gangster களாகவும் வரித்து கொள்ளும் இவர்கள் உண்மையில் சாதித்தது என்ன ??? இங்கே வீண் வீரம் கதைத்து கொண்டு இருக்கும்போதே எமது சகோதரர்கள் அங்கே கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு இவர்கள் என்ன எதிர்வினை ஆற்றினார்கள் ??? ஸ்கார்பரோவில் நடைபெற்ற எந்த ஒரு கண்டன கூட்டத்திலும் ஏன் இவர்கள் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை??????


எமக்கென்றொரு நற்பெயர் இருந்தது; அதை கெடுத்துவிட்டீர்கள். எம் இனத்தை அனாதரவு ஆக்கியதில் சிங்களவனுக்கு இருக்கும் அதே பங்கு உரிமை உங்களுக்கும் இருக்கிறது. நான் உங்களை குற்றம் கூற என்று இதை எழுதவில்லை. இப்பொது கூட எம்மால் முழுதாக முயன்றால் எமக்காக பிற சமூகத்தவரையும் பேசவைக்க முடியும். ஆப்கானிஸ்தான் எல்லாருமே டலிபான்கள் என்று அமெரிக்கா ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கியது போல எம்மீதும் ஒரு தோற்றத்தை உண்டாக்காமல் தடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. இனி ஏனும் விழித்தெழுங்கள். இல்லாவிடில் எமது சமூகம் மட்டுமல்ல, எதிர் காலத்தில் உங்கள் பிள்ளைகள் கூட உங்கள் பெயரை இனிஷியலாக பயன்படுத்த யோசிப்பர்கள்

பின் குறிப்பு : இதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும். சாட்டிங் தவிர வெறு எதற்கும் இணையத்தை உபயோகிக்காதவர்கள் நீங்கள். ஆனால் வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும். அதற்காகத்தான் இப்போதே இப்பதிவு. இதனை உங்கள் பெற்றோரோ இல்லை உறவினரோ வாசித்து உங்களுக்கு விளக்கட்டும் அல்லாவிட்டால் உங்களை ஒதுக்கி ஆவது வைக்கட்டும்
.